நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்களை பறித்துச் சென்ற கொடுமை
23.8.2023 அன்று ராமேசுவரத்தில் இருந்து 482 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக துப்பாக்கியைக் காட்டி எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்துக்கொண்டு படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோசப் என்பவரது படகை இலங்கை வீரர்கள் பிடித்தனர். அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் முனீஸ்வரன் காளிதாஸ், சக்தி, பாலா, அஜய், கரிகாலன், மாரி, ஜார்ஜ் ஆகியோரை கம்பு, கயிற்றால் கடுமையாக தாக்கினர். இதில் முனீஸ்வரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மற்ற மீனவர்கள் வலியால் அலறித் துடித்தனர்.
இதன்பின் இலங்கை வீரர்கள் எச்சரித்து திரும்பி சென்றனர்.நேற்று (24.8.2023) காலை மீனவர்கள் ராமேசுவரம் கரை திரும்பினர். காயமடைந்த முனீஸ்வரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார். அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது.
No comments:
Post a Comment