ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது!
ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது! பொதுத் தேர்தல்மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் மக்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
மக்களின் பிரதிநிதித்துவம்
உடனடியாகப் பறிக்கப்படக் கூடாது
ராகுல் காந்தியின் மோடி பற்றிய பழைய தேர்தல் பேச்சை எதிர்த்து குஜராத் பா.ஜ.க.வினர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், கீழமை நீதிமன்றத்தில் அவருக்கு அச் சட்டப் பிரிவுப்படி (இதற்குமுன் இம்மாதிரி அவதூறு (Non-cognizable) வழக்கில் இப்படி அதிகபட்ச தண்டனை வேறு யாருக்கும் வழங்கப்பட்டு இருக்காத நிலையில்) அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு தண்டனை தரப்பட்டது.
நீதிமன்றங்களுக்கு மேல்முறையீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு தண்டிக்கப்பட்டவர்களுக்கு உண்டு; அதுவரை காத்திருந்திருக்கலாம்; காரணம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியபடி - அவரைத் தேர்ந்தெடுத்த மக்களின் பிரதிநிதித்துவம் உடனடியாகப் பறிக்கப்படக் கூடாது என்ற கண்ணோட்டத்தைப்பற்றிக் கூட கவலைப்படாமல், அரசியல் வன்மத்துடன் 26 மணிநேரத்தில் பதவி பறிப்பு, அவர் குடியிருக்கும் டில்லி வீடு பறிப்பு முதலியவற்றை நடத்தினர்.
சட்டப்படி சரியானது, நியாயப்படி தேவையானது!
இப்போது உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனைக்கு நியாயமான காரணம் ஏதும் சொல்லப்பட வில்லை என்று சுட்டிக்காட்டி, அவரது தண்டனையை நிறுத்தி வைத்து (Stayகொடுத்து) நடப்பு நாடாளுமன்றத் தொடரிலும் அவர் கலந்துகொள்ளலாம் என்று தெளிவுபடுத்திய நிலையில், நாடாளு மன்றத்தில் மிக முக்கியமாக - பா.ஜ.க. ஆட்சியின்மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து, அது மக்களவைத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வருகிற 8 ஆம் தேதி (நாளை) முதல் மூன்று நாள் விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது;
இந்நிலையில், மக்களவைத் தலைவருக்கு உச்சநீதிமன்ற ஆணையைக் கொடுத்து, காங்கிரஸ் தலைவர், கடிதம் எழுதிவிட்ட நிலையில், ராகுல் காந்தி பதவி நீக்கத்தை ரத்து செய்து, அவரை விவாதத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்கு இவ்வளவு காலதாமதம் செய்திருக்கிறார்கள்.
ஜனநாயகமும், உச்சநீதிமன்ற ஆணையும் முறைப்படி மதிக்கப்படவேண்டாமா?
ஜனநாயக நெறிமுறைகளை, அரசியல் நாகரிகப் பண்புகளின் குரல்வளையை நெரிக்கலாமா?
தங்களுக்கு ‘புல்டோசர்' மெஜாரிட்டி இருக்கிறது - மக்களவையில் என்பதற்காக, ஜனநாயக நெறிமுறைகளை, அரசியல் நாகரிகப் பண்புகளின் குரல்வளையை நெரிக்கலாமா?
மக்கள் முட்டாள்கள் அல்ல; எதையும் அமைதியாக கவனித்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரத்தில், உரியவர்களுக்கான முத்திரை குத்தி, வெளியேற்றவேண்டியவர்களை பொதுத் தேர்தல்மூலம் வீட்டிற்கு அனுப்புவார்கள் - அதற்குக் கருநாடக மாநில தேர்தல் முடிவே - அண்மைக்கால அரசியல் உதாரணம்!
மக்கள் மட்டுமல்ல, உலகமும் இந்திய ஜனநாயகக் கூத்துகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.
மக்களவை செயலகம் அறிவிப்பு
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, ராகுல் காந்தியை பல நாடுகளுக்கு போகாமலேயே உலக ஒளி பாய்ந்த தலைவராக - இதன்மூலம் ஆக்கிவிட்டனர்!
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி நீக்கத்தை ரத்து செய்து, அவர் வயநாடு எம்.பி.,யாக தொடருவார் என்றும் மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
ஜனநாயகத்தின் மாண்பு உச்சநீதிமன்றத்தால் இப்பொழுது காப்பாற்றப்பட்டுள்ளது! ஜனநாயகம் பிழைத்தது!!
7.8.2023
No comments:
Post a Comment