காவல்துறையில் பெண்களை பணியில் எடுப்பதற்கான விளம்பரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்துகின்ற உத்தரவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ளது. அரியானா பா.ஜ.க. அரசின் உத்தரவு மூர்க்கத்தனமானது. பெண்களின் கண்ணியத்தை மீறுகிறது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அரியானா பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்பக அளவு குறித்த பாஜக அரசின் உத்தரவைக் குறித்தே உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மிகவும் பிற்போக்கான செயல்முறைகளையே தொடர்ந்து எடுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் அவதூறு பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டுவரும் நிலையில், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கையிலும் பாஜக மும்முரமாக இருக்கிறது.
அந்த வகையில், பாஜக ஆளும் அரியானாவில் வனத் துறை வேலைவாய்ப்புகளில் உடல் தகுதி அளவுகோலாக பெண்களின் மார்பளவு கொடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரியானா பணியாளர் தேர்வு ஆணையம் சரகர், துணை சரகர் மற்றும் வனவர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பில், பெண் தேர்வர்களின் மார்பளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற விதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் மார்பகங்கள் விரியாத நிலையில் 74 செ.மீ. அளவும், விரிந்த நிலையில் 79 செ.மீ. அளவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையான நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், மார்பக அளவு விவகாரம் குறித்து மூன்று பெண்கள் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மார்பகம் மற்றும் மார்பகத்தின் விரிவாக்கம் உடற்தகுதி தேர்வுக்கு அவசியமாக இருக்கவேண்டியதில்லை. அப்படியே பரிந்துரைத்தாலும் அது ஒரு பெண்ணின் தனியுரிமையில் தலையிடுவதாகவே இருக்கும்.
இத்தகைய உடற் தகுதி அளவீடுகள் தன்னிச்சையானது, மற்றும் மூர்க்கத்தனமானது! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பெண்களின் கண்ணியம், தனியுரிமையை இது மீறுவதாக இருக்கிறது. வனக்காவலர் பணியாக இருந் தாலும், வேறு எந்த வேலையாக இருந்தாலும் மனிதாபிமானமற்ற இந்த விதிகளை அரசு மறு ஆய்வு செய்யவேண்டும். காவல்துறை போன்ற வேலைகளுக்கு இதுபோன்ற அளவீடுகள் தேவையற்றது" என்று கூறியுள்ளனர்.
பொதுவாக பிஜேபி என்றாலே அது ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவம் - ஹிந்துத்துவாவை தன் குருதியோடு வரித்துக் கொண்ட பாசிச அமைப்பு. ஹிந்துத்துவா கோட்பாட்டில் பெண் என்பவள் ஓர் அஃறிணை ஜடப் பொருள்.
"பெண் என்றால் விபச்சார தோஷம் உடையவள்" என்பது கீழ்த்தர புத்தியின் ஏகபோகம். அதனால் தான் பெண்களின் மார்பை எல்லாம் அளந்து பார்க்கத் துடிக்கிறது.
எல்லா மாநிலங்களிலும், காவல்துறைக்கும், வனத் துறைக்கும் பெண்கள் பணிக்கு எடுக்கப்படுகிறார்கள்.
அங்கெல்லாம் பெண்களின் மார்பளவு பற்றி பிரச்சினை எழாத நிலையில் பிஜேபி ஆளும் அரியானா மாநிலத்தில் மட்டும் இந்தக் கழுதைக் கூத்து ஏன்?
டில்லியில் காவிக் கும்பல் பிரமுகரான - நைனோ ஹிந்துசேர் (ஹிந்து விழிப்புணர்வு சிங்கம்) என்ற அமைப்பின் தலைவர் தைனோசிங் என்பவர் "ஹிந்து விழிப்புணர்வு பெறுவது எப்படி?" என்று பொருள்படும் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: "இன்று பல்வேறு பிரச்சினைகள் வெடித்துக் கிளம்புவதற்கே முக்கிய காரணம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுவதுதான்" என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சொல்லவில்லையா? "கணவனைவிட மனைவி அதிகம் படித்து அதிகம் ஊதியம் வாங்குவதால் கணவன் சொல்லுக்கு அடங்குவதில்லை. அத்தகைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும்" என்று கூறவில்லையா?
இந்திய நாட்டுப் பெண்கள் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்குப் பாடம் கற்பிக்கட்டும்! அது பெண்ணுரிமைக்கான பெரு வெற்றியாகும்!
No comments:
Post a Comment