நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-இல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் அவர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜரானார். மகளிர் கூட்டமைப்பினரின் அந்த மனுவில், பசுப் பாதுகாப்பு - கும்பல் வன்முறை ஆகியனவற்றில் இருந்து சிறுபான்மையினர் உள்பட பொதுமக்கள் உயிரை, உடைமைகளைப் பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபோன்ற நிகழ்வுகள் குறையவில்லை. தெஹ்சீன் பூனாவாலா வழக்கில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றிய அரசு மற்றும் மகாராட்டிரா, ஒடிசா, பீகார் உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு விளக்கம் கோரி தாக்கீது அனுப்பியது.
பசுப்பாதுகாவலர் படை என்ற அமைப்பு ஒன்று மாடுகளை சிகிச்சைக்கும், விற்பதற்கும் அழைத்துச்செல்லும் போது அப்படி அழைத்துச்செல்பவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்களை அடித்துக்கொலை செய்யும் வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கே திருப்பி அனுப்புவதற்கு எதிராக கபில் சிபல் வாதிட்டார். அவர் வாதிடுகையில், "உச்ச நீதிமன்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தின் பார்வைக்கே திருப்பி அனுப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது.
2015 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் முகமது அக்லாக் என்பவர் மாட்டிறைச்சி வதந்தியால் படுகொலை செய்யப்பட்டார். அப்போதுதான் முதல் முதலாக மாட்டிறைச்சிப் படுகொலை வெளியே வந்தது, உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பசுநேசர்கள் என்ற பெயரில் திரியும் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துகொண்டு பசுவைக் கொண்டுசெல்லும் வாகனங்களை வழிமறித்து, வண்டி ஓட்டுபவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்களை அடித்தே கொல்லும் கொடூரம் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தனியார் குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிபரத்தின்படி 2019 ஆம் ஆண்டுவரை பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் 1200 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப் படுகிறது.
இது தொடர்பாக தெஹசின் பூனாவாலா என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளை கடுமையாக கண்டித்திருந்தது, பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் எப்படி சில சமூகவிரோதிகள் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து பிற மதத்தவரை கொலை செய்ய முடியும் என்பதுதான் யதார்த்தம்! மாநில அரசுகள் இதன் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிறப்பித்த உத்தரவையும் மீறி கும்பல் வன்முறைகள் நடக்கின்றன. அதில் சிறுபான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் என்ன தான் தீர்வு. நான் எங்கே செல்வேன்" என்றார்.
கடந்த முறை கும்பல் வன்முறை வழக்கு விசாரணையின்போதும் உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறே கூறியது. ஆனால் மாநிலங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதனையடுத்து உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு தாக்கீது அனுப்பியது.
2018-இல் உத்தரவு சொல்வது என்ன? கடந்த 2018-இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பசுப் பாதுகாவலர்களால் சிறுபான்மையினர் பாதிக்கப் படுவதைத் தடுக்க அரசு குற்ற வாளிகளை அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், தெஹ்சீன் பூனாவாலா எதிர் இந்திய அரசு (2018) வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல் படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் 6 மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு தாக்கீது அனுப்பியுள்ளது.
மதவெறியர்களுக்கு முன்பு எந்த அதிகாரம் படைத்த அமைப்பானாலும் ஒன்றும் செய்ய முடியாது.
மசூதியை இடித்தவர்களுக்கே ராமன் கோயில் கட்ட அனுமதி வழங்கிய நாடாயிற்றே! வெட்கக் கேடு!
No comments:
Post a Comment