கிருட்டினகிரியில் நேற்று (28.8.2023) முற்பகலில் நடைபெற்ற முப்பெரும் விழா - கிருட்டினகிரி வரலாற்றில் என்றென்றும் பேசு பொருள் என்று கூறும் அளவுக்கு வெற்றிப் பதாகை விண்ணில் பறந்தது.பேரிடியுமாக முரசு கொட்டியது.
கார்னேசன் அறக்கட்டளை சார்பாக 99 ஆண்டுகளுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு கொடையாக அளிக்கப்பட்ட இடத்தில் மூன்றடுக்கு பெரியார் மய்யம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
மய்யத்தை 'தகைசால் தமிழர்' தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்கள் திறந்து வைக்க, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மார்பளவு வெண்கலச் சிலையை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்தார். அண்ணல் அம்பேத்கர் நூல் நிலையம், ஆசிரியர் கி. வீரமணி படிப்பகம் ஆகியவற்றை முறையே அமைச்சர் பெருமக்கள் அர. சக்கரபாணி, ஆர். காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அன்னை மணியம்மையார் அரங்கத்தை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் அனைவரும், தந்தை பெரியாரால் நம்மினம் பெற்ற உரிமைகளை எடுத்துக்காட்டியும், அய்யா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கத்தை வலிவோடு, பொலிவோடு நடத்திக் காட்டும் தமிழர் தலைவரின் ஆற்றலையும், செயல் திறனையும் வெகுவாகப் பாராட்டினர்.
"இந்த மய்யம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமானதுதான் என்றாலும் இப்பகுதி மக்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடியதாகும். அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களின் பொறுப்பும் கடமையும்" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்ட வரிகள் முக்கியமானவை.
அய்.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளில் நம் இனத்துப் பிள்ளைகள் வெற்றி பெறுவதற்குத் தேவைப்பட்டால் இப் பெரியார் மய்யத்தில் வகுப்புகளை நடத்தவும் ஏற்பாடு செய்வதாகவும் அவர் அறிவித்தார். இந்த வாய்ப்பை கிருட்டினகிரி மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக!
பொதுவாக திராவிட இயக்கம் என்பது அறிவுப் பிரச்சாரத்தால் வளர்ந்தது. ஏடுகளாலும் மேடைப் பேச்சு களாலும் மக்கள் மத்தியில் மன மாற்றத்தை ஏற்படுத்தியது.
இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித் தன்மை யாகக் கோலோச்சுகிறது - சுடரொளியாக ஜொலிக்கிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும்தானே!
ஒரு கால கட்டத்தில் திராவிட இயக்கத்தால் நூற்றுக் கணக்கான இதழ்கள் நடத்தப்பட்டன; திண்ணைகள் எல்லாம் படிப்பகங்களாகப் பளிச்சிட்டன.
அவைதான் வாலிபர்களுக்கு அறிவு விருந்தைப் படைத்தன! இனவுணர்வும், மொழி உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும், பாலியல் சமத்துவமும், சமத்துவ - சமதர்ம கோட்பாட்டுச் சிந்தனைகளும் தமிழ் மண்ணில் வேரூன்றி வளர்ந்து பயன்கள் எனும் பழங்களாகக் காய்த்துத் தொங்குகின்றன என்றால் அவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இத்தகைய அடிப்படையான கட்டமைப்புகள் தான்.
பேச்சாலும், எழுத்தாலும் வளர்ந்த கழகம் - அந்த வகையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், திராவிடர் கழகமும் நாடெங்கும் படிப்பகங்களை உருவாக்கி வருகின்றன. அதனை இயக்குபவர்களும், பயனாளிகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினால் வளரும் தலைமுறை யினர் வளமாக வளர்வார்கள். ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட - சமூக உரிமைகள் நிராகரிக்கப்பட்ட நம்மின மக்கள் தன்மான உணர்வு பெற வேண்டாமா?
இன்னும் எவ்வளவு காலத்திற்குக் குறட்டை விடுவது - அவர்கள் விழிப்புணர்வு பெற படிப்பகங்களும், நூல் நிலையங்களுமான அறிவு விளக்குகள் எங்கும் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும்.
இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்தில் தமிழ்நாடு விழிப்புணர்வு மிக்க மாநிலமாக மிளிர்வதற்கு ஆணி வேராக இருப்பது நமது திராவிட இயக்கமே.
வளர்ந்து வரும் கல்வியின் ஆணி வேரை வெட்டி எறிய 'நீட்' என்றும், புதிய கல்வி என்றும், விஸ்வகர்மா யோஜனா என்றும் புதிய புதிய வருணசிரம அவதாரம் எடுத்து ஒன்றிய பிஜேபி பாசிச அரசு வலை வீசுகிறது.
இந்த வலையை அறுத்து கரை சேர திராவிட இயக்கச் சிந்தனைகள் இளைஞர்கள் மத்தியில் மேலும் சென்றடைய ஒல்லும் வகையால் உழைக்க வேண்டும் - திட்டமிட வேண்டும்.
இதனை கிருட்டினகிரி மாவட்ட கழகத் தோழர்கள் காலத்தாற் மேற்கொண்டு கடனாற்றி இருக்கிறார்கள்.
எத்தனை எத்தனையோ இடையூறுகள் - எப்பொழுதும் இறுதி வெற்றி கருஞ்சட்டைச் சிங்கக் கூட்டத்துக்குத்தானே!
அதனைக் கிருட்டினகிரியிலும் கண்டோம், பல மாதங்களாக இரவு -பகல் பாராமல் உழைப்பு- உழைப்பு - என்ற இரத்த வியர்வையைக் கொட்டி சீராய்ந்த பெரியார் மய்யத்தை உருவாக்கிய உழைப்பின் தேனீக்களுக்குப் பாராட்டு முத்தங்கள்!
பல்வகையிலும் நிதி உதவி முதற்கொண்டு உதவிக்கரம் நீட்டிய பெரு மக்களின் விரிந்த உள்ளங்களுக்கு நன்றிப் பூச் செண்டுகள்!
காலத்தை வென்று களப் பணிகளை நடத்தி வெற்றி பெறும் ஒரே சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகம். அதில் நாம் இருக்கிறோம் என்பதுதான் எத்துணைப் பெருமை! அதற்குப் பல்வேறு தரப்பினரும் தோள் கொடுப்பதும் எத்தகைய நன்றிக் கடனாற்றும் நனிப் பெருமை!
சனாதனமே சிரிக்காதே, கருஞ்சட்டைப்படை உண்டு மறக்காதே!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!!
No comments:
Post a Comment