38 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு வறுமைக் குறியீடு அறிக்கையில் அம்பலம்
புதுடில்லி, ஆக.20- பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் கிராமப்புறத்தில் 44.45 விழுக் காட்டினரும், நகர்ப்புறங்களில் 28.97 விழுக்காட்டினரும் சரா சரியாக மாநில மக்கள் தொகை யில் 38 விழுக்காட்டுக்கும் மேற் பட்டவர்கள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட் டுள்ளதாக ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள வறுமைக்குறியீடு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் அமைப்பு, தேசிய பன்முக வறுமை குறியீடு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஊட்டச்சத்து குறைபாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், குஜராத் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அந்த மாநிலத்தில் கிராமப் புறங்களில் 44.45 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களில் 28.97 விழுக்காட்டினரும் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது குஜராத் மாநில மொத்த மக்கள் தொகையில் 38.09 விழுக்காடு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், எடை குறைவாக உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் 4ஆவது இடத்தில் இருப்பதாகவும், அந்த மாநிலத்தில் 39 விழுக்காடு சிறார்கள், தங்களது வயதுக்கு ஏற்றாற்போல இல்லாமல் உடல் எடை குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் நிட்டி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு வசதித் துறையிலும் குஜராத் மாநிலம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், குஜராத்தின் மொத்த மக்கள் தொகையில் 23.30 விழுக் காட்டினருக்கு வீட்டு வசதி இல்லை என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில் 35.52 விழுக்காட்டினருக்கு வீட்டு வசதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு, எதற்கெடுத்தாலும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் குஜராத்தை சுட்டிக்காட்டி குஜராத் மாடல் என்று கூறி வருகிறது. ஆனால், குஜராத்தோ பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு துறைகளில் பின்தங்கி இருப்பது நிட்டி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment