கவர்னர் பொன்மொழிகள் - ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

கவர்னர் பொன்மொழிகள் - ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாராட்டு

ஆம், வருஷந்தோறும் நவம்பர் 30ஆம் தேதி, இந்திய மாகாணத் தலைநகரங்களில் நடைபெறும் செயின்ட் ஆண்ட்ரூஸ் விருந்தின்போது, அந்தந்த கவர்னர்கள் அந்தந்த மாகாண அரசியல் நிலைமையைப் பற்றி பிரசங்கம் செய்வது மரபு. அம்மரபுப்படி, சென்ற நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் விருந்தில் நமது கவர்னர் லார்டு எர்ஸ்கின் சென்னை மாகாண அரசியல் நிலைமையைப் பற்றிப் பேசினார். அப்பொழுது அவர் சில மறுக்க முடியாத உண்மைகளைக் கூறியது சென்னை தேசியப் பத்திரிகைகளுக்கும், காங் கிரஸ் கந்தல் பத்திரிகைகளுக்கும் பெரிய வயிற்றெரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறது. நடு நிலைமை வகிக்க வேண் டிய கவர்னர், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து விட்டதாகவும் அப்பத்திரிகைகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், 1930ஆம் வருஷ பொதுத் தேர்தலுக்கு முன் லார்டு கோஷன் செய்த பாரபட்சப் பிரசங்கத்தை ஆதரித்த சென்னை தேசியப் பத்திரிகைகள், இன்று லார்டு எர்ஸ்கின் பிரசங்கத்தை ஆட்சேபிப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. சர்வ சமூக சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியை, அக்கட்சிக் கொள்கையினால் பாதகமடைந்த ஏகபோக உரிமையாளர், வகுப்பு வாதக் கட்சியெனப் புரளி செய்ததை நம்பிய சுத்தாத்மா வான லார்டு கோஷன் வகுப்புவாதக் கட்சிகளால் நாட்டுக்கு நன்மை உண்டாகாதென 1930 தேர்தலுக்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். தப்பெண்ணத்தினால் கூறப்பட்ட அம்மொழிகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு தேசியப் பத்திரிகைகளும், தேசிய வீரர்களும் தென்னாட்டு மக்களை ஏமாற்ற முயன்றும் பலிக்கவில்லை. வகுப்புவாத ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று லார்டு கோஷனே கூறியிருப்பதாகத் தேர்தல் காலத்து ஜஸ்டிஸ் கட்சி எதிரிகள் விஷமப் பிரச்சாரம் செய்தனர். அத்தகைய சூழ்ச்சிப் பிரச்சாரத்தினால் ஜஸ்டிஸ் கட்சி யைக் கவிழ்த்து விடலாமென்றும் அவர்கள் நம்பினர். எனினும், அவர்கள் முயற்சி பலிக்கவில்லை ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறத் தான் செய்தது. ஆனால், அன்று லார்டு கோஷன், தப்பபிப்பிராயத்தினால் கூறிய மாதிரி லார்டு எர்ஸ்கின் இன்று எதுவும் கூறவில்லை. உள்ள தையே அவர் கூறியிருக்கிறார். வரப்போகும் சீர்திருத்தத் தைப் பற்றி அவர் பேசியபோது,

(1) “சென்னை மாகாண அனுபவத்தைக் கவனித் தால் மாண்ட்-போர்டு சீர்திருத்தம் செவ்வையாக அமல் நடத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது; அதை வெற்றிகர மாக நடத்தியவர் அதிகப்படியான பொறுப்புகளும், உரிமைகளும் பெற லாயக்குடையவர்களே.

(2) புத்திசாலித்தனமான - நேர்மையான அரசியல் நிருவாக விஷயமாக ஏனைய இந்திய மாகாணங்களுக்கு வழிகாட்டி, சென்ற 16 வருஷ காலமாக மாண்ட்-போர்டு சீர்திருத்தத்தை வெற்றியுடன் நடத்திய சென்னை மாகாணம்,  இரட்டையாட்சியை ஏற்கெனவே வெற்றிகர மாக நடத்தி வைத்தது போலவே வரப்போகும் சீர்திருத்தத் தையும் வெற்றிகரமாக நடத்தி வைக்குமென்பது நிச்சயம்.

(3) இந்த மாகாணத்தில் சென்ற 16 வருஷ காலத்தில் உருவாகி வந்திருக்கும் அய்தீகத்தைப் பின்பற்றி மேலும் கட்சிகள் நடந்தால் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு எள்ளத் தனையாவது பீதியே கிடையாது.’’ 

எனக் குறிப்பிட்டார். ஜஸ்டிஸ் கட்சியைக் குழி தோண்டிப் புதைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப் பவர்களுக்கு இது பிடிக்குமா? ஆகவே, கவர்னர் பிரசங் கத்தைப் பலவாறாகக் கண்டிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். கந்தல் பத்திரிகைகள் எப்படிக் கத்தினாலும் சரி, இரட்டை யாட்சியை வெற்றிகரமாக நடத்தி, சுயராஜ்யம் நடத்த இந்தியர்களுக்கு ஆற்றல் உண்டென சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிய பெருமை, ஜஸ்டிஸ்’ கட்சிக்கே உரியது. இந்திய அரசியலிலே முதன்முதலாகக் கட்சி முறையைப் புகுத்தி வெற்றிகரமாக நடத்திய கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியே! 

படேல் நிதிக்காக சென்னை கோக்கலே மண்டபத்தில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் ஜனாப் யாக்கூப் ஹாஸன் சேட்டே அதை ஒப்புக்கொண்டு பாராட்டிப் பேசியிருக் கிறார். காங்கிரஸ் பத்திரிகைகள் அவ்விஷயத்தைப் பிரசுரிக்கவில்லையாயினும் அன்று அங்கு விஜயம் செய்திருந்தவர்கள் அதைக் காதாரக் கேட்டிருக்கக்கூடும்; ஜனாப் யாக்கூப் ஹாஸன் சேட் கூறிய உண்மை மொழிகளைக் கேட்டு உள்ளூர நொந்திருக்கவும் கூடும். யார் பொய்ப் பிரச்சாரம் செய்தால் என்ன?  யார் மறைத்தால் என்ன? 

ஜஸ்டிஸ் கட்சியின் புகழை, திறமையை அரசியல் ஞானமுடையவர்கள் மறக்க மாட்டார்கள்.

இரட்டையாட்சியை ஜஸ்டிஸ் கட்சியார் வெற்றிகரமாக நடத்தி வைத்ததாக லார்டு எர்ஸ்கின் கூறியது ‘சுதேச மித்திரன்’ உள்ளத்தை அதிகமாகப் புண்படுத்திவிட்டது. ஆகவே, “ஜனங்களில் பெரும்பாலோர் விவசாயிகள். அவர்களுடைய கஷ்டத்தைப் பரிகரிக்க அரசியலைத் திருப்திகரமாக நடத்தி வைத்த கோஷ்டியினர் முயன் றனரா?  இல்லை. நிலவரி முறை பழைய சீர்கேடான நிலைமையிலேயே இன்னமும் இருந்து வருகிறது’’ என்றெல்லாம் குறும்புத்தனமாக எழுதுகிறது. ஆனால், நிலவரி விஷயம் மந்திரிமார் அதிகாரத்துக்குட்பட்டதல்ல வென்பதை ‘சுதேசமித்திரன்’ உணர்ந்திருந்தும், ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைக் குறை கூறுவது அதன் துவேஷ புத்தியையே காட்டுகிறது.

கட்சி முறையை நிலைநாட்டி, இரட்டையாட்சியை வெற்றிகரமாக நடத்தி, அதிகப்படியான பொறுப்புகளுக்குத் தன்னை லாயக்காக்கிக் கொண்டது ஜஸ்டிஸ் கட்சியே என எந்த மலை  ‘மேல் நின்று கூறவும் நாம் தயாராயிருக் கிறோம். இதர மாகாணங்களில் மந்திரிமார் இருந்துதான் வந்திருக்கிறார்கள் ; இரட்டையாட்சியும் அமல் நடத்தப் பட்டுத்தான் வந்திருக்கிறது. ஆனால், சென்னை யொழிந்த எந்த இந்திய மாகாணத்தும் கட்சி சம்பிரதாயம் ஏற்படுத் தப்படவே இல்லை. இதர மாகாணங்களில், செல்வாக்குடை யவர்கள் சிலரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டு குருடன் மாங்காய் எறிந்த மாதிரியே அரசியல் நடத்தி வந்திருக் கிறார்கள். காங்கிரஸ்காரருக்கும் இவ்வுண்மை தெரியும். அதனாலேயே ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்துவிட வேண்டு மென்று அவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். வட நாட்டில் நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரங் களில் பம்பாய் மந்திரிகளையோ, மத்திய மாகாண மந்திரிகளையோ, அய்க்கிய மாகாண மந்திரிகளையோ, வங்காள மந்திரிகளையோ, பாஞ்சால மந்திரிகளையோ ஒழிக்க வேண்டுமென்று எந்த காங்கிரஸ் வீரனாவது கூறுவதுண்டா? இல்லவே  இல்லை. ஏன்? அங்கே அரசியல் கட்சிகளே இல்லை; மந்திரிமார்தான் உண்டு. மந்திரிமார் ஒழிந்தால் அப்புறம் சூனியம்தான். 

சென்னை மாகாண நிலைமை அப்படி அல்ல. மந்திரி மார் போனாலும் கட்சி இருந்து கொண்டுதானிருக்கும். அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஒவ்வொரு காலத்துள் ஏற்படக் கூடிய அசதி ஜஸ்டிஸ் கட்சிக்கு இப்பொழுது ஏற்பட்டிருந்தாலும், ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து விட்ட தென்றோ,  ஒழியப் போகிறதென்றோ கூறுகிறவர்கள் உலகப் போக்கையறியாத பக்கா பைத்தியகாரரே யாவர். ஜஸ்டிஸ் கட்சிக்குத் தற்காலம் ஏற்பட்டிருக்கும் அசதிக்குக் காரணம் அதன்  கொள்கையோ, லட்சியமோ மோசமாக இருப்பதல்ல. நீண்ட நாள் அதிகாரப் பதவி வகிக்கும் கட்சி மீது பொதுஜனத் துவேஷம் ஏற்படுவது இயல்பு. சொந்தக் காரணங்களை முன்னிட்டு கட்சிக்குள்ளும் தப்பெண்ணங் களும்  பிரிவினைகளும் ஏற்படுவது சகஜம். கட்சியினால் நலம் பெறாதவர்கள் இதர கட்சிகளில் புகுந்து நலம் பெற விழைவதும் சர்வ சாதாரணமே. எனவே, ஜஸ்டிஸ் கட்சி யின் தற்கால நிலைமையைப் பார்த்து எவரும் மனந்தளர வேண்டியதில்லை; அஞ்ச வேண்டியதில்லை. ஜஸ்டிஸ் கட்சி ஒருநாளும் தளராது; அழியாது. ஏன்? அதன் கொள்கை அவ்வளவு உத்தமமானது: லட்சியம் நித்திய மானது.

- ‘விடுதலை’ - 2.12.1936


No comments:

Post a Comment