இப்பொழுதெல்லாம் ஜாதி பார்ப்பது இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

இப்பொழுதெல்லாம் ஜாதி பார்ப்பது இல்லையா?

அமெரிக்காவில் இருந்து வந்த சிறீராக் என்ற புல்லாங்குழல் வாசிக்கும் இசைக் கலைஞர், ஜாதி ரீதியான ஒடுக்கு முறையை சந்தித்ததாகவும், 2023ஆம் ஆண்டிலும், திறமையை விட ஜாதி மற்றும் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உள்ளது வேதனை அளிப்பதாகவும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞர் சிறீராக். இவர் பதிவிட்ட முகநூல் பதிவு தற்போது முக்கிய பேசுபொருளாகி உள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பரதநாட்டிய பெண் கலைஞர் மற்றும் கலைமாமணி விருது பெற்றவர் - அவரது மாண வர்களின் அரங்கேற்ற நிகழ்வில் சிறீராக் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பை  பெற்றுள்ளார். கருநாடகாவின் வெவ்வேறு பகுதிகளில் 2 அரங்கேற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த வாய்ப்பு கிடைத்த போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக சிறீராக் முகநூல் பதிவில் கூறியுள்ளார். ஆனால் அவருடன் பணியாற்றும் போது, இதற்கு நேர்மாறாக  வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

சிறீராக்கிடம் அந்தப் பெண் நடனக் கலைஞர்  அவரை முதலில் சந்தித்தபோது, ’நீங்கள் பிராமணர்தானே' என்றார். "நான் இல்லை, எனது பெற்றோர்கள் அமெரிக்காவிலேயே இருந்ததால் எனது ஜாதி குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் நான் பிராமணர் இல்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும்" என்று அவர் கூறியதும் அவரை அழைத்த அந்தப் பெண் கலைஞர் மிகவும் ஏமாற்றமும், வெறுப்பும் அடைந்துள்ளார். மேலும், வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ளும்படியும் அவரது வெறுப்பு நடத்தைகள் அமைந்தன. 

 அதன் பிறகு அந்த புல்லாங்குழல் இசைக்கலைஞருக்கு தங்கும் இடம்கூட தனித்து வழங்கப்பட்டது. அவரே உணவுகளை வரவழைத்துக் கொள்ள வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டார். பார்ப்பனக் கலைஞர்கள் இருக்கும் பகுதிக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கென்று ஒதுக்கப் பட்ட விடுதி வேறு; அவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்த பிறகு அவரது உடைமைகள் தனித்து வைக்கப்பட்டன, வெளிப் படையாகவே ஜாதிய ஒடுக்குமுறை வெளிப்பட்டதாக சிறீராக் கூறியுள்ளார். 

மங்களூரில் நடைபெற்ற அரங்கேற்ற நிகழ்வில், சிறீராக் நன்றாக வாசித்த போதும், அவர் நீக்கப்பட்டதாக  அவரது குழுவினர் குறுஞ்செய்தி அனுப்பினர். அவருக்குப் பதிலாக வேறொரு புல்லாங்குழல் இசைக்கலைஞர் நியமிக்கப்பட்டதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இதற்குக் காரணமாக அரங்கேற்ற நிகழ்வுக்கான பயிற்சி நேரத்தில், சிறீராக் சரியான ஸ்ருதியில் வாசிக்கவில்லை என்று அப்பெண் கலைஞர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மற்ற இசைக் கலைஞர்களிடம் சிறீராக் கேட்டபோது, அவர் சரியாக வாசித்ததாகவே அவர்கள்  கூறி யுள்ளனர். ஆனால் அந்தப் பார்ப்பனப் பெண் கலைஞர் சிறீராக் கின் இசைத் திறமையை அவமதித்துள்ளார். இந்நிலையில் இவரைப் போன்று வேறொரு மிருதங்கம் வாசிக்கும் இசைக் கலைஞரையும் ஜாதி ரீதியாக இழிவாக நடத்தியதாக சிறீராக் கூறியுள்ளார். 

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள அவரை முதல் நாளிலேயே, அனைவர் முன்னிலையிலும் வாசிக்க வேண்டாம் என்று அவமதித்து, அப்பெண் கலைஞர்  திருப்பி அனுப்பி உள்ளார். மிருதங்கம் வாசிக்கும் மிகவும் குறைந்த வயது உடைய அந்த  இசைக்கலைஞர் அனைவரின் முன்பும், மனம் உடைந்து அழும் நிலைக்குச் சென்றார்.   மேலும் "2023ஆம் ஆண்டிலும்கூட , திறமையைவிட ஜாதி மற்றும் நிறத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைக்கு எதிராக நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதுபோன்ற கலைஞர்களுக்கு, கலைமாமணி போன்ற  உயரிய விருது கிடைத்திருப்பது , கலைமாமணி விருதுக்குக் கிடைத்த அவமானமாகக் கருதுகிறேன்" என்று சிறீராக் முகநூல் பதிவில்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது முகநூல் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரு கிறது.

மேற்கண்ட தகவல்கள் தெரிவிப்பது என்ன? கலை யிலும் பார்ப்பனர்கள் ஜாதி  பார்க்கிறார்கள் என்பது  விளங்க வில்லையா? திருவையாறில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற "தியாக பிரம்மம்" உற்சவத்தில் இசையரசு தண்டபாணி தேசிகர் "சித்தி விநாயகனே" என்று தொடங்கும் தமிழ் பாடல் பாடிய காரணத்திற்காக சன்னிதானம் தீட்டாகி விட்டது என்று கூறி அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் பாட மறுத்த வரலாறு தெரியுமா? அந்த சன்னிதானம் அவர்களின் சாஸ்திரப்படி சுத்திகரிக்கப்பட்ட பின்னர் தான் அவர்  பாடினார் என்பது கவனிக்கத் தகுந்தது. அது குறித்து "குடிஅரசு" அலுவலகத்தில் அப்பொழுது பணியாற்றிய கலைஞர் அவர்கள் "தீட்டாயிடுத்து" என்ற தலைப்பில் (9.2.1946) ஒரு கட்டுரை எழுதியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறோம் பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் திருந்தி விட்டார்கள் என்று கருதுகின்றவர்கள் இப்பொழுதாவது சிந்திக்கும் திறன் இருந்தால் சிந்தித்துப் பார்க்கட்டும்.

No comments:

Post a Comment