மூவரும் "தமிழர்கள்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 28, 2023

மூவரும் "தமிழர்கள்!"

"அம்பேத்கரின் பெருமை - அவர் இந்தியாவிற்காக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் என்பதே. அவர் மராட்டியர் என்பதால் மட்டுமல்ல. படேலின் பெருமை  - அவர் சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை வலிமைப்படுத்தினார் என்பதே. அவர் குஜராத்தி என்பதால் மட்டுமல்ல. சுபாஷ்போசின் பெருமை - இந்தியாவிற்காகப் படை திரட்டினார் என்பதே. அவர் வங்காளி என்பதால் அல்ல. வீர முத்துவேல் உள்பட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பெருமை -  அவர்கள் இந்திய விண்கலத்தை நிலவில் இறக்கி வரலாற்று சாதனை படைத்தார்கள் என்பதால் ஏற்பட்டது அவர்கள் எந்த மாநிலத்தவர்கள் என்பதால் அல்ல. இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்"

இப்படி சமூக வலைதளத்தில் எழுதி இருப்பவர் வேறுயாருமல்ல திருவாளர் மாலன்தான். இதனை ஏன் இப்படி சொல்லுகிறார்?

தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக முடிந்தது. இதற்குக் காரணமான மூன்று தமிழர்களையும் பாராட்டுகிறோம்" என்று கூறி விட்டாராம். 

முதன் முதலில் நிலவில் தென் துருவத்தில் இறங்கியது என்பது உலக சாதனை ஆகி விட்டதே!

பொறுக்குமா பூணூலா ருக்கு - முதலமைச்சர் "தமிழர்கள்" என்று மூன்று பேர்களையும் குறிப்பிட்டு விட்டாராம்! உடனே வியர்த்து விட்டது இந்தக் குல்லூக பட்டர்களுக்கு.

தமிழன் என்றாலும் சரி, தமிழ் என்று சொன்னாலும் சரி இவர்களின் குருதி கொதி நிலைக்கு எகிறி விடும்!

ஒன்றை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்பதற்கான அடையாளம்தான் இது. தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்ளும் வெறித்தனம் இதற்குள் அடங்கி இருக்கிறது!

எப்படி எப்படி எல்லாம் வருகிறார் திருவாளர் மாலன். அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரில் ஆரம்பித்து சுபாஷ் சந்திரபோஸ் வரை சாட்சிக்கு அழைக்கிறார். அவர்கள் எல்லாம் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம் என்று எழுதுகிறார்.

இவர் - தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றியபோது எந்த உணர்வோடு இருந்திருப்பார் என்பதைக் கவனமாக எண்ணிப் பாருங்கள்.

தங்களுக்கென்று சொல்லிக் கொள்வதற்கு நாடு இல்லாதவர்களுக்கு நாடும் மொழியும் உள்ளவர்களைக் கண்டால் குமட்டுகிறது குடைகிறது.

திரு.மாலனுக்கு அந்த இடத்திலேயே பதிலடி கொடுத்திருக்கிறார் திரு. சிற்பி பால சுப்பிரமணியம்.

"தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொண்டால் உங்களுக்கு நேர்ந்த இழப்பு என்னவோ? நான் முதலில் தமிழன், பிறகு தான் இந்தியன்" என்று பளார் என்று அறைந்ததுபோல் பதிலடி கொடுத்திருக்கிறார். 

இந்த மூன்று தமிழர்களும் அடித்தட்டு நிலையில் அரசு பள்ளிகளில் படித்த தமிழர்கள்- அதுவும் இந்தத் திட்டக் குழுவின் இயக்குநர் வீரமுத்துவேல் சாதாரண பள்ளியில் தமிழ் வழியில் படித்து பாலிடெக்னிக் முடித்து இந்த நிலைக்கு வந்து விட்டவராயிற்றே!

வாயிலும், வயிற்றிலும் அவாள்கள் நன்றாகவே அடித்துக் கொள்ளட்டும்! 

-  மயிலாடன்


No comments:

Post a Comment