மிதக்கும் நூலகம் : வியக்கும் செயல் திறன்! (1)
பட்டூரி நாகபூஷணம்
ஆகஸ்டு முதல் நாள் வெளியாகியுள்ள புதிய புத்தகம் பேசுது இதழில் அருமை ஆசிரியர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எழுதிய கட்டுரை மிதக்கும் நூலகம் பற்றிய அரிய தகவல்கள் அனைவரும் அறிய வேண்டியதாகும் என்பதால் அதை இரண்டு தொடராக வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
படித்தால் மட்டும் போதாது; பகிர்ந்து மகிழவும் வேண்டும் அல்லவா?
அதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்
புதிய பகுத்தறிவுப் பண்பாடு!
அப்படியே வெளியிடுவது வியக்கத்தக்க இந்த சாதனையை!
மிதக்கும் நூலகம்
"படகு நூலகங்கள் பற்றி நமக்குத் தமிழில் முதலில் எழுதியவர் தோழர் சிங்காரவேலர். மகா கவிசுப்பிரமணிய பாரதி நடத்திய யங்- இண்டியா இதழ் பற்றி ஒரு தனிக்கட்டுரையில் குறிப்பிடும் அவர் "அது ஆந்திராவில் விஜயவாடா படகு நூலகங்கள் வரை பிரபலமாக வாசிக்கப்படுகிறது" என்று ஒரு வரி எழுதுகிறார். இக்கட்டுரை 1941இல் எழுதப்பட்டது. இதை நான் வாசித்தது. சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 150ஆவது பிறப்பு கொண்டாட்டத்தின் (2011) ஒரு பகுதியாகச் சிறப்பு மலர்க் கட்டுரைக்காகத்தான் அதிலும் சிந்தனைச் சிற்பியைக் குறித்த புரட்சிக் கவி பாரதி தாசனின் எழுச்சிப் பதிவு தூக்கத்திலும் நினைவு வருவது எனக்கு.. அது இப்படிப் போகும்..
சிங்கார வேலனைப் போல
எங்கேனும் கண்டதுண்டோ? என்று தொடங்கும்
பொங்கிய சீர்திருத்தம்
பொலிந்ததும் அவனால்.
பொய்புரட்டு அறியாமை
பொசிந்ததும் அவனால்.... என்று தொடரும்...
கூடின அறிவியல்
அரசியல் அவனால் என்பார் பாரதிதாசன்.
கூடவே வாசிப்பு.. புயலாய் வீசியது அவனால்! புத்தக புரட்சி புலர்ந்ததும் அவனால்! என்றெல்லாம் சேர்த்துக் கொண்டே போவேன். 1946இல் தனது 84ஆவது வயதில், இறந்து போவதற்குச் சில நாட்கள் முன்பு தான் சேகரித்து வைத்திருந்த 20000 அரிய புத்தகங்களைப் பற்றி அவர் கவலை கொண்டார். அதில் பெரும்பாலானவற்றைக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக நூலகத்திற்கே கொடுத்தார். ஓர் ஆயிரம் ஆங்கில நூல்களை அவர் தனது தோழரான ஆந்திராவைச் சேர்ந்த பட்டூரி நாகபூஷணம் என்பவருக்கு அளித்ததாக ஒரு குறிப்பு வருகிறது.
பட்டூரி நாகபூஷணம் ஆந்திர நூலக இயக்கத்தின் பிதாமகர் என்று போற்றப்படுபவர் புத்தக வாசிப்பே தேசத் துரோகம் என்று பிரித் தானிய காலனிய அரசு கொடுமை சட்டங்களை ஏவிய அந்த 1930களில் ஒரு பிரமாண்ட வாசிப்பு இயக்கத்தை நடத்தியவர் தோழர் பட்டூரி. அவ்வப்போது தோழர் சிங்கார வேலரை அவர் சந்தித்ததுண்டு. அதற்கு அடிப்படைக் காரணம் சென்னையின் லயோலா கல்லூரிதான். தோழர் பட்டூரி பிறந்தது ஆந்திராவின் குண்டூர் அருகே தெனாலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில், தனது ஆரம்பக் கல்வியைப் பெடாலம், நிதுபுரோலு போன்ற கிராமப்புறங்களில் முடித்து விட்டுச் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பில் இணைகிறார். தீவிரமான வாசிப்பு குற்றால அருவி போல கொட்டிய சிங்காரவேலரின் தோழமை குடையின் கீழே சோசலிச சிந்தனையைப் போற்றிய எழுச்சிகர இளைஞர்களில் ஒருவராக அங்கே மிளிர்கிறார் தோழர் பட்டூரி நாகபூஷணம். புத்தகப் புரட்சியாளர்கள் என்று பட்டப்பெயர் பெற்ற அந்தக் காலத்தின் காங்கிரஸ் மகாசபையின் தனிப்படை அது. மகாத்மா காந்தி, பட்டேல் என்று யாவரையும் அவர்கள் எதிரிலேயே விமர்சனம் செய்யும் மகா தைரியசாலிகள். நேரு, ஆசாத் என்று பலரும் புதிய புத்தகங்கள் வாசிக்கக் கேட்டு இந்தக் கூட்டத்திடம்தான் வருவார்கள். பெர்ட்ரண்ட் ரஸல், சார்லஸ்டார்வின் இமானுவேல் காண்ட், காரல்மார்க்ஸ், எமர்சன் என்று கரைத்துக் குடித்த இளைஞர் படை அது. 1972இல் பெங்கால்- நாக்பூர் ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் ஒரு பெரிய திருப்புமுனை. அதன் தொடர்ச்சியாக 1928 தென்னிந்திய ரயில்வேத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடந்தபோது சிங்காரவேலருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. தொடர் சட்டப்போராட்டம் காரணமாக 1930இல் அவர் விடுதலை செய்யப்படுகிறார். அன்றைய தினம் சென்னை மத்திய சிறைச்சாலை வாயிலில் நின்று அவரை வரவேற்ற எழுச்சிமிக்க இளைஞர்களில் ஒருவர் தோழர் பட்டூரி நாக பூசணம்.
தந்தை பெரியாரோடு இணைந்து குடியாசு இதழில் எழுச்சிமிக்க கட்டுரைகளை எழுதி திருவல்லிக்கேணி பகுனுதிமாட்டான் குப்பத்தில் மீனவச் சங்கங்களை ஒருங்கிணைத்து பொது உடைமைக் கட்சி எனும் அமைப்பைச் சிங்கார வேலர் தொடங்கிய நாட்களில் பட்டூரி நாக பூஷணம் ஆந்திராவின் பாடாபாலெம் பகுதியில் சேவா ஷராம.வாணி மந்திர் என்கிற சமூக சீர்திருத்தச் சங்கத்தைத் தொடங்குகிறார். அதன் வழியே 600 புத்தகங்களைக் கொண்டு தொடங்கப் பட்டதுதான் கிருஷ்ணா நதி- பேடாவடலபுடி- கொல்லூர்- படகு நூலக சேவை. இது ஆரம்ப காலத்தில் அரசாங்கம் அறியாத, இருளில் பயணிக்கும் ரகசியச் சேவையாக இருந்தது. 1935இல் ஏழு படகுகளில் 12000 நூல்களோடு அது விஸ்தரிக்கப்பட்டது.
விஜயவாடா நூலகச் சங்கம் எனும் அமைப்பை விரைவில் ஏற்படுத்துகிறார். தோழர் பட்டூரி. 1935 அக்டோபர் 25 அன்று படகு நூலக இயக்கத்தைத் தொடங்கிவைக்க வருமாறு அவர் அழைப்பு விடுத்த தலைவர்களில் சிங்கார வேலரும் ஒருவர். கிராமப் பஞ்சாயத்துகள் கிருஷ்ணா நதி பீடத்தில் உடனடியாக படகு நூலக இயக்கத்தை அங்கீ கரித்தன. குண்டூர் மண்டல் நூலகத் தலைவராகவும் காங்கிரஸ் சமூக சீர்திருத்தச் செம்மலாகவும் அறியப்பட்ட சரனு ராமஸ்வாமி சவுத்ரி அந்த மிதக்கும் நூலக இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார்.
(தொடரும்)
No comments:
Post a Comment