நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு ரத்து

சென்னை, ஆக.18 பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியிட்டதாக, ஆளுநரின் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கல்லூரி பெண்களை தவறாக வழி நடத்தியதாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்போது ஆளுநராக இருந்த பன்வாரி லால் புரோகித்தை தொடர்புபடுத்தி கட்டுரைகள் வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்திய தண்டனைச் சட்டம் 124ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் கோபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது,

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்றும், அந்தக் கட்டுரை காரணமாக ஆளுநர் தனது அரசியல் சாசன கடமைகளை செய்ய முடியவில்லை என்பது நிரூபிக் கப்படவில்லை எனவும் கூறி நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 2018ஆம் ஆண்டில் கல்லூரி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய புகாரில் பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்மலா தேவியின் அலைபேசி உரையாடலில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும்புள்ளிகளை தொடர்பு படுத்தி பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனடிப்படையில் வெளியான செய்தி தொடர்பாகவே நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டது.

No comments:

Post a Comment