* அண்ணாமலையின் அவதூறு எண் ஒன்று
சுதந்திரம் வேண்டாம் என ஏற்க மறுத்த தலைவருக்குச் சுதந்திர தினத்தில் விருதா?
இதற்கு பதிலடி: இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டதற்காக சுதந்திரப் போராட்ட வீரர் விருது (Freedom Fighter) தாமிரப் பட்டயம் தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டது தெரியுமா?
எல்லாவற்றிலும் ஆதிக்க அஸ்திவாரம் போட்டு ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தினிடம் சுதந்திரம் ஒப்படைக்கப்பட்டால் கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தின் நிலை என்ன ஆகும்? ஆகவே வெள்ளைக்காரர்கள் ஆட்சி இருக்கும் போதே பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பிரச்சி னைக்கு முடிவு கட்டப்பட வேண்டும், இல்லாவிட்டால் டெமாக்ரசி இருக்காது - பிராமணோக்கரசிதான் இருக்கும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
அது எத்தகைய உண்மை என்பதை இப்பொழுதும் பார்க்கலாமே! இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு எதை நோக்கிச் செல்கிறது என்பதைச் சூத்திர அண்ணா மலைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் பங்கு என்ன? தனது சொந்த கிராமத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்தவர் வாஜ்பாய் அல்லவா? மன்னிப்புப் புகழ் சவார்க்கார் ஆங்கிலேயர்களுக்கு அடி பணிந்து எழுதிய கடிதங்கள் என்றைக்கும் சிரிப்பாய் சிரிக்கும். கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிய வேண்டாம்.
* அண்ணாமலையின் இரண்டாவது குற்றச்சாட்டு:
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன இயக்கத் தலைவருக்கு விருதா?
நமது பதிலடி: தமிழ் காட்டுமிராண்டிக் காலத்தில் தோன்றியது மட்டுமல்லாமல், புராணக் குப்பைகள் கொட்டி கிடக்கும் ஒரு மொழியாக இருக்கிறது. இந்த தமிழ் அறிவியல் மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தவரும் அவரே. அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டு தமிழ் சீர்திருத்தம் நடைமுறை செயல்பாட்டுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது என்பதை அண்ணாமலைகள் இதுவரை தெரிந்து கொள்ளாவிட்டால் தெரிந்து கொள்ளட்டும். தந்தை பெரியாரின் சிந்தனை வளமும் கருத்தும் இப்பொழுது தமிழில் தானே இருக்கின்றன. இது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து அல்லவா?
* அண்ணாமலையின் மூன்றாவது குற்றச்சாட்டு:
"திருக்குறளை மலம் என்று விமர்சனம் செய்தவருக்கு "தகைசால் தமிழர்" விருதா?
நமது பதிலடி: பெரியார் தான் அவ்வாறு சொன்னார் என்று பூணூல்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அதை வீரமணி அவர்கள் தான் சொன்னார் என்று அண்ணாமலை புதுக் கரடி விடுகிறார்.
திருக்குறளை மலம் என்று பெரியார் சொன்னார் என்பதற்கு அறிவு நாணயம் இருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுத் தோப்புக்கரணம் போட வேண்டும், இல்லாவிட்டால் சந்திக்க வேண்டிய இடத்திலே சந்தித்து அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் சட்டப்படி! தமிழ்நாட்டில் முதன் முதலாக திருக்குறள் மாநாட்டை (1949) நடத்தியவர் தந்தை பெரியார் என்ற வரலாறு தெரியுமா?
திருக்குறளை மலிவு விலையில் போட்டு மக்களிடத்தில் கொண்டு சென்றவர் தந்தை பெரியார் என்பதை அறிவாரா? "உன் மதம் என்னவென்று கேட்டால் திருக்குறளான் என்று சொல்லுங்கள்" என்று சொன்னவர் தந்தை பெரியார் என்பது எல்லாம் இதுகளுக்கு எங்கே தெரியப்போகிறது!
* அண்ணாமலையின் அடுத்த திருகு தாளம்:
ஏமாற்று அரசியல் எடுபடாது ஆட்சியின் அவலங் களையும் அதிகார மிரட்டல்களையும் மறைப்பதற்கு இந்த விருது என்கிறார் அண்ணாமலையார்.
நமது பதிலடி: தோழர் சங்கரய்யா அவர்களுக்கும், நல்லகண்ணு அவர்களுக்கும் விருது கொடுத்த போது எழுப்பாத இந்த குற்றச்சாட்டை சமூக நீதி, சமூகப் புரட்சி இயக்கத்தின் தலைவர், சனாதனத்தின் வைரி ஆசிரியர் வீரமணிக்கு கொடுக்கும் பொழுது மட்டும் எழுப்பி திசை திருப்புவானேன்? ஆத்திரப் படுவானேன்?
பிஜேபியின் ராம ராஜ்ய அரசியலையும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், என்கின்ற ஆரிய வைதீக சனாதனச் சக்திகளையும் வேரறுக்கும் பெரும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மானமிகு வீரமணி அவர்களுக்கு என்று வருகின்ற பொழுது.... இந்த சனாதன சக்திக்கு ஆத்திரம் பீறிட்டு எழுவது இயல்பு தானே!
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசுபவர்கள் ஒரே ஜாதி என்று சொல்வார்களா என்ற தலைவர் வீரமணியின் வினாக் கணையால் விலா எலும்பு முறிந்தவர்கள் துடிதுடிக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது?
நாடாளுமன்றம் நடக்கின்ற பொழுது நாடாளு மன்றத்துக்கே வராத, வர அஞ்சக்கூடிய 56 அங்குல மார்பளவுள்ள பிரதமரை, தலையில் தூக்கி வைத்து ஆடும் கூட்டத்தின் அவலங்களைப் பற்றி பேசலாமா? ஆட்சியில் மக்கள் நலன்களை வளர்ச்சியைத் திட்டமிட்டு வளர்க்க சக்தி இல்லாத சனாதன சக்திகள் மக்களை திசை திருப்ப ராமன் கோயில் கட்டவில்லையா, மதவாத பிரச்சினைகளை எழுப்பவில்லையா, காசி கோயிலை சீரமைக்கவில்லையா, மக்களின் பக்தியை மதவாத உணர்வைத் தூண்டி மதக் கலவரங்களையும் ஜாதிக் கலவரங்களையும் இனக் கலவரங்களையும் தூண்டி திசை திருப்புவது யார் - என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கு இப்பொழுது தெரிந்து விட்டது.
ராஜ தர்மம் பற்றி அன்று வாஜ்பாய் பேசினாரே - நினைவிருக்கிறதா? குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்திற்காக அன்றைய குஜராத் முதலமைச்சரைப் பார்த்துதான் வாஜ்பாய் இதனைச் சொன்னார். வாஜ்பாய் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும். ஆனாலும் நரேந்திர மோடி திருந்துவதாக இல்லை. பாவம் அவர் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்? அவர் சரக்கு அவ்வளவுதான். அவர் காதைத் திருகுவது ஆர்.எஸ்.எஸ். ஆயிற்றே! எல்லாம் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி களின் முகமூடிகள் அகற்றப்பட்டுவிடும். மக்கள் உஷா ராகி விட்டார்கள். அப்பொழுது அண்ணாமலைகளின் முகவரிகளைத் தேட வேண்டி இருக்கும்.
கடைசியாக ஒன்று எல். முருகன் அவர்கள் தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக வந்த பொழுது அவர் முதன் முதலாகச் சொன்ன கருத்து: "தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சனம் செய்யாதீர்கள்" - என்று சொன்னாரே அதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment