கூலிப்படை மீதான நடவடிக்கை - காவல்துறைக்குப் பாராட்டு!
கி.வீரமணி
"பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்" என்று கூறுகிறார் அதி.மு.க. செய்தித் தொடர்பாளரும், மேனாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இவ்வாண்டில், சென்னைக் கடற்கரையில் கடலை யொட்டி பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க, தி.மு.க. அரசு ஏற்பாடு செய்ததை எதிர்த்து சில அரைவேக்காடுகளும், பா.ஜ.க.வின் பீஷ்மர்களும், அரசியலில் விளம்பரம் தேடிகளான வெத்து வேட்டுகளும் வாய் கிழியக் கத்தினர்; சமூக வலை தளங்களில் சரமாரியாக எழுதினர். நீதிமன்றம் ஏறி சட்டப் போராட்டம் நடத்தி தங்களது "பெருந் தன்மையை" உலகுக்குப் புலப்படுத்தினர்.
இறுதிச் சிரிப்பு (Last Laugh) - வெற்றியின் மலர்ச்சி தி.மு.க.விற்கு அதன் ஆற்றல்மிகு தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கே உரிய தாகி விட்டது!
உச்சநீதிமன்றத்திற்கும் சென்று தோல்வி அடைந்தனர். உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீடும் தோற்றது என்பதைவிட வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் பட்டும் புத்தி வராமல் மீண்டும் அ.இ.அதி.மு.க. சார்பில் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வோம் என்று மீண்டும் கித்தாப்புடன்கூறி, அவமானத்திற்கு பூண் போட்டுச் சுமக்கும் அறியாமையின் சின்னமாகி வலம் வருகின்றனர் - சற்றும் கூச்ச நாச்சமின்றி!
கலைஞரின் பேனா உலகப் புகழ் பெற்ற எழுத்துகளை, எண்ணி எண்ணி மகிழக் கூடிய கருத்தோவியங்களை, களப்போராட்ட அறிவிப் புகளைத் தீட்டி அரசியல் தன்னெழுச்சிகளுக்கு வித்திட்ட வீரப்பேனா, விவேக எழுதுகோல்.
உலகத்தோர் வியக்கின்றனர். இதனைப் புரி யாமல் இப்படி - பா.ஜ.க.விற்கு அதிமுகவை அடகு வைத்தவர்கள் - அதை மீட்க வேண்டிய முக்கிய பணியைப் புறந்தள்ளிவிட்டு, இதுபோன்ற மூக்குடைப்பட்டு மூலையில் நிற்க வேண்டிய தீர்ப்புகளைப் பெறும் அவமான சில்லறைத் தனங்களிலா ஈடுபடுவது?
மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கூட 'கலைஞர்' என்றும் 'தலைவரே' என்றும் தான் அழைப்பார். கருணாநிதி என்று அழைக்க மாட்டார். 'கருணாநிதி' என்று அவர் பெயரைச் சொன்னதற்காக காரிலிருந்து ஜேப்பியாரை கீழே இறக்கி விட்டவர்; அந்த வரலாறுகூட மறந்து விட்டதா? அல்லது தெரியவில்லையா? கீழிறக்கத்துக்கே மீள வழி போவது இதுதானோ?
***
மற்றொரு பாராட்டத்தக்கச் செய்தி
பிடிவாரண்டில் வெளியில் சுற்றும் ரவுடிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம் - கூலிப்படைகளின் செயல்களால் அரசிற்கும், மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் இழப்பு களையும் மிகவும் கட்டுப்படுத்தித் துடைத்தெறிய வேண்டியது அவசர அவசியமாகும்!
பல ரவுடிகளும், குற்றவாளிகளும் பா.ஜ.க.வில் சேர்ந்து பாதுகாப்புத் தேடுவது - தமிழ்நாடு அரசியல் காட்சியாக உள்ளதால் - தயவு தாட்சண்யமின்றி எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் குற்றத் தன்மையை மட்டுமே பார்த்து உரிய கடும் நடவடிக்கைகளை எடுத்து குற்றங்களைத் தடுத்து, மக்களுக்குரிய பாதுகாப்பையும், நிம்மதியையும் அளிப்பது தலையாய கடமை.
எனவே அதனை வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment