இளைஞர்களுக்குத் திறந்துவிடப்பட்ட ‘பெட்டகம்!’ தி.மு.க. இளைஞரணியின் பாராட்டுக்குரிய செயல்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

இளைஞர்களுக்குத் திறந்துவிடப்பட்ட ‘பெட்டகம்!’ தி.மு.க. இளைஞரணியின் பாராட்டுக்குரிய செயல்பாடு

30.7.2023 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் தொகுத்த இருபது சிறு புத்தகங்கள் அடங்கிய பெட்டகம் “அறிவோம் திராவிடம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் புத்தகங்கள் உள்பட 20 புத்தகங்கள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் நமது வெளியீடுகளான ‘பெரியார் பொன்மொழிகள்’, ‘ஆரிய மாயை - அறிஞர் அண்ணா’, ‘பெரியார் பிறவாமலிருந்தால்... - டாக்டர் கலைஞர்’, ‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை - கி.வீரமணி’, ‘இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?’, ‘இல்லாத இந்துமதம் - பேரா.அ.இறையன்’ ஆகிய புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. 

திமுக என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல; கொள்கைகளை வென்றெடுப்பதற்காக உருவான தீரர் கோட்டம் என்பதை நிறுவும் வகையில் கொள்கைப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதும், அதற்கான பாடத் திட்டம் போல புத்தகங்களை வழங்குவதுமான இந்தச் செயல்பாடுகள் திராவிட இயக்கத்தின் நீட்சிக்கு வலுச் சேர்ப்பனவாகும். இதனை முன்னின்று செயல்படுத்தும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரும், அதற்கான களம் அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களும் நம் பாராட்டுக்கு உரியவர்களாகிறார்கள்.

No comments:

Post a Comment