திராவிடர் கழகம் கட்சியல்ல இயக்கமாகும். கட்சி என்பது குறிப்பிட்ட சில வேலை வாய்ப்புகளை அல்லது பட்டங்களை மக்களுக்கு வாங்கித் தருவது.ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால் இயக்கம் என்பது மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது. இயக்கம் என்பது மக்களின் விருப்பு வெறுப்பைப் பொருட்படுத்தாது நாட்டின் வளர்ச்சி முற் போக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைப்ப தாகும். இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்பது தமிழர் தலைவர் விருப்பம் . இரா .ஜெயக்குமாரைப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளராக நியமித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 70 கழக மாவட்டங்கள் இருக்கின்றன. நான்கு சுற்றுகளாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதென முடிவு செய்து களத்தில் இறங்கினார். தமிழர் தலைவர் அவர்கள் ஜெயக்குமாரைச் செயல்குமார் ' என்று குறிப்பிடுவார். அதனை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
முதல் சுற்று 2023 மே 27 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெற்றது.
முதல் சுற்றில் 18 மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1453. இதில் மாணவியர்கள் மட்டும் 615 பேர். கழகக் குடும் பத்தைச் சாராத பொதுநிலையில் உள்ள மாணவர்களும் பெரியாரியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது. அதில் 524 பேர் பட்டதாரி மாணவர்கள்.
பயிற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் வகுப் பெடுத்து பயிற்சி அளித்தது சிறப்பிற்குரியது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் , செயலவைத் தலைவர்,சு. அறிவுக்கரசு, பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி முதலியோர் வகுப் பெடுத்தது குறிப்பிடத்தக்கது . மேலும் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வெளியுறவுத் துறைச் செயலாளர் கோ.கருணாநிதி, பேராசிரியர்கள் ப.காளிமுத்து, நம்.சீனிவாசன்,க. அன்பழகன், மு.சு.கண் மணி, ஆ.நீலகண்டன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, முனைவர் எழில், மருத்துவர் இரா.கவுதமன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி, வழக்குரைஞர் பூவை .புலிகேசி, ஆசிரியர் மா.அழகிரிசாமி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், எழுத் தாளர் வி.சி.வில்வம், முனைவர் காஞ்சி பா.கதிரவன் ஆகியோரி டம் மாணவர்கள் பெரியாரியலை அறிந்து கொண்டனர்.
பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது; பயிற்சி தரப்பட்டது . பல நாட்கள் , பல நூல்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை ஒரு நாள் வகுப்பிலே அறிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிட்டியது நல்வாய்ப்பு ஆகும்.
என்னென்ன தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற் றன என்பதை 'விடுதலை' வாசகர்கள் அறிந்து கொள்வ தற்கு ஆர்வமாக இருப்பார்கள். பட்டியலைத் தருகிறேன்.
1. தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
2. கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்
3. சமூக நீதி வரலாறு
4. புராண இதிகாசப் புரட்டுகள்
5. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்
6. நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்க வரலாறு
7. திராவிடர் கழக வரலாறு
8. தந்தை பெரியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள்
9. தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகள்
10. தமிழர் - திராவிடர் - ஆரியர்
11. இந்து -இந்துத்துவா- சங்பரிவார் -ஆர் .எஸ் .எஸ்
12. திராவிடர் இனத் தோற்றமும் நாகரீக வளர்ச்சியும்
(சிந்துவெளி -ஆதிச்சநல்லூர் - சிவகளை - கீழடி நாகரீகங்கள்)
13. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தனித்தன்மைகள்
14. சமூக நீதிக்கான சவால்களும் தனியார் துறையில் இட ஒதுக்கீடும்
15. அறிவியலும் மூடநம்பிக்கையும்
16. தந்தை பெரியாரின் இன்றைய தேவை
17. தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி
18. சுயமரியாதைச் சுடரொளிகள்
19. பாசிச பா.ஜ.க. ஆட்சியின் அவலங்கள்
20. திராவிட மாடலின் வெற்றி
21. ஜாதி ஒழிப்பும் தந்தை பெரியாரும்
22. திராவிடர் இயக்கத்தின் தமிழ் தொண்டு
23. பெரியார் உலக மயம் ,உலகம் பெரியார் மயம்
24. தேசியக் கல்விக் கொள்கை - நீட் எதிர்ப்பு ஏன்?
25. தந்தை பெரியாரும் தமிழ் இலக்கியமும்
26. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்
27. பேய் ஆடுதல், சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம்
28. ஊடகத்துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்
29 . மருத்துவமும் மூடநம்பிக்கையும்
30 . அரசியல் சட்டமும் திராவிடர் கழகமும்
பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது. வகுப்பு நடத்து வதற்கு வசதியாக மிகுந்த பொருட்செலவில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பாடங்களை மாணவர்கள் தெளிவாக கேட்கும் வண்ணம் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டிருந்தது. உயர் கல்வி நிறுவனங்களில் வகுப் பறைகளில் கருத்துக்களை விளக்க, பாடங்களை மனதில் பதிய வைக்க 'பவர் பாயிண்ட்' முறையினைக் கையாளு
வார்கள். அந்த முறையைப் பயிற்சி பட்டறையிலும் மேற் கொண்டதானது மாணவர்கள் பாடங்களை விளங்கிக் கொள்ள பெரிதும் துணை புரிந்தது. தந்தை பெரியாரின் கொள்கைகள் அகிலம் முழுவதும் பரவ வேண்டும் எனும் வேட்கையுடைய வெளியுறவுத்துறைச் செயலாளர் கோ .கருணாநிதி அவர்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யில் பயன்படுத்துவதற்காகவே புதிய புரொஜக்டர் கரு வியை வாங்கி அன்பளிப்பாக வழங்கி கொடையாளர் களுக்கு நல்லதொரு வழிகாட்டியானார். மாணவர்கள் குறிப்பெடுக்க நோட்டும் பேனாவும் வழங்கப்பட்டது. சிறப்பாக குறிப்பெடுத்த மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது . மாணவர்கள் புத்துணர்ச்சி பெற, களைப்பு நீங்க, காலையும் மாலையும் தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும்; ஆர்ப்பாட்டம் நடத்தும்; போராட்டங்களை முன்னெடுக்கும்; இடை விடாமல் இயங்கிக் கொண்டிருக்கும். எல்லா பணிகளும் முக்கியமானது தான். ஆனாலும் பயிற்சி வகுப்புகள் எல்லாவற்றையும் விட முக்கியமானது. இளைஞர்கள் கொள்கைகளை தெளிவாக உணர்ந்து கொள்ள பயிற்சிப் பட்டறைகளே அடிப்படை - தரமான நாற்றுகளே நல்ல மகசூலை அளிக்க வல்லது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்கூட பயிற்சி வகுப்பில் தயாரான நன்மணியாவார். தந்தை பெரியார் அவர்களிடமே பாடம் கேட்டுப் பயிற்சி பெற்றவர். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் உயர் பொறுப்பில் உள்ள பலர் திராவிடர் கழகப் பயிற்சி பட்டறையில் உருவான நாற்றுகளே. பயிற்சி வகுப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடக்கும் என்று அறிவித்திருக்கும் ஜெயக்குமார் மாவட்ட கழகத் தோழர்களின் ஒத்துழைப்பே பயிற்சி வகுப்பின் வெற்றிக்கு மூல காரணம் என்கிறார். கூட்டுப் பணியே வெற்றிக்கு வழி. தந்தை பெரியாரின் கொள்கைகளை மாணவர்களின் இதய வயலில் விதைப்போம் . வளமான சமுதாயம் அமைப்போம்.
No comments:
Post a Comment