காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு புதிய நீதிபதிகள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடில்லி, ஆக. 23 தமிழ்நாடு அரசு காவிரி நிதி நீர் பங்கீடு தொடர்பாக கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கை  விசாரிக்க உச்சநீதிமன்றம் தரப்பில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு வரும் 25ஆம் தேதியன்று காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்கிறது. 

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கருநாடக   அரசு தர மறுத்து வருகிறது. இதுதொடர்பாக  அண்மையில் டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி வரை கருநாடகம் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 51-டி.எம்.சி நீரில் 15.டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சிய 38- டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்க மறுத்த காவிரி மேலாண்மை ஆணையம், 10 டிஎம்சி  தண்ணீரைத் திறந்து விடக் கரு நாடகத்துக்கு  உத்தரவிட்டது.

இதையடுத்து,  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நீரை திறந்துவிட கருநாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி  முறையீடு செய்தார். 

அப்போது, காவிரி பாசன பகுதிகளில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக விநாடிக்கு 24,000 கன அடி வீதம் இந்த மாதம் முழுவதும் காவிரியில் தண்ணீர் திறந்து விட கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் கால தாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கருநாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று (22.8.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு நியமிக்கப்படும் என்றும், அந்த அமர்வில் தங்கள் வாதங்களை முன் வைக்கலாம் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோரை கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வானது வரும் 25ஆம் தேதி காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment