கேள்வி 1: நடிகர் எஸ்.வி.சேகர் தலைமையில் "பிராமணர்கள் முன்னேற்றக் கழகம்" ஆரம்பிக்கப் போகிறார்களாமே, மிகவும் வறுமையில் வாடுகிறார்களாமே?
- மீ.முரளிதரன், மதுரை - 9
பதில் 1: பல கட்சிகளுக்கும் சென்று, சவாரி மாறி வந்து இனிமேல் நாமே ஒரு கட்சி ஆரம்பித்து தன் ஜாதியினரை உயர்த்துவதாகக் கூறிக் கொள்ளும் அவர், வறுமைக் கோட்டில் உள்ள அவரது ஜாதியினரில் எத்தனை பேர் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்? அர்ச்சகரின் வருமானம் என்பது அதற்குரிய ஊதியத்தைவிட மிஞ்சியது சன்மானம் - தட்சணை - மறுக்க முடியாதே!
---
கேள்வி 2: விருதுகளுக்குப் பெருமை சேர்க்கும் தங்களுக்குக் கிடைத்த "தகைசால் தமிழர் விருது" குறித்து?
- க.தமிழமுதன், நெல்லை
பதில் 2: தந்தை பெரியாருக்கு விருது கொடுக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தப் பெருமை ஒரு பெரியாரின் தொண்டனுக்கு, பெரியாரின் வாழ்நாள் மாணவனுக்குக் கொடுக்கப்படுகிறது என்பதே உண்மை!
---
கேள்வி 3: ஆந்திரா கவுன்சிலர் ஒருவர் "நான் எந்த ஒரு நன்மையும் செய்ய முடியாதவனாகிவிட்டேன்" என்று பொதுக்கூட்டத்தில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்டாரே?
- அ.கவிமணி, திருத்தணி
பதில் 3: அவர் வருத்தம் புரிகிறது; ஆனால் அதற்காக அவர் கொடுத்துக் கொண்ட தண்டனை ஏற்கவியலாத முறையாகும்!
---
கேள்வி 4: ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் மலேசிய மாநிலங்கள் தேர்தலில் வெற்றி - தோல்வியை அங்குள்ள தமிழர்கள் தீர்மானிப்பார்கள் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கூறியுள்ளதே?
- தெ.குமரன், விருத்தாசலம்
பதில் 4: தமிழர்களுக்கு மரியாதை கிடைக்க தமிழர்கள் அங்கு சிதறாமல், ஜாதிச் சங்கங்களால் பிளவுபடாமல் - மொழியாலும், வழியாலும் விழியாலும் தமிழர்களாக ஒன்றுபட்டால் ஆட்சியில் உரிய பங்கைப் பெறுவார்கள் - முடிவை நிர்ணயிப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்பதை மலேசியத் தமிழர்கள் உணர வேண்டும்.
---
கேள்வி 5: "பெண்கள் படித்தால் திமிர் பிடித்துவிடும், பிறகு அவர்கள் கணவருக்கு அடங்க மாட்டார்கள், சாஸ்திர விரோதிகளாக மாறிவிடுவார்கள்" என்று கூறிய (தலையங்கம்: The Mahratta, 18 September 1887 Curriculum of the Female High School, Is It In The Right Direction?) திலகர் பெயரிலான விருதை மோடிக்குக் கொடுத்துள்ளார்களே?
- கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் 5: திலகர் அதுமட்டுமா எழுதினார், ஜோதிபா பூலேவுக்கு எதிராக - முகச்சவரம் செய்பவர்களும், செக்கு ஓட்டுகிறவர்களும், துணி வெளுப்பவர்களும் - கீழ் ஜாதியினர்! சட்டப் பேரவைக்கு அவர்கள் போய் என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்டவர். ஆர்.எஸ்.எஸ். கொள்கை பெண்களை அடுப்பங்கரையோடு அமர்த்தி, அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதால் அந்த விருது பிரதமர் மோடிக்குத் முழுத் தகுதியான விருதுதான்.
---
கேள்வி 6: மணிப்பூர், ஜம்மு, அரியானா என கலவரம் ஆங்காங்கே வெடித்துக்கொண்டு இருக்கிறது; வன்முறைப் பகுதிகளில் காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டே இருக்கிறதே?
- வெ.ஆறுமுகம், தருமபுரி
பதில் 6: அது மட்டுமா? மணிப்பூரில் இராணுவ தளவாட கிடங்கிலிருந்து இராணுவ துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது ஒருபுறம், மதக்கலவரம் மற்ற மாநிலங்களிலும் திட்டமிட்டே கிளப்பிடுகின்றார்களோ என்ற அய்யம் பரவலாக ஏற்பட்டுள்ளது.
---
கேள்வி 7: உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசுவதற்கென்றே சிலர் ’யாத்திரை’ செல்கின்றனரே?
- கா.வெங்கடகிருஷ்ணன், தஞ்சை
பதில் 7: ‘யாத்திரை'யே அதற்குத்தானே! புராண காலத்திலிருந்தே!
---
கேள்வி 8: பிரதமரைப் பேசவைக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசியமா? அவலமா?
- த.வேல்முருகன், வந்தவாசி
பதில் 8: அவலம் கலந்த அவசியம்!
---
கேள்வி 9: மனநோயாளிக் காவலரின் துப்பாக்கிக் குண்டு கூட பழங்குடியின அதிகாரி மற்றும் இஸ்லாமியர்களை மட்டுமே அடையாளம் கண்டு கொல்கிறதே?- வே.சக்திவேல், வியாசர்பாடி
பதில் 9: மில்லியன் டாலர் கேள்வி இது! பலே! பலே!!
---
கேள்வி 10: காதலித்துத் திருமணம் செய்பவர்களுக்கு அத்திருமணத்தைப் பதிவு செய்ய பெற்றோரின் அனுமதி கட்டாயம் என்று ஒரு ஜாதிச் சங்க மாநாட்டில் குஜராத் முதலமைச்சர் கூறியுள்ளாரே?
- மு.காத்தவராயன், வேளச்சேரி
பதில் 10: அபத்தத்தின் உச்சம். இதுதான் "திராவிட மாடலை" எதிர்க்கும் குஜராத் மாடலின் எச்சம்! - புரிகிறதா?
No comments:
Post a Comment