திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட், பேராசிரியர் ப.சுப்பிரமணியன், கனகராஜ், இராமமூர்த்தி, சங்கிலிமுத்து, காமராஜ், சேவியர், குணா, இராஜசேகர், மகாமுனி, இராமதாஸ், முபாரக், முருகன், அசோகன், மலர்மன்னன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இயக்கத்தின் இரண்டு கண்கள்!
தொடர்வண்டி நிலையத்தில் இருந்து தொடர்ந்து வரவேற்பு அளிக்கப்பட்டு பெரியார் மாளிகை வந்தடைந்தார் தமிழர் தலைவர். சிறிது நேர உரையாடலுக்குப் பின், நடைப்பயிற்சிக்காக கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு சென்ற போது, கைவல்யம் முதியோர் இல்லத்தின் பெரியவர்களும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துப் பிள்ளைகளும் ஆசிரியரைச் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்ததுடன், தகைசால் விருது பெற்றதற்கு மகிழ்ச்சியையும், பரிசுகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். அப்போது அந்த இடமே சில நிமிடங்கள் மவுனமாய் காட்சியளித்தது. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல பணிகளைப் பெரியாரும், அன்னை மணியம்மையாரும், பிறகு தமிழர் தலைவரும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதில் கைவல்யம் முதியோர் இல்லமும், நாகம்மையார் குழந்தைகள் இல்லமும் இந்த இயக்கத்தின் இரண்டு கண்கள் போன்றவை!
பேராசிரியப் பெருமக்கள் வருகை!
காலை உணவிற்குப் பிறகு மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, பேராசிரியர்கள் இஸ்மாயில், கிருஷ்ணமூர்த்தி, உமாதேவி, கற்பக குமாரசுந்தரி, ராஜேஷ் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, மல்லிகா, பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி, மகாலட்சுமி, அருள்ராணி, தினேஷ்குமார், பெரியார் நூற்றாண்டு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வனிதா, நாகலட்சுமி, பாபி பிரசன்னா, நளினி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் க.அம்பிகா, க.யாழினி, க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துகளைக் கூறினர். பேராசிரியர் ப.சுப்பிரமணியன், காவியா இருவரும் ஆசிரியரைச் சந்தித்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
உள்ளம் நெகிழ்ந்த வல்லம் வரவேற்பு!
திருச்சியில் இருந்து வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரிக்குத் தமிழர் தலைவர் புறப்பட்டார். இடையில் வரவேற்பு நிகழ்வொன்று இருப்பதாக தோழர்களிடம் இருந்து தகவல் வரவே, வல்லம் பேருந்து நிலையம் நோக்கி வாகனம் சென்றது. கடைத் தெருக்களும், மக்கள் திரளும் சூழ்ந்த அவ்விடத்தில் கொடிகள் கட்டப்பட்டு, பாடல்கள் இசைக்கப்பட்டு, "டிரம்ஸ்" வாசிக்கப்பட்டு, உள்ளூர் திருவிழா போல ஒய்யாரமாக இருந்தது அந்தச் சூழல்! ஆளுயர ரோஜாப்பூ மாலை ஆசிரியருக்கு அணிவிக்கப்பட்டு, முழக்கங்கள் எழுப்பப்பட்டன! முன்னதாக வல்லம் புறநகர் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் தோழர்கள் பேரணியாய் அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர், திருச்சி, நாகை, மன்னார்குடி, திருவாரூர், கும்பகோணம் கழக மாவட்டங்களைச் சேர்ந்த இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்!
இது ஓர் இன்பச் சந்திப்பு!
பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:
வெளிநாட்டுப் பயணங்களை முடித்துவிட்டு திருச்சி, தஞ்சை தோழர்களையும், கல்வி நிறுவன நிகழ்வுகளிலும் பங்கேற்பது தான் எனது திட்டமாக இருந்தது! திடீரென நேற்று (1.8.2023) அறிவிக்கப்பட்ட விருதால், இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்கத்திற்கும், கல்வி நிறுவனத்திற்கும் தஞ்சை தான் தாயகம். உரிமையோடும், உறவோ டும் இருப்பவர்கள் தான் தஞ்சை தோழர்கள்! தஞ்சாவூர் மேயர் சண் .இராமநாதன் அவர்களும், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களும் கலந்து கொண்டது, தஞ்சை நகரமே வரவேற்பு கொடுத்தது போல இருக்கிறது. இது ஓர் இன்பச் சந்திப்பாகும்!
தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தஞ்சையில் பாராட்டு!
நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கையில், கலைஞர் நினைவு பேனா சின்னம் அமைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய செய்தியைக் கூறினார்கள். "எனக்குக் கொடுத்த விருதை விட, இந்த வெற்றி செய்திதான் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது", என்றேன். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய போது, கலைஞர் அவர்களுக்குத் தஞ்சையில் பெரும் விழா எடுத்தோம்! இன்றைக்குக் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்! இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து தாய் கழகமாம், திராவிடர் கழகம் சார்பில் மீண்டும் ஒரு பெரு விழாவை நாம் செய்ய வேண்டும். அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் இப்பெருவிழா, 2024 நாடாளுமன்றத்தின் வெற்றி விழாவாக மாற வேண்டும்!
எதிரி எடுக்கும் ஆயுதத்தை நாமும் எடுப்போம்!
கல்லடி, சொல்லடிகளால் பழக்கப்பட்ட எங்களுக்கு விருது என்பதே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் நாங்கள். எனினும் எங்களை மேலும், மேலும் உற்சாகப்படுத்த இந்த விருதைக் கொடுத்திருக்கிறார்கள். இன எதிரிகள் வளர்வதைத் தடுப்பதே நமது நோக்கமாக இருக்கிறது. பெரியார் கண்ணாடி அணிந்து அவர்களை அடையாளம் கண்டு, அப்புறப்படுத்த வேண்டும்! எதிரிகள் எடுக்கும் அதே ஆயுதத்தை நாமும் பயன்படுத்துவோம் என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலும் "மயக்க பிஸ்கட்" கொடுக்க பார்க் கிறார்கள். ஆனால் இங்கு அது வேலை செய்யாது. யாத்திரை போவதாக சொல்கிறார்கள். மக்களுக்காக நாங்களும் போயிருக்கிறோம், அது நடைபயணம். 'யாத்திரை' என்கிற சொல் லுக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. யார் வருவது என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது மிக முக்கியம். இன்றைய நம் சந்திப்பு கூட, அனைத்துக் கட்சி கூட்டமாகவே தெரிகிறது. அந்தளவிற்குப் பல்வேறு கட்சித் தோழர்கள் வந்திருக்கிறீர்கள். இந்தியாவை ஆள்பவர்கள் மி.ழி.ஞி.மி.கி. வைப் பார்த்துப் பயப்படும் நிலை வந்துள்ளது. தீ விபத்தின் போது, எப்படி அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோமோ, அதேபோல இந்த ஜாதி வெறி தீ, மத வெறி தீயை சேர்ந்து அணைப்போம், வாரீர்! வாரீர்! எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.
பாராட்டுக் கூட்டத்தில் பங்கேற்றோர்!
இந்நிகழ்வை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஏற்பாடு செய்து, ஒருங்கிணைத்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த இயக்கத் தோழர்களும் ஆசிரியருக்குச் சிறப்பு செய்தனர். நூல்கள், பொன்னாடை, பேனா, விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சி நிதி போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்வில் தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன், சி.பி.அய். மாநிலக் குழு உறுப்பினர் நீலமேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மேனாள் மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, பொறுப்பாளர் வீரன் வெற்றிவேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயலுப்தீன், மாவட்டத் திமுக துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, சிபிஅய்.எம். நகரப் பொறுப்பாளர் குருசாமி, வல்லம் திமுக நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட திமுக துணைப் பொருளாளர், எல்.ஜி.அண்ணா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அருளானந்தசாமி, ஓவியர் ஆம்லாப்பட்டு தங்கராசு, சிங்.ரா.அன்பழகன், வல்லம் மேனாள் பேரூராட்சித் தலைவர் பொன்னுச்சாமி, குடந்தை மாநகரச் செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு : வி.சி.வில்வம்
No comments:
Post a Comment