மூடத்தனத்தின் உச்சக்கட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

மூடத்தனத்தின் உச்சக்கட்டம்

குழந்தை பிறந்து இரண்டு வாரம் வரை தீட்டாக இருப்பதால் ஊருக்குள் வரக்கூடாது என்ற  மூடநம்பிக்கையால் தாயுடன் குழந்தையை ஊருக்கு வெளியே தங்க வைத்ததால் மழை மற்றும் குளிர்காரணமாக குழந்தை இறந்துவிட்டது.   

கருநாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே கொல்லரகட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த இணையருக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி துமகூரு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குறைமாதத்தில் இந்த குழந்தைகள் பிறந்திருந்தன. இதனால் இரு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது. மற்றொரு குழந்தையின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இதையடுத்து அந்தக் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டது. பின்பு குழந்தைக்கு உடல்நலம் தேறியது.

இதையடுத்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி தாயும், குழந்தையும்  வீட்டிற்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்த கிராம மக்கள் ஒரு மூடநம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அதாவது எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றால் அவர்கள் தீட்டுக் கழிய வேண்டும் என 2 வாரம் வரை ஊருக்குள் அனுமதிப்பதில்லை. தாயையும், சேயையும் ஊருக்கு வெளியே தார்பாய் மற்றும் மூங்கிலால் சிறிய குடிசை போன்ற ஒன்றை கட்டி அதில் தங்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி, மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தாய் வசந்தாவும், அவரது குழந்தையும் கிராமத்திற்கு வெளியே உள்ள பகுதியில் குடிசையில் வசிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதையடுத்து கிராமத்தின் வெளிப்பகுதியில் குடிசை அமைத்துத் தாய் மற்றும் குழந்தை தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக கிராமத்தில் கனமழை பெய்து வந்தது. குடிசைக்குள் தண்ணீர் நிறைந்தது. தாய் தண்ணீரில் அமர்ந்துகொண்டு குழந்தையை மடியிலேயே வைத்திருந்தார். தாயின் உடல் முழுவதும் நனைந்ததால் குழந்தையும் ஈரத்திலேயே இருந்தது. இதன் காரணமாக குடிசையில் தங்க வைக்கப்பட்ட குழந்தைக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து, அந்தக் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தது. ஏற்கெனவே ஒரு குழந்தை  இறந்த நிலையில், கிராமத்தினரின் மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. இதனிடையே தீட்டுக் கழியும் முன்பே குழந்தை இறந்ததால் குழந்தையின் உடலை கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய கிராமத்தினர் மறுத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சித்தேஷ் சம்பவ இடத்திற்கு வந்தார். அவருடன் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கிராமத்திற்கு வந்தனர். கிராமத்தினருடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூடத்தனம் என்பதற்கு ஓர் அளவே யில்லையா? மதமும், அதனால் விளையும் மூடநம்பிக்கைகளும் அறிவை மட்டும் அழிக்கவில்லை. இரக்க உள்ளத்தையும், மனிதநேயத்தையும் கூட அடியோடு வெட்டி எறிகின்றனவே!

கருநாடக முதலமைச்சர் மாண்புமிகு சித்த ராமையா பகுத்தறிவாளர் - இதில் தலையிட்டு உரியது செய்வார் என்றும் எதிர்பார்க்கிறோம்.

மூடநம்பிக்கை ஒழிப்புக்கென்று கரு நாடகத்தில் ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு - இதுபோல் இனியும் நடவாமல் பிரச்சாரம் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே நமது விழைவும் - கோரிக்கையுமாகும்.


No comments:

Post a Comment