எல்லோரும் சமம்: மேல் ஜாதி - கீழ் ஜாதி என்ற பிரிவு இனி எங்களிடம் இருக்காது
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்
கோவை, ஆக. 20 - 19.08.2023 சனிக்கிழமை அன்று கோவை, சுந்தராபுரம், சரஸ்வதி மினி ஹாலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் கோவை மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன் வரவேற்று உரையாற்றினார், கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையேற்று உரையாற் றினார். கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி தொடக்க உரையாற்றினார். புளியகுளம் பகுதி தலைவர் இல.கிருஷ் ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சி.கலைச்செல்வி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட ப.க. செயலாளர் அ.அக்ரிநாகராஜ், மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் இரா.வெங்கடாசலம், வி.சி.க. மாவட் டச் செயலாளர் அ.ஸ்டீபன் சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திமுக பொதுக்குழு உறுப்பினர் நா.பிரபாகரன் பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன் "தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி" என்கிற தலைப்பில் தந்தை பெரியாரை, அவரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் வெறுப்புணர்ச்சியுடன் அள்ளி வீசப்படும் அவதூறுகளான பெரியார் பெற்ற மகளை திருமணம் செய்து கொண்டார், எப்போதும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டார், அவரது கொள்கைகள் ஏற்க முடியாதவை, தாழ்த்தப்பட்ட பெண்கள் எல்லாம் ஜாக்கெட் அணிவதால் தான் துணிகளின் விலை ஏறிவிட்டது என்றார், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார் போன்ற அவதூறு களுக்கு பதிலடி கொடுத்து வகுப்பெடுத்தார்.
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றாரா? ஆம் பெரியார் சொன்னார். தமிழில் ஆதிகாலம் தொட்டு இந்நாள் வரை எந்த மாற்றமும் இல்லை, தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனையில்லை, ஆகவே இந்த மொழி காட்டுமிராண்டி மொழியாக இருக்கிறது என்றார். இப்படிச் சொன்ன பெரியார் தான் தமிழ் எழுத்தில் மாற்றம் கொண்டு வந்தார். உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டும் என்றால் அதன் எழுத்துக் கள் குறைக்கப்பட வேண்டும் என்று சிந்தித்த தலைவர் பெரியார் ஒருவரே. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே இருப்பதனால் அது உலகளாவிய மொழியாக இருக்கிறது ஆகவே தமிழிலும் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்து எழுத்து குறைப்பு செய்தால் தான் தமிழ் மொழி மக்களை சென்றடையும், அறிவியல் மொழியாகும் என்றார்.
பாரதிதாசன் பாடல்களை மேடைதோறும் பாடச் சொன்னார் பெரியார்
கருநாடக சங்கீதம் தெலுங்கு கீர்த்தனையை சமஸ்கிருதத் தில் பாடுவதையே தமிழிசை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையை மாற்றிட அயராது பாடுபட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை மேடைதோறும் பாடச் சொன்னார் - ஏனென்றால் அதுதான் தமிழ் வளர்ச்சிக்கான பாடல், பாரதி தாசன் தான் மொழி இனம் மனிதனைப் பற்றி பாடியுள்ளார். தமிழிசை என்றால் நடராஜர் சிலையை வைத்துக் கொண்டு புராணங்களை கடவுளர்களை கோவில்களை பற்றி பாடும் பாடல்களை கண்டித்தவர் பெரியார். முன்னேற்றம் அறிவியல் வளர்ச்சி தமிழில் தேவை என்று நூறு ஆண்டுகளுக்கு முன் பேசிய தலைவர் தந்தை பெரியார். சிவனது தலையில் சந்திரன் இருக்கின்றதென புராணங்கள் கூறுகின்றன. அந்த சந்திரனை ஆராய்ச்சி செய்ய இன்றைக்கு சந்திராயன்-3 செயற்கைக் கோள் சென்றுள்ளது. இதுபோன்ற அறிவியல் வளர்ச்சி தமிழில் உருவாக வேண்டும் என சிந்தித்த தலைவர் பெரியார்.
கலைகள் மூலமாக சமத்துவம் சகோதரத்துவம் பேசப்பட வேண்டும்
கலை, இலக்கியம், நாடகம் ஆகியவற்றை பெரியார் வெறுத்தார். ஏனென்றால் புராண இதிகாச நாடகங்களே எங்கும் நடத்தப்பட்டன. அரிச்சந்திர நாடகம் என்று ஒரு நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ஜாதி நிலை நிறுத்தப்பட்டது, அடிமைத்தனம் அரங்கேறியது, பெண்ணை விற்கும் அளவிற்கு பெண் அடிமைத்தனம் போதிக்கப்பட்டது. இவைகளை வெறுத்த பெரியார் கலைகள் மூலமாக சமத்துவம் சகோதரத்துவம் பேசப்பட வேண்டும் இல்லை யென்றால் அதனை அழிப்பேன் என்றார்.
முற்போக்கு சிந்தனைகளை இந்த மண்ணில் விதைத்த தலைவர் பெரியார்
பெரியார் ஹிந்து மதத்தை மட்டும் தாக்கிப் பேசினார் என்கின்றனர். ஏன் தாக்கி பேசினார் என்று யாரும் சொல்வ தில்லை. தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், கண்ணில் படக்கூடாது. தெருவில் நடக்கக்கூடாது என்று சக மனிதனை மனிதன் சொல்லுவது இந்த ஹிந்து மதத்தில் தான் அதனால் தான் ஹிந்து மதத்தை வெறுத்தார் தாக்கிப் பேசினார். அதே நிலையில் எட்வர்ட் ஜென்னர், வால்டர், இங்கர்சால், பெட்டன் ரசல் போன்ற அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களை வெளி யிட்டு முற்ப்போக்கு சிந்தனைகளை மண்ணில் விதைத்தார்.
ஜாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும்
சுதந்திர தினத்தை துக்க நாள் என்றார் - வெள்ளைக்காரனை ஆதரித்தார் என்றும் குறை கூறுகின்றனர். ஏன் அவ்வாறு செய்தார் என்றால் மனிதர்களுக்கிடையில் உயர்வு தாழ்வு காட்டப்படும் ராஜ்ஜியம் தேவையில்லை. அதற்கு பதிலாக வெள்ளைக்காரனே ஆளட்டும் என்று பெரியார் ஜாதியை ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் பேசிய பேச்சை மாற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என காந்தியார் பேசவில்லை - தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தான் பேசினார். ஆனால் பெரியார் ஜாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாகி அனைவரும் சமம் என்கிற நிலை உருவாக வேண்டும் என்றார். சூத்திரன் பஞ்சமன் என்ற நிலை இருக்கும் நாடு எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியவர் தந்தை பெரியாரே.
அம்பேத்கரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார்
தாழ்த்தப்பட்ட மக்களை பெரியார் எதிர்த்தார் என்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் பறச்சி எல்லாம் ரவிக்கை போட்டதனால் விலை உயர்ந்து விட்டது என்கின்றனர். சட்டை போடக்கூடாது என்ற காலம் இந்த மண்ணிலே இருந்தது. ஆனால் பெரியார் செய்த பிரச்சாரத் தின் விளைவாக அனைவரும் மேல் சட்டை அணிந்தனர். அதன் பிறகு பொருட்களை வாங்கும் நுகர்வு அதிகமாக இருக்கும் பொழுது விலை ஏற்றம் ஏற்படத்தானே செய்யும் அதைத்தான் பெரியார் மக்கள் வழக்கு மொழியில் பறச்சி எல்லாம் இன்றைக்கு ரவிக்கை போட தொடங்கியதால் விலை ஏறிவிட்டது, ஏறத்தான் செய்யும் என்று பெரியார் கூறினார். அதை திரித்து, வெட்டி, பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பேசினார் என்று குறை கூறுகிறார்கள், தமிழர்களே திராவிடர்களே உங்களது சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும் என்றால் நீங்கள் பள்ளர், பறையர் என்ற ஜாதி பட்டத்தை விட்டளியுங்கள் என்று சொன்னவர் பெரியார், அம்பேத்கரை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார். அவரது புத்தகங்களை தமிழிலே மொழி பெயர்த்து வெளியிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்பியவர் பெரியார், சூத்திரன் ஆளும் நாட்டில் ஒரு தாழ்த்தப்பட்டவன் நீதிபதியாக வர முடியவில்லை என்று ஆதங்கக் குரல் கொடுத்தவர் பெரியார். அதன்பிறகு தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் அனைவரும் நீதிபதியாகவும் உயர் பதவிகளிலும் அமர்ந்திருக்கின்றனர். இப்படி யாரையும் எந்த மக்களையும் கீழாக பார்க்கவில்லை - சமமாகத்தான் பார்த்தார் பெரியார்.
வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டாரா பெரியார்?
தந்தை பெரியார் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டார் என்ற அவதூறை அள்ளி வீசுகிறார்கள். அது முற்றிலும் பொய். பெரியாருக்கு குழந்தையே இல்லை என்பது நாடறியும், மணியம்மையார் தனது 23 வயதில் இயக்கத்திற்காக தொண்டு செய்வதற்கு தந்தை பெரியாரைப் பின்தொடர்ந்து வந்தவர், காலப்போக்கில் பெரியாரது சொத்துக்கள் மக்க ளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட ஒப்பந்த திருமணம் தான் பெரியார் அன்னை மணியம்மையார் திருமணம். ஏனென்றால் அந்தக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. அதனால் தத்தெடுக்கவும் வழியில்லை, தனது சொத்துக்கு வாரிசு வேண்டுமென்றால் திருமணத்தின் மூலம் தான் சாத்தியம் என்கிற நிலையில் தனது சொத்துக்கள் மக்களுக்கு தொண்டு செய்ய பயன்பட வேண்டும் என்கிற உயர் எண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஏற்பாடு தான் அந்த திருமணம் - அதையும் கொச்சைப்படுத்து கிறார்கள், குறை கூறுகிறார்கள் - அது முற்றிலும் பொய்யே என்று தந்தை பெரியார் மீதான அவதூறுகளை மாணவர்கள் இளைஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் அளித்து வகுப்பெடுத்தார்.
வகுப்பும் - தலைப்பும்
திராவிடர் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதி வதனி நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு சொத்தில் கல்வியில் உரிமை வேண்டுமென சிந்தித்த தலைவர் பெரியார் என்று "தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் - நீதிக்கட்சி காலம் தொடங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமை யில் இயங்கும் திராவிடர் கழகத்தின் இந்நாள் வரை திராவிட இயக்கம் இதழ்களின் வாயிலாகவும், தற்போது சமூக ஊட கங்களின் வாயிலாகவும் இணையதளத்தின் மூலமும் பிரச் சாரப் பணியை எவ்வாறெல்லாம் மேற்கொள்கிறது என்பதை விளக்கி ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தனக்கு சரி எனப்பட்டதை துணிச்சலோடு செய்தவர் பெரியார், சிறு வயதிலேயே புத்திக் கூர்மையும் ஜாதி ஒழிப்பு உணர்ச்சியும் கொண்டவர், எந்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதவர் பெரியார். முதன் முதலில் பொது வாழ்வில் ஈடுபட்டது தந்தை பெரியார் குடும்பத்து பெண்கள் தான் என்று பெரியார் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், டச்சு படையெடுப்பு, போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பு, ஆங்கிலேயர்கள் படையெடுப்பு என்று நாட்டில் ஏராளமான படையெடுப்புகளை நாம் பார்த்திருப் போம். ஆனால் இவற்றையெல்லாம் விட மோசமான படையெடுப்பு ஒன்று இருக்கிறதென்றால் அதுதான் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு. ஆடு மாடு ஓட்டி வந்த ஆரியர்கள் சாமி கடவுள் எனக்கூறி அனைத்தும் வேதங்களால் கட்ட மைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி நம்முடைய பண் பாட்டை சிதைத்தனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறி தமிழனை கோவில் கட்ட வைத்து விட்டு அந்த கோவிலில் தமிழனை வெளியே நிறுத்தியவர்கள் பார்ப்பனர்களே என்று பார்ப்பன பண்பாட்டு படையெடுப் புகள் என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.
தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் படித்தவர்கள் உயர் பதவி களில் இருப்பவர்களுக்கு பிடிக்காத பேய், அவர்களுக் கெல்லாம் வராத சாமி ஏன் பாமர மக்களிடம் வருகிறது? எந் நேரமும் கோவிலிலே கடவுளுக்கு அருகிலேயே இருக்கும் பார்ப்பனர்களை சீண்டாத சாமி பாமரர்களை ஆட்டுவது ஏன் என்ற கேள்விகளை கேட்டு அதெல்லாம் மூடநம்பிக் கையே என்பதை உணர்த்தி, பேய் ஆடுதல், சாமியாடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், "60 ஆண்டுகள் பத்திரிகை" துறையில் ஆசிரியராகப் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்தவர் ஆசிரியர் கி.வீரமணி, இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடைபெறும் போது அதனை அடித்து நொறுக்கி அதற்கான சட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி தந்தவர் தான் ஆசிரியர் வீரமணி. கல்வி வேலை வாய்ப்புகளில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த தலைவர் தான் ஆசிரியர் வீரமணி, பெரியாருக்கு பின் 50 ஆண்டு காலம் திராவிடர் கழகத்தை வழிநடத்தி மக்களுக்கு 90 வயதிலும் தொண்டு செய்யும் தலைவர் ஆசிரியர் வீரமணி, இவற்றுக்கெல்லாம் மேலாக என்னை வழிநடத்தும் தலைவர் ஆசிரியர் வீரமணி தான் என்று இன்றைய முதலமைச்சர் சொல்லும் தலைவர் தான் நமது ஆசிரியர் வீரமணி" என்று "தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
சமுதாயத்தில் மனித நேயமும் சமத்துவமும் மலர வேண்டும் - ஜெயக்குமார் உரை
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வளமாக வாழ்கிறார்கள். எப்படி என்றால் சாதாரண மக்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தது முதல் அது பெரியவனாகி வளர்ந்து வயதாகி இறக்கும் வரை பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள், பல்வேறு விரதங்கள் - மாதம் ஒரு திருவிழா-கிடா வெட்டு அது இல்லாமல் பல்வேறு கோவில்களுக்கு சென்று வருதல் போன்ற காரியங்களால் மக்கள் தங்களுடைய வருமானத்தில் அய்ம்பதில் இருந்து அறுபது சதவீத தொகையை செலவு செய்கின்றனர். பெரியார் கொள்கையை ஏற்றவர்களுக்கு அந்த செலவு அப்படியே மிச்சம். அப்படி பெரியாரால் பெற்ற அறிவின் காரணமாக கிடைக்கும் மிச்சத்தொகையை தனது குடும்பத்தை தாண்டி நம்மைச் சார்ந்த இந்த சமுதாய மக்களுக்கு பெரியார் கொள்கையை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இது போன்ற பெரியார்கள் பயிற்சிப் பட்டறை நடத்தி உங்களுக்கு நல்ல பல கருத்துக்களை அறியச் செய்கிறார்கள்.
தந்தை பெரியாரின் நோக்கம் இந்த சமுதாயத்தில் மனித நேயமும் சமத்துவமும் மலர வேண்டும் என்பதுதான். இங்கே பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் பெரியார் பிறப்பதற்கு முன்னும் பெரியார் பிறந்ததற்கு பின்பும் இந்த சமுதாயம் எப்படி இருந்தது என்ற கேள்வியை மனதில் எண்ணிப் பார்த்தால் இந்த இயக்கம் ஆற்றிய தொண்டினை உணரலாம். மனித வளத்தில் பெரும் பகுதி பெண்களே அந்தப் பெண்கள் சமுதாயத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள்? அவர்களின் நிலைமை என்ன என்பதை உணர்ந்து அவர் களுக்கான அங்கீகாரம் கிடைக்க உழைத்த தலைவர் தந்தை பெரியார் என்று பெரியார் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறி பயிற்சிப் பட்டறையை ஏற்பாடும் செய்த கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களை பாராட்டியும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுள்ள மாணவர் களை ஊக்கப்படுத்தியும் உரையாற்றினார்.
புத்தகங்களை படித்தால் சிந்தனை பெருகும் - வீ.அன்புராஜ்
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொண்டு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர் களிடம் பயிற்சிப் பட்டறை எப்படி இருந்தது என்ற கருத்தைக் கேட்டார். மாணவர்களும் புதிய பல கருத்துகளை அறிந் தோம். மூடநம்பிக்கைகளை விட்டொழிக்க நல்ல பல விளக்கங்களை தெரிந்து கொண்டோம் என்று கூறினர். மேலும் மாணவர்கள் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும், அதிலே பெரியாரை படிக்க வேண்டும், அறிவியல் மனப்பான் மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அனைத்திலும் கேள்வி கேளுங்கள்! அப்போது தான் சிந்தனை பிறக்கும் - இன்றைக்கு இது போன்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக் கிறது. எங்களுக்கெல்லாம் இது போன்ற வாய்ப்புகள் கிடைத்ததில்லை அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகுத்தறிவாளர்களாக மாறுங்கள். இந்த பயிற்சிப் பட்டறைக்கு உங்களை அனுப்பிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அதை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்துரை வழங்கினார்.
பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களின் கருத்து
கவுசல்யா - தனக்கு முன்பே பெரியாரைத் தெரியும் என்றும், இந்த வகுப்பின் மூலம் பெண்கள் வெளியுலகிற்கு சென்று சாதிக்க வேண்டும் என்ற உணர்ச்சியை பெற்றேன் என்றார்.
ரவிவர்மன் - இங்கு வந்ததன் மூலம் அனைவரும் சமம் - யாரும் மேலும் இல்லை கீழும் இல்லை என்பதை உணர்ந்தேன், இதுவரையில் பெரியார் ஹிந்து மதத்தை மட்டுமே திட்டினார் என்று எண்ணினேன் ஆனால் அவர் அனைத்து மதங்களையும் மூடத்தனங்களையும் எதிர்த்து பேசியுள்ளார் என்பதை அறிந்தேன் மேலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகளை இங்கே பட்டிய லிட்டனர் அதன் மூலம் அவர் மிகப்பெரிய தலைவர் என்பதை அறிந்தேன் என்றார்.
ஞானசுந்தரி - பெண்கள் சிரிக்கக் கூடாது வெளியே போகக்கூடாது என்கிற குடும்பத்திலிருந்து நான் இங்கு வந்தேன், இனி நான் சொல்வேன் பெண்கள் ஆணுக்கு நிகராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் மேற் கொள்வோம் என்று கூறினார்.
தமிழ்ச்செல்வன் - இந்த பயிற்சிப் பட்டறை மூலம் நிறைய கருத்துகளை தெரிந்து கொண்டேன் இதுவரை நாம் பார்த்த சமுதாயத்தின் மறுபக்கத்தை இங்கே தெரிந்து கொண்டேன், இதுபோன்ற பயிற்சிப் பட்டறை மீண்டும் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றார்.
துர்கா தேவி - தந்தை பெரியார் பெண்களுக்காக செய்த சாதனைகளை இங்கே புதிதாக கேட்டு அறிந்து கொண்டேன் என்றார்.
சான்றிதழும் - பரிசும்
திமுக தெற்கு மண்டல தலைவர் இரா.தனலெட்சுமி, திமுக கோவை தெற்கு பகுதி செயலாளர் இரா.கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சி கு.பே.துரை, திமுக மேனாள் பேரூராட்சி தலைவர் இராஜமாணிக்கம், திமுக முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்வில் சிறப்பாக குறிப்பெடுத்த மாணவர்களான ரவிவர்மன், தரன், பத்மப்ரியா, அமுதிக, தர்மேஷ் ஆகிய அய்ந்து மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆண்கள் 43 - பெண்கள் 23, கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் 25 பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் 41 என மொத்தம் 66 மாணவர்கள் பயிற்சிப் பெற்றனர் என்பது சிறப்புக்குரியது.இப்பயிற்சிப் பட்டறையில் மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளி முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ச.திலகமணி, பழ.அன்பரசு, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சி.பிரபாகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.சின்னச்சாமி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கு.தேவிகா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் ஞா.தமிழ்ச்செல்வன், மாநகர அமைப்பாளர் யாழ்.வெங்கடேசு, மதுக்கரை ஒன்றிய தலைவர் எட்டிமடை மருதமுத்து, சுந்தராபுரம் பகுதி கழக தலைவர் தே.குமரேசன், செயலாளர் பா.ஜெயக்குமார், வடவள்ளி பகுதி செயலாளர் வி.எம்.சி.ராஜசேகர், கணபதி பகுதி தலைவர் கவி.கிருஷ்ணன், பிள்ளையார்புரம் ஆனந்த், அருண், நா.குரு, ஆவின் சுப்பையா, கோபாலகிருஷ்ணன், செல்வகுமார், முத்து கணேசன், வேலாண்டிபாளையம் பிரபு. கா.பிரபாகரன். மே.பா.ரங்கசாமி, அ.மகேஸ்வரி, திருநாவுக்கரசு, கார்த்திக், பொள்ளாச்சி கழக மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் சிவராஜ், மாவட்டத் துணைத் தலைவர் செழியன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர செயலாளர் ஜா.திராவிட மணி நன்றி உரையாற்றினார்.
தொகுப்பு: முனைவர் வே.இராஜவேல், தஞ்சை
No comments:
Post a Comment