தகுதியுடைய சான்றோரே - ‘‘தகைசால் தமிழர்!!
தேர்தலில் கவசம் போல தமிழ்நாட்டை காத்திடுவார்!''
தொகுப்பு: வி.சி.வில்வம்
தஞ்சை, ஆக.4 "தகைசால் தமிழர் விருது" பெற்ற ஆசிரியர் அவர்களுக்குத் தஞ்சை பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்வி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ரோட்டரி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தஞ்சாவூர், திருச்சி, நாகை, மன்னார் குடி, திருவாரூர், கும்பகோணம் கழக மாவட்டங்களைச் சேர்ந்த இயக்கத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
முதல்வருக்கு மகிழ்ச்சியும்! நன்றியும்!!
‘‘எங்கள் தலைவர் தம் பிறந்த நாளைக் கூட கொண்டாட எங்களை அனுமதிப்பதில்லை. 75 ஆவது பிறந்த நாள் விழா டாக்டர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னையில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் மதிப்புறு டாக்டர் பட்டம் கொடுத்த போது, தஞ்சையில் வரவேற்பு கொடுத்தோம். அமெரிக்காவில் வாழ்நாள் சாதனை யாளர் விருது கொடுத்த போது, தமிழ்நாட்டில் இருந்து சற் றொப்ப 50 தோழர்கள் உடன் பயணமானோம்!
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூக நீதி நாள் என அறிவித்து பெரியாருக்குச் சிறப்பு சேர்த்தார்கள். இன்றைக்குத் தகைசால் தமிழர் விருது கொடுத்து தமிழர் தலைவருக்குப் பெருமை சேர்த்துள்ளார். முதலமைச்சர் அவர்களுக்குத் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்", என மாவட் டத் திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் பேசினார்.
விருது பெருமை கொள்கிறது!
‘‘ஆசிரியர் அவர்கள் பல விருதை பெற்றுள்ளார்கள். விருது வந்ததன் மூலம், அந்த விருதுதான் பெருமை கொள்கிறது. அய்யா அவர்களின் தொண்டு, தொடர்ந்து இந்தச் சமூகத்திற்குத் தேவை", என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயலுப்தீன் பேசினார்.
ஆசிரியர் அவர்களைக் காதலிக்கிறோம்!
‘‘ஆசிரியர் அவர்களே! எங்களைக் கட்டிப் போடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. "மெஸ்மெரிசம்" என்பார்களே, அந்த உணர்வு உங்களைப் பார்த்ததும் எங்களுக்கு ஏற்பட்டு விடு கிறது. பலமுறை நான் சொன்னது தான் ஆசிரியர் அவர்களே, நான் உங்களைக் காதலிக்கிறேன். தங்களின் உயர் தன்மை, பழகும் விதம், தனித்த பண்புகள், குணநலன் கள் போன்ற அனைத்தையுமே நாங்கள் நேசிக்கிறோம்!
தஞ்சாவூரில் நான் மேயராகவும், டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் துணை மேயராக இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் இந்தத் திராவிடர் கொள்கை தான்! பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் போன்றவர்களின் உழைப்பு தான் காரணம்!
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் தமிழ்நாட் டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது! ஆசிரியரின் பேனா முனைக்கு எப்போதுமே வலிமை அதிகம். இந்தியாவில் ஏற் பட்டுள்ள "இந்தியா" கூட்டணியையும் அவர்கள் வலுப்படுத்த வேண்டும்.
எத்தனை விருதுகள் வந்தாலும், அது ஆசிரியரை விட பெரிதல்ல! விருது கிடைத்த மறுநாளே தங்களைச் சந்திக்கிற வாய்ப்பைப் பெற்றோம். மகிழ்ச்சியும், நன்றியும் அய்யா", என மேயர் சண்.இராமநாதன் பேசினார்.
அத்தனைக்கும் தகுந்தவர் ஆசிரியர்!
‘‘எத்தனை விருதுகள் பெற்றாலும் ஆசிரியர் அவர்களுக்கு அத்தனையும் தகும். எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் சார்பிலும், தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத் தைகள் சார்பிலும் தகைசால் தமிழர் விருது பெற்ற அய்யா அவர்களுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என விசிக மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர் பேசினார்.
கால் மேல் கால் போட்டு
தேநீர் அருந்துகிறேன்!
நான் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவன். என் அப்பா, செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு நடப்பார்கள். நான் காரணம் கேட்பேன். அப்போது எனக்கு சிறு வயது. இப்போது காலம் மாறியிருக்கிறது. எனது ஊரில் உள்ள தேநீர் நிலையத்தில் கால் மேல் கால் போட்டு அமரலாம். நினைப்பதை எல்லாம் செய்ய முடியும். காரணம் பெரியார் தொடங்கி, ஆசிரியர், தொல்.திருமாவளவன் அவர்களின் உழைப்பு தான்.
நாம் அனைவரும் ‘விடுதலை' படிக்க வேண்டும். உலகில் எங்கு பிரச்சினை நேர்ந்தாலும் ஆசிரியரின் குரலை அங்கே காண முடியும். ஆங்கில நாளிதழ்களில் வரும் கட்டுரைகளை எல்லாம் அழகாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடு வார்கள்", என விசிக பொறுப்பாளர் வீரன் வெற்றிவேந்தன் பேசினார்.
‘விடுதலை' படியுங்கள்!
தெளிவு கிடைக்கும்!
‘‘பெரியாரை நாங்கள் பார்த்ததில்லை. ஆசிரியர் அவர் களையே பார்த்து வருகிறோம். நான் தினமும் ‘விடுதலை' வாசிக்கிறேன். அரசியல் ரீதியான சந்தேகங்கள் இருந்தால் உடனே நான் ‘விடுதலை'யில் தான் தேடுவேன். நமக்கான பதில் அங்கே இருக்கும்; ஒரு தெளிவும் கிடைக்கும்", என மாவட்டத் திமுக துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி பேசினார்.
உற்சாகம் அளிக்கும் விருது!
‘‘பெரியார் காலத்தை விட நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இந்துத்துவா தனது சனாதன கோட்பாட்டை வேகமாகப் பரப்ப முயற்சி செய்கிறது. நாமும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் கிடைக்கும் மாற்றம், இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும். திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த விருது அவருக்கு மேலும் உற்சாகம் கொடுக்கும்", என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் நீலமேகம் பேசினார்.
தகுதியுடைய சான்றோர்;
கவசம் போன்றவர்!
‘‘எங்கள் ஆசிரியருக்குக் கிடைத்த விருதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வீட்டில் ஒரு வருக்குக் கிடைத்த விருது போல உணர்கிறோம். தஞ்சை மாவட்டத் தோழர்களும், கட்சிப் பிரமுகர்களும் எப் போதுமே தங்கள் மேல் அலாதி பிரியம் வைத்திருப்பர். தகைசால் என்பதற்கு தகுதியுடைய சான்றோர், பண்புடை யோர், கவசம் போன்றவர் என்றெல்லாம் பொருள் வருகிறது.
பாஜகவை வளரவிட்டால் நம் தமிழ்நாடு நமக்குக் கிடைக்காமல் போகும். எனவேதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தகுதியுடைய சான்றோரான, ஆசிரியர் அவர்களை வரும் தேர்தலில் கவசம் போல இருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என இந்தத் தகைசால் விருதை அளித்துள்ளார்," எனத் தஞ்சை துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசினார்.
ஆசிரியர் பணிகள் வலிமையானது!
‘‘பூரிப்போடு இருக்கிறோம்! பல்வேறு கட்சி சார்ந்தவர்கள் இங்கு இருக்கிறோம். அனைவருக்கும் முதுகெலும்பாக இருப்பவர் ஆசிரியர் அவர்கள்! 1962 இல் கண்கொடுத்த வனிதம் எனும் ஊரில் பெரியார் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். அங்கு தான் ஆசிரியர் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை ஆசிரியர் பேச்சுகளை, எழுத்துகளைப் படித்து வருகிறேன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், படாடோபமும் இல்லாமல், பதவி சுகம் இல்லாமல் திராவிடர் கழகத் தோழர்கள் உழைத்து வருகிறார்கள். ஆசிரியர் விதைத்த விதை அப்படியானது. கடந்த 9 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதாவை எதிர்த்து ஆசிரியர் செய்து வரும் பணிகள் வலிமையானது. இன்றைக்கு "இந்தியா" கூட்டணி உருவாகி இருப்பது ஆசிரியர் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி. உங்கள் அரசியல் சிந்தனைகள் எப்போதும் விருப்பு, வெறுப்பற்றது", என இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் பேசினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்! முன்னதாக தொழில் நுட்பக் கல்லூரிக்கு வந்த ஆசிரியருக்கு கல்லூரி முதல்வர் மல்லிகா, பேராசிரியர் பர்வீன், மருத்துவர்கள் தமிழ்மணி, அருமைக்கண்ணு மற்றும் பலரும் சிறப்பு செய்தனர்!
No comments:
Post a Comment