தந்தை பெரியார்
தோழர்களே! இன்று இங்கு நடக்கும் இத் திருமணத்திற்கு சுயமரியாதைத் திருமணமென்றும் சீர்திருத்தத் திருமணமென்றும் சொல்லப்படுகிறது. சுயமரியாதைத் திருமணம் என்றால் சிலருக்குப் பிடித்த மில்லாமல் இருக்கலாம் என்று சீர்திருத்த திருமணம் எனச் சொல்லப்படுகிறது.
சீர்திருத்தம்
எப்படியிருந்தாலும் ஒன்றுதான். சீர்திருத்தம் என்றால் என்ன? இருக்கின்ற நிலைமையில் இருந்து மாற்றம் செய்வதையே சீர்திருத்தம் என்றும், நாகரிகமென்றும் சொல்லுகிறோம் என்றாலும், இந்தச் சீர்திருத்தமும் நாகரிகமும் வெறும் மாறுதலுக்காகவே ஏற்படுவதும் உண்டு. மற்றும் பல விஷயங்களில் சவுகரியத்தையும், நன்மையையும், அவசியத்தையும், பகுத்தறிவையும் உத்தேசித்து மாற்றப்படுவதும் உண்டு. மாறுதலும் சீர்திருத்தலும் மக்களுக்கும் உலகத்திற்கும் புதிதல்ல. உலகம் தோன்றிய நாள்முதல் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு மாறுதல் அடைந்து வந்திருக்கின்றது என்பதைச் சரித்திரங்களையும், பழைய சின்னங்களையும் பார்த்து வந்தால் நன்றாய் விளங்கும். அதுபோலவே மனித சமூகம் சகல துறைகளிலும் எவ்வளவு மாறுதல்கள் அடைந்து வந்திருக்கிறது என்பதும் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள் அடைந்து வந்திருக்கின்றது என்பதும் நம் குறைந்தகால ஆயுளின் அனுபவத்தைப் பார்த்தாலே தெரியவரும்.
மாறுதல்
மாறுதல் என்பது இயற்கையே ஆகும். மாறுதல் இல்லாமல் எந்தநாடும், எந்தச் சமூகமும், எந்த வஸ்துவும் இருக்கமுடியாது. இந்தக் கலியாணம் சுயமரியாதைக் கலியாணம் என்றும், இதில் பழக்கவழக்கங்கள், சாஸ் திரங்கள், சம்பிரதாயங்கள் ஒன்றும் கவனிக்கப்படுவ தில்லை என்றும், இதை புராண மரியாதைக்காரர்களும், வைதிகர்கள் என்பவர்களும் குற்றம் சொல்லலாம்.
வைதிகம்
சாதாரணமாக இந்நாட்டில் நடைபெறும் வைதிக கலியாணம் புராண முறைப்படி நடக்கும் கலியாணம் ஆகியவைகளைப் பற்றியே சிந்தித்துப் பாருங்கள். வைதிக பிரச்சாரத்துக்கும், வைதிகத்துக்குமாகவே உயிர் வாழ்வதாய் சொல்லிக் கொள்ளும் பார்ப்பன சமுகத் தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய கலி யாணங்களில் இப்போது எவ்வளவு சீர்திருத்தம், எவ் வளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டு புறப்பட்டு தூரத்தில் உள்ள கோவில்களுக்குப் போய் அங்கு கலியாணம் செய்துகொண்டு பகல் சாப்பாடு சாப் பிட்டுவிட்டு மாலை 6 மணிக்கு புறப்பட்டு வீடுவந்து சேர்ந்து விடுகிறார்கள். 3 - நாள், 5 - நாள், 7 - நாள், அப் பாசனங்கள், சடங்குகள் என்பவைகள் எல்லாம் எங்கே போய்விட்டன? பெரும்செலவுகள், ஆடம்பரங்கள், பலவகைப் பட்ட விருந்துகள் எல்லாம் எங்கே போய் விட்டன?
சென்னை
மற்றும் குருட்டு நம்பிக்கையும் மூடபக்தியும் பிறந்த ஊராகிய சென்னை முதலிய இடங்களில் நாயுடு, முதலியார், செட்டியார் என்று சொல்லப்படும் ஜாதி களும், வைதிக சிகாமணிகளும் சடங்குகளினாலும், வேஷங்களினாலும் தங்களைப் பெரிய ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுமான மக்கள் இன்று தங்கள் தங்கள் வீட்டிலேயே, ஒரே நாளில், ஒரு பகலில் ஒரு விருந்தில் கலியாணங்களை முடித்து விடுகின்றனர். இவைகள் எல்லாம் மனிதனில் எவனும் மாறுதலுக்கு ஆளாகாமல் இருக்கமுடியாது. காசிக்கும் ராமேஸ்வரத் துக்கும் நடந்து போனால்தான் புண்ணியம், குதிரை வண்டியில் போய், ரயிலில் போய், மோட்டாரில் போய், ஆகாயக்கப்பலில் மணிக்கு 300 மைல் வேகம் போகக் கூடிய நிலைமையை அடைந்துவிட்டான். இவனிடம் புராணத்தையும், வைதிகத்தையும் பேசினால் செல்லுமா என்றும் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே சிக்கிமுக்கிக் கல்லின் மூலம் விளக்கு வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த மனிதன் விளக்காகி, பந்தமாகி, பவர் லைட்டாகி, கியாஸ் லைட்டாகி, இன்று எலக்டிரிக் லைட் அதாவது ஒரு பொத்தானை அமுக்கினால் லட்சம் விளக்கின் வெளிச்சம் போன்ற பிரகாசத்தைக் கண்டுபிடித்து அனுபவித்து வருகிறான். இந்தக் காரியங்களையெல்லாம் புராணமும், வைதிகமும் தடுத்துவிடக் கூடுமா என்று பாருங்கள்.
திருமணம்
அதுபோலவே இந்தத் திருமணம் என்னும் விஷயத் திலும் முற்போக்கு ஏற்பட்டுத்தான் தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது. திருமணத்துக்கு 1000 சாத்திரமும், புராணமும் இருந்தாலும் அதை இனி மக்கள் நம்பிக் கொண்டும், ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. காலதேச வர்த்தமானத்துக்குத் தகுந்தபடி மாறிக்கொண்டு தான் வரும். அநேக தேசங்களில் கலியாணம் என்ற பேச்சே இப்போது அமலில் இல்லை. ஆணும், பெண்ணும் ஒன்றாகக் கூடித்தான் வாழ வேண்டும் அல்லது வாழ்க்கை நடத்தவேண்டும் என்கின்ற முறையும் இல்லை. இஷ்டப் பட்டால் இரண்டு பேர் கூட்டு வியாபாரம் செய்வதுபோல சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்துகிறார்கள். இஷ்டம் இல்லா விட்டால் தனித்தனியாக குடும்பத்தை நடத்து கிறார்கள். மேலும் குடும்பம் என்கின்ற தொல்லையே இல்லாமல் சுதந்திர மக்களாகவே இருக்கிறார்கள்.
ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து அனுபவிக்கும் இன் பத்தையும், உணர்ச்சி பரிகாரத்தையும், இரு சினேகிதர்கள் அனுபவிக்கும் சிநேக இன்பத்தைப் போலவும் இயற்கைக் கூட்டுப் போலவும் கருதி வாழுகின்றார்கள். இவை எல்லாம் மனிதன் அனுபவத்தினாலும், நாளுக்கு நாள் மனித னுடைய கஷ்டமும், கவலையும், தொல்லையும் குறைக்கப்பட்டு வர வேண்டும் என்கின்ற முயற்சியினாலும் தத்துவ விசாரத்தினாலும் ஏற்படும் காரியங்களேயாகும்.
சுயமரியாதை
ஆதலால் சுயமரியாதை என்கின்ற வார்த்தையைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. மனிதனுடைய பகுத்தறிவுக்கு மரியாதை கொடுப்பது தான் சுயமரி யாதையின் முக்கிய தத்துவம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் பகுத்தறிவினாலும் உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்றி உலகப் பழக்க வழக்கத் துக்கு - சாஸ்த்திரத்துக்கு - மதக்கட்டுப் பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின்மீது அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால் அதைத்தான் சுயமரியாதைக்கு விரோதம் என்று சொல்லு கிறோம். அதைத்தான் அடிமைத் தனம், சுதந்திரமற்றதனம் என்று சொல்லுகின்றோம்.
ஆதலால் எந்தக் காரியத்தையும் உங்கள் பகுத்தறி வையும் அனுபவப் பலனையும் அனுசரித்துப் பார்த்து நடக்க வேண்டும் என்கின்ற முறையிலேதான் இந்தச் சுயமரியாதைக் கலியாணம் என்பதும் ஆங் காங்கு செய்யப்பட்டும், பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகின்றதே ஒழிய வெறும் மாறுதலுக்காக என்று செய்யப்படவில்லை.
புராண மரியாதை
உங்களுடைய புராண மரியாதைக் கலியாணத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பு. ம. கலியாணத்தின் முதல் தத்துவமே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் - சுதந்திர மற்றவர்கள் - மனிதத் தன்மைக்கு அருகதை யற்றவர்கள் என்பவற்றை நிலை நிறுத்துவதற்காகச் செய்யப்படும் சடங்குகள் அல்லது காரியம் என்பது எனது அபிப்பிராயம். உதா ரணமாக கன்னிகாதானம், பெண் கொடுத்தல், பெண் வாங்குதல், தாலி கட்டுதல் முதலிய வார்த்தைகளாலும் புருஷனுக்குக் கொண்ட வன், கொண்டான் என்று சொல்லப்படுகின்ற வார்த் தைகளாலும் பெண் அடிமையாகப் பாவிக்கப் படுகிறது என்பதை உணர லாம்.
இந்தச் சுயமரியாதைக் கலியாணம் என்பதன் முக்கிய தத்துவம் கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வோ, தாழ்வோ இல்லையென் பதும் சகல துறைகளிலும் சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுமே யாகும்.
மற்றும் வைதிகப் புராண முறைக் கலியா ணத்தில் மதம், ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் முதலியவற்றைக் கவனிப் பதே முக்கியமாய் இருப்ப தால் ஆண், பெண் பொருத்தம் சரியாய் ஏற்படுவதில்லை. குலத்தில் ஒரு குரங்கை கொள், பாத்திரமறிந்து பிச்சை கொடு, கோத்திர மறிந்து பெண் ணைக் கொடு என்றும் பழமொழிகளைப் பார்த்தாலே குலம், கோத்திரம், ஜாதி, வகுப்பு முதலியவைகளுக்குள்ள நிர்ப்பந்தங்கள் நன்றாய்த் தெரியும். இதன் பயனாய் அநேகக் கலியாணங் களில் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை இல்லாமலும், மாப்பிள்ளைகளுக்கு ஏற்ற பெண் இல்லாமலும், நாயும், பூனையும் போல் ஜோடிகள் சேர்ந்து விடுகின்றன.
சுயமரியாதைக் கலியாணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் என்பனவை கவனிக்கப்படாமல் மணமக்களு டைய யோக்கியதாம்சங்களையே கவனித்துப் பார்க்கப்படு கின்றன.
வைதிகக் கலியாணத்தில் வயதுக்கிரமங்களை தக்க பருவங்களை முக்கியமாய் கவனிப்பதில்லை. தக்க பருவம் வருவதற்கு முன்பு பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகின்றது. உதா ரணமாக 10 வயது வந்தால் ஒரு பறையனுக்கு பிடித்துக் கொடு என்று சொல்லும் பழமொழியைப் பார்த்தால் விளங்கும். 50, 60 வயதான ஆண் கிழத்துக்கு 10, 12 வயது பெண் குழந் தையைப் பிடித்து தாலிகட்டி விடுகிறார்கள். கலியாண விஷயத்தில் ஆண்களுக்கு கிழம் என்பதே இல்லையாம்.
இந்த விஷயத்திலும் சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும்.
மற்றபடி புராணக் கலியாணங்களில் நாள் பார்ப்பது, கோள் பார்ப்பது, சடங்குகள் செய்வது, அதிகச் செலவுகள் செய்வது முதலிய காரியங்களால் கலியாணக்காரர்களுக் குத் தாங்க முடியாததும், விலக்க முடியாததுமான பல அசவுகரியங்கள், செலவுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாகப் புரோகிதன் அதிகாலையில் நாலரை மணி 5 மணி, 6 மணிக்கு முகூர்த்தம் வைத்துக் கொடுத்து விடுகிறான், இதனால் இரவெல்லாம் தூக்கமில்லாமல் கலியாணத்துக்கு வந்த ஜனங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். பல்லு விளக்காமல், கால், கை கழுவாமல், வெளிக்கும் போகாமல் நித்தியக் கடன்களைக் காலா காலத்தில் கழிக்க முடியாமல் மக்கள் அவஸ்தைப்படுவதும் மற்றும் மக்கள் பழக்கவழக்கமெனும், சடங்கு, ஆடம்பரம் முதலியவை களால் கலியாணக்காரர்களுக்குச் சகிக்க முடியாத தொல்லைகளும், தாங்க முடியாத கடன்களும் ஏற்பட்டு அக்குடும்பங்கள் ஒன்று, இரண்டு வருஷங்களுக்கும் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி வேதனைப்படுவதுமாக இருந்து வருகின்றது.
சுயமரியாதைக் கலியாணத்தில் எல்லோருக்கும் சவுகரியமான நேரமும், மிகவும் சுருக்கமான செலவும் கொண்டு நடத்தப்படுவதோடு அனாவசியமான அர்த்த மற்ற சடங்குகளையும் ஒழித்து நடத்தப்பட வேண்டு மென்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லாம் கலியாணத்திற்கு ஏதாவது பலக்குறைவோ, கெடுதலோ ஏற்பட்டுவிடும் என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை. கலியாணத்துக்கும், ஜாதி, மதம், சடங்கு, நேரம், காலம், குலம், கோத்திரம் ஆகியவைகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
புராண மரியாதையால் என்ன பயன்?
நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படி யெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களே யானால் ஒட்டு மொத்தம் பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவைகளுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர் களின் கஷ்டத்தையும், அனுபவிக்கும் வேதனைகளையும் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப் பெற்ற தெய்வீகக் கலியாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள். 20 வயதுக்குட்பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண்டிருக்க வேண்டும் இது தெய்வீக மதத்தின் பலனா? அல்லது அசுர மனத்தின் பிசாச மனத்தின் பலனா என்று யோசித்துப் பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாஸ்திரம் என்கின்ற வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந்திரத்துக்கும், ஜென்ம விரோதியான வார்த்தை களாகும். ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக்கும் இடமில்லை. இந்தக் காரணங்களால்தான். பழமை விரும்பிகள், வைதிகர்கள் பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்க மென்றாலும், சுயமரியாதைக் கலியாணமென்றாலும் முகத்தைச் சுழித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமுகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.
ஆகையால்தான் இந்தப் பிரச்சாரம் செய்து வரு கின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன் றோருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக் காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் இதனை, கவனித்து நன்றாய் சிந்தித்துப் பாருங்கள், நன்மையைக் கைக்கொண்டு பகுத் தறிவு வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உதவி புரியுங்கள் என்ற கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களைக் கூறி ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டிக் கொள்ளுகிறேன்.
(22.09.1934 கோவை சுயமரியாதை சங்கத்தின் ஆதரவினால் தோழர் என். கிருஷ்ணசாமிக்கும் - வி. லட்சுமிக்கும் நடைபெற்ற சுயமரியாதை திருமண சொற்பொழிவு)
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
No comments:
Post a Comment