கடைசியாக நம் - அதாவது, பார்ப்பனரல்லாத - வாலிபர்களுக்கு நாம் ஒன்று தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகின்றோம். வாலிபப் பருவம் அபாயகரமான பருவம். சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய வஸ்து போல் மிகப் பத்திரமாய்க் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். அப்பருவத்தை பொறுப்பற்ற, பயனற்ற, சுயநல, நிலையற்ற தற்கால விளம்பர காரியங்களுக்கு அடிமைப் படுத்தி விடாமலும், பின்னால் சலிப்பும் துக்கமும் பட வேண்டிய காரியங்களுக்குப் பந்தகப்படுத்தி விடாமலும், நன்றாய் ஆய்ந்து ஓய்ந்து பார்த்து அவசியமானதும், நிலையானதும், காரியத்தில் செய்யவும் பயனளிக்கவும் கூடியதுமான காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டுகிறோம்.
புதிய சீர்திருத்தம் என்பது வெறும் உத்தியோகமயமும், பதவிமயமுமேயாகும். இந்நிலையில் பார்ப்பனரல்லாத ஏழை மக்கள், தொழிலாளி மக்கள் முதலியவர்களிடமிருந்து அரசியல் பேரால் கோடிக்கணக்காய் பொருள் பறித்து நாட்டிற்கு, சமூகத்துக்கு யாதொரு பயனும் இல்லாத புல்லுருவி போலும் சமூகத்தை அழிக்கும் க்ஷயரோகக் கிருமி போலும் வாழ்ந்து வரும் பார்ப்பன சமூகமும் அவர்களது கால்களை அலம்பிக் குடித்து உயிர்வாழும் அவர்களது அடிமைகளும் அனுபவிக்கவும் வாழவும் விட்டுவிட்டு அதைப் பார்த்துக்கொண்டு உயிர்வாழ்வது போன்ற இழிநிலையும் சுயமரியாதை அற்ற தன்மையும் உலகில் வேறு இல்லை என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
பார்ப்பனரல்லாதாரின் ஒவ்வொரு குடும்பத்திலும் இன்று 2, 3, 4 பிள்ளைகள் படிக்கின்றன. வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி வாழ்க்கையைச் சுருக்கி பிள்ளைகள் படிப்பிக்கப்படுகின்றன. எல்லாம் ஒரே ஒரு அதாவது, அது சரியாய் இருந்தாலும் தப்பாய் இருந்தாலும் உத்தியோகம் என்னும் ஒரே ஒரு காரியத்தை உத்தேசித்தே (100க்கு 90 பிள்ளைகள்) படிப்பிக்கப்படுகின்றன.
இன்று இப்படிப்பட்ட குடும்பக்காரர்கள் தேசாபிமானம்-சமதர்ம வீரம் என்னும் பேர்களால் அவற்றின் போதையால் பார்ப்பனர்களே சீர்திருத்தத்தில் உள்ள உத்தியோகம், பதவி, அதிகாரம் ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்த இடம்கொடுத்து விட்டால் பிறகு இக்குழந்தைகள், இக்குடும்பங்கள், இவர்களது பின் சந்ததிகள் ஆகிய வைகளின் யோக்கியதை என்ன ஆவது என்பதையும், இச்சமூகம் மறுபடியும், தலையெடுக்க எத்தனை காலம் ஆகும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
ஆகையால், ஒவ்வொரு முக்கிய பட்டணங்களில், ஸ்தலங்களில் உள்ள முக்கிய கவலை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் திருச்சி கூட்டத்திற்கு வரவேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
இக்கூட்டம் நடைபெறுவதற்கு திருச்சி தோழர்கள் கே.ஏ.பி. விஸ்வநாதமும், டி.பி. வேதாசலமும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொண்டு அவற்றிற்கான உதவி செய்து வருவதை நாம் மனமாரப் பாராட்டுவதோடு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- ‘விடுதலை’ - 29.04.1936
No comments:
Post a Comment