பள்ளிகளில் காலை உணவளிக்கும் முதலமைச்சரைப் பாராட்டி தமிழர் தலைவர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

பள்ளிகளில் காலை உணவளிக்கும் முதலமைச்சரைப் பாராட்டி தமிழர் தலைவர் அறிக்கை

 "சனாதனம்" கல்விக் கண்களைக் குத்தியது! 

"திராவிடம்" பசி தீர்த்து, கல்விக் கண்ணொளியைப் பரப்புகிறது!!

இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி  - புரிந்து கொள்வீர்!

படிக்காதே என்றது சனாதனம், பசியைப் போக்கி மாணவர்களைப் ‘படி படி’ என்பது திராவிட மாடல் அரசு! முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு சில ஆண்டுகளுக்குமுன் 1912 ஆம் ஆண்டு முதலே, டாக்டர் சி.நடேசனார், அவரைப் போன்ற சில வழக்குரைஞர்களான பெருமக்கள் கூடி, சென்னை கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு மற்ற விடுதிகளில் தங்கி, படித்திட வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், வசதியற்ற நிலையாலும் அவர்களே ‘திராவிடன் விடுதி'யைத் திருவல்லிக்கேணியில் நடத்தி, பலருக்கும் - ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்விக் கண் திறந்தனர்.

சூத்திரனுக்குக் கல்வி கிடையாது 

என்றது மனுதர்மம்

சூத்திரனுக்கு, பஞ்சமனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்குப் படிப்பு - கல்வியைத் தரக்கூடாது என்கிற மனுதர்மத்தை நடைமுறைப் படுத்திய வரலாறு -  அரசர்கள் காலத்தில்கூட மனுநீதிப்படி பார்ப்பன பிள்ளைகளுக்கே படிக்க வசதி - மற்றவர்களுக்கு அல்ல.

மதுரை நாயக்கர் ஆட்சியில், இத்தாலியப் பாதிரியார் ராபர்ட் டி நொபிலி என்பவர் வந்து, பார்த்தறிந்த முதல் தகவலில் 10 ஆயிரம் பிள்ளைகள் - பார்ப்பனர்கள் சமஸ்கிருதக் கல்வியைத் தான் படித்தார்கள் என்று குறிப்பிட்டார். (1610ஆம் ஆண்டு)

அதை மாற்றி ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி, சுகாதாரம், பகுத்தறிவு, பெண்ணுரிமை தருவதற்குப் பிறந்ததே ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சி ஆகிய திராவிடர் கட்சியும், சுயமரியாதை இயக்கமும்!

நீதிக்கட்சியின் உணவுத் திட்டம்

சர் பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாகாணத்தின் தலைவராக (மேயர் என்பது அப்போது இல்லை) சென்னை கார்ப்பரேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒருவேளை உணவு தரும் திட்டத்தினை தொடங்கினார். சில காலம்தான் நடத்த, பிரிட்டிஷார் அரசு அனுமதித்தது. பிறகு நிதி வழங்க மறுத்ததால், அத்திட்டம் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று; அரசுக்கு முழு அதிகாரம் அப்போது இல்லை!

அதன் பிறகு கல்வி வள்ளல் காமராசர் பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கி, சிறப்பாக நடத்தி, ஏழைப் பிள்ளைகள் படிப்பைத் தொடரச் செய்தார்!

ஏழைப் பிள்ளைகள், கிராமங் களில் உள்ளவர்கள், ஒடுக்கப் பட்டோர் சமூகப் பிள்ளைகள் இதனால் மேலும் படித்து முன்னேற படிக்கட்டாகி ‘கிரியா ஊக்கி'யாக இந்த பகல் உணவுத் திட்டம் உதவியது!

அன்று கல்வித் துறை இயக்கு நராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு போன்ற நேர்மையும், ஆளுமையும் நிறைந்த பல அரசு அதிகாரிகள்  இத்திட்ட வெற்றிக்குக் கடுமையாக உழைத்தனர்.

கலைஞர் காலத்தில் மேலும் மேம்பட்டது

எம்.ஜி.ஆர். ஆட்சியில் அ.தி.மு.க. ஆட்சியில் அது மதிய உணவு - சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் தொடர்ந்தது.

கலைஞர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அதை உண்மையான சத்துணவாக்கிட இரு முட்டைகள் அல்லது வாழைப் பழங்கள் அளித்து மேலும் குழந்தைகள் பசி தீர்ப்பதோடு, ஊட்டச் சத்துப் பெருக்கத்திற்கும் உதவி, பிள்ளைகள் நலம் பெறுவதற்கும் உதவும் திட்டத்தை மேலும் மெருகேற்றினார்.

‘திராவிட மாடல்' ஆட்சி - இன்று நமது ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இரண்டு ஆண்டுகளைத் தாண்டும் ஆட்சியில், பகல் உணவோடு கூடவே காலைச் சிற்றுண்டியும் முதல் கட்டமாக சில அரசு பள்ளிகளில் வழங்கியதை கலைஞர் நூற்றாண்டையொட்டி (25.8.2023) நாடு முழுவதிலும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அரிய பசி தீர்த்து படிப்பு தரும் புதுமையான திட்டத்தை கலைஞர் படித்த சிற்றூரான திருக்குவளையில் தொடங்கி வைத்துள்ளார்.

தி.மு.க. ஆட்சி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மகுடத்தில் ஜொலிக்கும் மற்றுமோர் வைரக்கல்.

“புசியுங்கள் - படியுங்கள்!”

‘‘படிங்க, படிங்க, படிங்க'' என்று முன்பு சொன்னபோது, கிராமத்து ஏழை மாணவர்கள் மாடு மேய்த்த நிலையில், ‘‘பசிங்க, பசிங்க'' என்று இருந்த நிலையில், காமராஜர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து ‘‘புசிங்க, புசிங்க'' என்று செய்த ஏற்பாடு இன்றைக்கு. அத்திட்டம் மேலும் விரிவடைந்து, சத்துணவாக்கி, அடுத்து முக்கியமாக காலைச் சிற்றுண்டிமூலம் பசியோடு படிக்காமல், அவர்தம் பசியாற்றிவிட்டு, கற்க வரும் பிள்ளைகளை வகுப்பறையில் அமர வைத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது ஒரு மாபெரும் கல்விப் புரட்சியாகும்!

பல மாணவர்கள் காலைச் சிற்றுண்டி இல்லாமல் வகுப்பறைக்கு வந்து, கவனக்குறைவுடனும், பசி காரணமாகவும் மயக்கமுற்றும், 'இளமையிற்கல்' என்பதற்கு வாய்ப்புக்கேடு ஏற்படுவதாகவும் இருந்தது. இதன்மூலம் இந்தியாவிற்கே ‘திராவிட மாடல்’ ஆட்சி - பெரியார் மண்ணில் நடைபெறும் திராவிட நாயகரின் ஆட்சி சாதனை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கே வழிகாட்டிடும் கலங்கரை வெளிச்சமாகும் - கல்வித் திட்டமாகும்.

வசதி படைத்தவர்களிடம் நன்கொடை பெற்று 

ஓர் அறக்கட்டளையாகக்கூட ஆக்கலாம்

நிதிப் பற்றாக்குறை ஆட்சியின் குரல்வளையை நெருக்கிடும் நிலையில், இதற்கு முன்னுரிமை கொடுத்து, இத்திட்டத்தால் 17 லட்சம் அரசு பள்ளி மாணவச் செல்வங்கள் புத்துணர்ச்சி பெற்று கல்விக் கூடத்தை அலங்கரிக்கிறார்கள். இத்திட்டத்தினைக் கொண்டு வந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதற்கென ஒரு தனி நிதியத்தை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி, அறக்கட்டளையாக்கி, மக்களில் வசதி படைத்தவர்கள் நன்கொடைகளை அளித்து எல்லாப் பள்ளிகளிலும், தனியார்  நடத்தும் பள்ளிகளிலும்கூட அவர்கள் பொறுப்பில் காலைச் சிற்றுண்டியைப் பிள்ளைகளுக்கு வழங்கலாம். உணவுத் தரத்தில் சமரசம் கூடாது; தூய்மை உள்பட!

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி

அதிக தூக்கம் பிள்ளைகளுக்கு வராத உணவாகவும், நிபுணர் களால் திட்டமிட்டு வழங்கி முழுப் பயன் கிட்ட மேலும் மெருகேற்ற வேண்டும்.

வாழ்க முதலமைச்சர் - வளர்க ‘திராவிட மாடல்’ ஆட்சி!

"சனாதனம்" கல்விக் கண்களைக் குத்தி குலக்கல்வியைத் திணிக்கிறது.

"திராவிடம்" பசி தீர்த்து பசுமையான கல்விக் கண்ணொளியைப் பரப்புகிறது.

இதுதான் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு! புரிந்து கொள்வீர்!!


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
26.8.2023


No comments:

Post a Comment