பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!

கவிஞர் கலி.பூங்குன்றன்

4.8.2023 அன்றைய தொடர்ச்சி...

சோதிடத்தில் நம்பிக்கையில்லை

அறிவியலின் முன் ஜோதிடம் நிற்காது. அடிப்படை யற்றது: மிகுந்த மடமை நிறைந்தது சோதிடமே என்று 19 நோபல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்தப் பட்டியல் இதோ:

1. நேஹன்லி ஏ. பெத்தே இயல்பியல் எமிரடஸ் பேராசிரியர், காரனல் 

2. சர் பிராங்கிஸ் கிரிக், மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து 

3. சர் ஜான் எக்கின்ஸ், மதிப்பிற்குரிய உடலியல் உயிரியல் பேராசிரியர், பபல்லோவில் உள்ள கனி

4. ஜெரார்ட் ஹெர்ஸ் பெர்க் மதிப்பிற்குரிய ஆய்வு விஞ்ஞானி, கனடா தேசிய ஆய்வுக் கவுன்சில், 

5. வாசிலி வெணோடிப், பொருளியல் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக் கழகம் 

6. கோளார்ட் லோதென்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர், ஆஸ்திரிய அறிவியல் அகாடமி

7. ஆண்ட்ரி எம் லோப், கவுரவ பேராசிரியர், பாஸ்டர் நிறுவனம். பாரிஸ்

8. சர் பீடர் மெடாவர், மருத்துவ ஆலோசனைக் கவுன்சில், மிடில்செக்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து 

9. ஏ. ராபர்ட் எஸ். முல்லிகள், மதிப்பிற்குரிய வேதியியல் பேராசிரியர், சிகாகோ பல்கலைக் கழகம்

10. லைனஸ் பாலிங், வேதியியல் பேராசிரியர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம்.

11. எட்வர்ட் எம் புச்சல், ஜெரார்டு கேடு பல்கலைக் கழகப் பேராசிரியர்: ஹார்வர்டு பல்கலைக் கழகம்

12 பால் ஏ. சாமுவேல்சவ் பொருளாதாரப் பேராசிரியர், எம்.அய்.டி.

13. ஜூலியான் கவிங்கள், இயற்பியல் பேராசிரியர், கவிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்செல்ஸ்

14. கிளவுன் டிஸ்டீல் பெரிக் பல்கலைக் கழகப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்லி

15. ஜே டின்பெர்கள், எமிரடஸ் பேராசிரியர், நாட்டர்டேம், 

16 என்டின்பெர்கன், மிருகங்களின் பழக்கம் பற்றிய எமிரடஸ் பேராசிரியர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம்

17. ஹெரால்டு சி.க.ரே. எமிரடஸ் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக் கழகம், சான்டியாகோ.

18. ஜார்ஜ் வால்டு, உயிரியல் பேராசிரியர், ஹார்வர்டு பல்கலைக் கழகம்,

19. எஸ். சந்திரசேகரன், பேராசிரியர், சிகாகோ பல்கலைக் கழகம்,

மற்றும் 167 முன்னணி விஞ்ஞானிகள்

(1975 செப்டம்பர் - அக்டோபர் இதழ் 'ஹுமனிஸ்ட்' அமெரிக்க இதழில் வெளியானது)

ஜோதிடம் முற்றிலும் மடமையானது 

உலகின் பத்து பேரறிவாளர்களைக் கூட்டி அவர் களிடம், தற்போதுள்ள மிகுந்த மடமை நிறைந்தது எது. எனக் காணக் கேட்டால், ஜோதிடரை விட மோசமான முட்டாளைக் காண அவர்களால் இயலாது. இது டேவிட் ஹில்பெர்டின் கருத்து. (உலகின் மாபெரும் கணிதவியலாளர்களில் ஒருவர் இவர்)

நன்றி: " ஹுமனிஸ்ட்" 

செப்டம்பர் / அக்டோபர் 1975)

அன்னை தெரசாவின் நிலை என்ன? 

அன்னை தெரசாபற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கத்தோலிக்கரான அவரின் சமூக அறத்தொண்டினைப் போற்றும் வகையில் நோபல் பரிசும் அளித்து கவுரவிக்கப்பட்டார். அவரே கடவுள் நம்பிக்கையற்றவராகத் திகழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து 'தி இந்து' ஏடு (30.11.2002) விரிவான செய்தி ஒன்றினை வெளி யிட்டது. அதன் விவரம் இதோ: 

கடவுள்பற்றிய நம்பிக்கையில் அன்னை தெரசா வுக்கு அய்யப்பாடு இருந்தது என்பது உள்ளிட்ட கடி தங்கள் கொண்ட நூல் ஒன்று வெளிவர உள்ளது.

அன்னை தெரசா மறைவிற்குப் பின்னர் அவரைத் தூய துறவியாக்குவதில் போப் பாண்டவர் விரைந்து செயல்பட்டார். இந்நிலையில், அன்னை தெரசா அய்ம்பதாண்டு காலம் நம்பிக்கை நெருக்கடியில் உழன்றார் எனும் செய்தி வெளியாகி யிருக்கிறது. 

கன்னியாக வாழ்ந்த வரும். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரசா தமது மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராக அறிமுக மாகியிருந்தார். ஆனால் அவருடைய மடல்களும், நாள் குறிப்புகளும் அவரைப்பற்றிய முற்றிலும் மாறான ஒரு படப்பிடிப்பைத் தருகின்றன.

இப்பொழுது தெரிய வந்துள்ள உண்மையை உள் ளடக்கும் பொருட்டு, அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறுகள் மாற்றியெழுதப்பட வேண்டியிருக்கும் என 2002 நவம்பர் 28-இல் வியாழனன்று ரோம் நகரில் கூறினார். இதற்குமுன்பு வெளிவராத செய்திகள் இத்தாலியில் ஒரு நூலாக வெளியிடப்பட இருக்கின்றன. கொல்கத்தாவில், தமது 87-ஆவது வயதில் அந்த அம்மையார் மறைந்த பின்பு கத்தோலிக்க அதிகாரிகள் அந்தச் செய்திகளைத் திரட்டினர்.

கொல்கத்தாவில் ஏழைகளிடையே அன்னை தெரசா பல ஆண்டுகள் பாடுபட்டார். 1955-இல் அவர் இவ்வாறு எழுதினார்:

"பல துயரங்களை மறைக்கும். ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப் பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால், என்னு டைய மத நம்பிக்கை எதிர்காலத்தைப்பற்றிய என் நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி யிருப்பதும் என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்ப தாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார்."

வேல்ஸ் இளவரசி டயானாவினால் பெரிய அள வில் மெச்சப்பட்ட அன்னை தெரசா, தமது மற்றுமொரு மடலில் இவ்வாறு எழுதினார்:

“இறை (நம்பிக்கை)யை இழந்து பரிசோதனை செய்யும் காரணத்தால் நரகத்தில் தள்ளப்படுவோர் முடிவற்ற காலம் தண்டனைக்குள்ளாகித் துயர்ப்படு கிறார்கள். என்னுடைய சொந்த உள்ளத்தில் (ஆன்மா' வில்) இந்த இறை (நம்பிக்கை) இழப்பின் பயங்கரத் துன்பத்தை உணர்கிறேன். கடவுள் என்னை விரும்ப வில்லை என உணர்கிறேன், கடவுள், கடவுளே அல்லர் என்றும். உண்மையில் அவர் இல்லை என்றும் உணர்கி றேன்."

ரோம் நகரத்தில் மிகப் பெருவாரியாகப் படிக்கப் படும் நாளிதழ் `இல்மெஸ் ஸக்கரோ" என்பது அவ் விதழ் இவ்வாறு குறிப்பிடுகிறது:

"உண்மையான அன்னை தெரசா, ஓராண்டுக்காலம் அகப்பார்வைகள் (உள்ளக் காட்சிகள்) கண்டவராகவும், அடுத்த அய்ம்பதாண்டுகள் - தாம் சாகும் வரை அய்யப்பாடுகள் கொண்டவராகவும் வாழ்ந்தார்." கொல்கத்தாவில் வசதி மிகுந்த பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், அகப் பார்வைகள் (உள்ளக் காட்சிகள்) கண்ட பின்பு. அப்பணியில் இருந்து விலகிக் கொண்டு, இந்தியாவின் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்த பின்புதான் அவருடைய அய்யப்பாடுகள் கொண்ட வாழ்வு தொடங்கிற்று.

கத்தோலிக்க மதத்தவர்களுக்குத் தலைமையிடமாக இருப்பது வாடிகன். அங்கு செயல்பாட்டில் உள்ள விதியின்படி, இறந்து விட்ட ஒருவரை தூய துறவி என அறிவிப்பதற்கான புலனாய்வு, அவர் இறந்து அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால். அய்ந்தாண்டுகள் முடிவதற்கு முன்பே புலனாய்வு தொடங்கலாம் என அன்னை தெரசா விடயத்தில் விதியைப் போப்பாண்டவர் தளர்த்தினார். நினைவுபடுத்தக்கூடிய அண்மைக் கால வரலாற்றில் இந்த விதி தளர்த்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.

"அன்னை தெரசாவின் ரகசியம்" எனும் பொருளில மைந்த தலைப்பில் அவருடைய சொந்த வரைவுகள் (எழுத்துகள்) நூலாக வெளியிடப்படுகின்றன.

உலகத் கத்தோலிக்க மதத்தின் தலைவரும். வாடிகன் நகரின் ஆட்சியாளருமான போப் ஜான்பால் 1996-ஆம் ஆண்டில் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டார். 

புதிய அறிவு-பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வின் கொள்கையைப் பள்ளியில் போதிக்க வேண்டும் என்று கூறினார் என்ற தகவலை வெளியிட்டதும் 'இந்து' ஏடுதான் (20.10.1996)

19-ஆம் நூற்றாண்டில் பிறந்த டார்வின் சார்லஸ் ராபர்ட் (1809-1882) என்பவரின் பரிணாமக் கொள் கையை எந்த கத்தோலிக்கம் எதிர்த்து, அவருக்குத் தண்டனை வழங்கியதோ அதே கத்தோலிக்க மதத்தின் உலகக் குரு தவறை உணர்ந்து, பகுத்தறிவின் பக்கம் உள்ள நியாயத்தை ஒப்புக் கொண்டார்..

உலகம் உருண்டை என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவின் விஞ்ஞான உண்மையை கத்தோலிக்க மதபீடம் கடுமையாக எதிர்த்தது; கடுத்தண்டனையும் விதித்தது. 

360 ஆண்டுகளுக்குப்பின் இதே போப் ஜான்பால், கலிலியோவின் கண்டுபிடிப்பினை ஏற்றுக் கொண்டார். 

உலகம் உருண்டை என்பது எப்படி உண்மையோ கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்பதும் உண்மை என்பதற்கான ஆதாரமும், சித்தனை உறுதிகளும் உலகப் பந்தில் மேம்பட்டு வருகின்றன.

கடவுள் மறுப்பு என்பதைக் காரணியாகக் கொண்டு மக்கள் சமூகத்தில் ஒப்புரவு நிலைக்கு ஓயாது உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகள் நாளும் வெற்றி முகம் காட்டி வீறுநடை போடுகின்றன! நாளை உலகம் - பெரியார் தம் பகுத்தறிவுச் சிந்தனையின் வார்ப்பாக அமையும் என்பதை அறிவு ரீதியாகக் கணிக்கலாம்.

முற்றும்


No comments:

Post a Comment