பார்ப்பனர்களின் குல தர்மப்படி பிச்சை எடுப்பார்களா?
குடியாத்தம் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுப்பிய அதிரடிக் கேள்வி!
குடியாத்தம்,ஆக.28- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு, பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழாவாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் 27.08.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சுயமரியாதைக்காரர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, பெரியார் பெருந்தொண்டர் களுக்கு பாராட்டு விழா என்கின்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத் தலைவர் இர.அன்பரசன் தலைமை யேற்றார். மாவட்டச் செயலாளர் உ.விஸ்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.
தி.மு.க. குடியாத்தம் நகரக் கழகச் செயலாளர் எஸ். சவுந்தர ராஜன், தி.மு.க. வடக்கு குடியாத்தம் ஒன்றிய கழகச் செயலாளர் சத்தியானந்தம், வி.சி.க. வேலூர் மாவட்டச் செயலாளர் வழக் குரைஞர் சுதாகரன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு, ம.தி.மு.க. மாநிலக் குழு உறுப்பினர் பழனி, தி.மு.க. தலைமைக்குழு உறுப்பினர் கண்ணன், வி.சி.க. வேலூர் மண்டல துணைச் செயலாளர் வேதாச்சலம், வி.சி.க. நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் சிவ. செல்லபாண்டியன், வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், இ.யூ. முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் யூசுப் கான், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், பொதுக் குழு உறுப்பினர் வி.இ. சிவக்குமார், வேலூர் மாவட்ட மகளிரணித் தலைவர் ந.தேன்மொழி, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்டச் செயலாளர் பி.கலை வாணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் அகிலா எழிலரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஏ. சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றிச் சிறப்பித்தனர்.
நியூசென்ஸ் வேல்யூ தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.
இறுதியாக தமிழர் தலைவர் உரையாற்றினார். முன்னதாக பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன், ச.ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி. சுப்பிரமணி, தா.நாகம்மாள் ஆகிய அய்வருக்கு, ஆசிரியர் பயனாடை அணிவித்து அவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தார். தமிழர் தலைவர் தனது உரையின் தொடக்கத்திலேயே, ‘நாங்கள் வந்து இங்கே அமர்ந்தவுடன் நிறைய பூச்சித்தொல்லை இருந்தது. இப்போது அந்தப் பூச்சித் தொல்லை தானாகவே குறைந்திருக்கிறது. இதுதான் பி.ஜே.பி., இதுதான் ஆர்.எஸ்.எஸ்.” என்று தொடக்கத்திலேயே அனை வரையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிட்டார். தொடர்ந்து, ‘இந்த பெரியார் மண்ணில், சமூகநீதி மண்ணில் இவைகளெல்லாம் நிலைக்காது. ’நியுசென்ஸ் வேல்யூ’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோலத்தான் இதுவும்’ என்று பாசிச பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ். சையும் நகைச் சுவையாகவே ஒரு பிடி பிடித்து மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். மேலும் அவர், ‘குடியாத்தம் என்று சொன்னால், ஒரு முக்கியமான இடைத்தேர்தல் தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள்தான் ஓட்டளித்து கல்வி வள்ளல் காமராசரை வெற்றி பெறவைத்தீர்கள்! அந்த வெற்றி தமிழ்நாட்டின் வரலாற்றையே புரட்டிப் போட்டது’ என்று சொல்லி, பள்ளிக் கூடங்களில் ஏழை, எளிய பிள்ளைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் போடப்பட்ட மதிய உணவை நினைவூட்டினார். அதற்கும் முன்பிருந்த நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான பிட்டி. தியாகராயரைக் குறிப்பிட்டார்.
அதன் நீட்சியாக அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்று ஒரு ஆட்சி மரபையே சுட்டிக்காட்டி, ஆட்சிகள் மாறினாலும் சமூகநீதிக் காட்சிகள் மாறுவதில்லை என்பதை எடுத் துரைத்தார். அந்த மரபின் இன்னொரு தொடர்ச்சியான திராவிடர் இயக்கத்தின் பிரச்சாரக் களங்களின் முக்கியத் துவத்தையும் கோடிட்டுக் காட்டினார்.
அதாவது, மற்ற மாநிலங்களில் தேர்தலின் போது தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், இங்கே எல்லா நேரங்களிலும் மக்கள் விழிப்புணர்வு பெறவே பல மணி நேரம் பிரச்சாரம் நடப்பதும்; மக்கள் கேட்பதும்; அதன்படி நடப்பதும் இங்கே நடைமுறையில் இருக்கிறது’ என்று மக்கள் உணராத ஒரு உண்மையை எடுத்து வைத்தார். அந்தத் தொடர்ச்சியின் தொடக்கத்தில் அறிஞர் அண்ணா, பெரியாரை தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் என்று சுட்டிய சுவாரசியத்தைப் புரியவைத்தார். அப்படிப்பட்ட கூட்டங்களில் தான் தந்தை பெரியார், ‘சுதந்திர நாட்டில் சூத்திரன், பஞ்சமன் இருக்கலாமா? சூத்திரன், பஞ்சமன் வாழும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா?’ என்று இன்று வரை பதில் வராத ஒரு அதிரடிக் கேள்வியைக் கேட்டதை நினைவுபடுத்தினார்.
நாயும், பன்றியும் போராடியா உரிமை பெற்றன?
அந்த மனிதநேய உணர்வில் தான் பெரியார் வைக்கம் சென்று போராடினார். காந்தி அதை கேள்விக்கு உட்படுத்திய போது, ‘நாயும், பன்றியும் கோயில் தெருக்களில் நடக் கின்றனவே, அவை என்ன போராடியா உரிமை பெற்றன?’ என்றொரு ஆழமான கேள்வியைக் கேட்டதை வகுப்பாசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போலச் சொல்லிக் கொடுத்தார். அந்த பேதத்தைத்தான் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கிறது; அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்றவை பின்பற்றுகின்றன. அதை எதிர்க்கப் பிறந்ததுதான் திராவிடர் இயக்கம்; அதுதான் இன்றைக்கு திராவிட மாடலாக உருவெடுத்து இருக்கின்றது’ என்று 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஆரியர், திராவிடர் போரின் சாரத்தை, மக்களுக்கு மிகவும் எளிமையாகப் பிழிந்து கொடுத்தார்.
பார்ப்பனர்களின் குலதர்மப்படி பிச்சையெடுப்பார்களா?
தொடர்ந்து, தந்தை பெரியாரால் கொண்டுவரப்பட்ட முதல் சட்டத்திருத்தம், அவருக்குப் பிறகு அதிகாரத்தின் உச்சத்திலிருந்த மூன்று பாப்பனர்களான முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆகியோரிடம் வேலை வாங்கிக் கொண்டு வந்த 69% இடஒதுக்கீடு போன்றவற்றின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்து, “திராவிடம் ஏன் வேண்டும்?” என்பதற்கான காரணங்களை அடுக்கினார்.
அதில் இந்தியா முழுவதும் இருக்கின்ற மக்களுக்குப் பயன்பட்டிருப்பதை தவறமால் நினைவுபடுத்தினார். திராவிடம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே தேவை’ என்பதை சொன்னதோடு, ‘அதன் தொடர்ச்சி யாகத்தான் ”இண்டியா” கூட்டணியை உருவாக்க தமிழ்நாடு மிக முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது’ என்று நடப்பு அரசியலை இணைத்துப் பேசினார். பிரதமர் மோடி வெளிப் படையாக 'விஸ்வகர்மா திட்டம்' என்று குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.
மக்களை ஏமாற்ற அதற்கு 1 லட்சம், 2 லட்சம் கடன் கொடுப்பதாகச் சொல்லி, நாக்கில் தேன் தடவியிருக்கிறார்’ என்று செய்தித்தாளிலிருந்து விஸ்வகர்மா திட்டம் பற்றி செங்கோட்டையில் கொடி ஏற்றும் போது, வெளியிட்ட இந்த திட்டத்தை விரிவாகப் படித்துக் காட்டிவிட்டு,‘சரி, விஸ்வகர்மா திட்டப்படி எங்களுக்கு குலக்கல்வியை சொல்கிறீர்களே, பார்ப்பனர்களின் குலதர்மப்படி பிச்சையெடுப்பார்களா?’ என்றொரு அதிரடிக் கேள்வியைக் கேட்டு, ‘இந்த ஒன்றுக் காகவே பி.ஜே.பி.யை விரட்டி, விரட்டி அடிக்கவேண்டும்’ என்று மக்களை எச்சரித்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் படபடவென கைகளைத் தட்டி அதை ஆமோதித்தனர்.
அதே உணர்ச்சியோடு ஆசிரியர், வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த உணர்ச்சியைக் காட்டி பி.ஜே.பி.யை துரத்தியடிக்கவேண்டும்’ என்று கேட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் தொடங்கி வைத்த மாலை நேரத்து வகுப்பறையை, ஆசிரியர் கி. வீரமணி வாயிலாகக் கேட்டுப் பயன் பெற்றனர். இறுதியாக குடியாத்தம் நகரத் தலைவர் சி.சாந்தகுமார் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment