கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும்
கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும்
ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும்
தாயாய்த் தொண்டரைத் தாங்கிடும் அன்பும்
தமக்கென வாய்ந்த தனிப்பெரும் பண்பினர்;
தமிழினம் எதிர்கொளும் தாளாத் துயர்களை
உமியென ஊதிடும் உலையாத் திண்மையும்
ஓருருக் கொண்ட உயர்பெரும் சிறப்பினர்;
பராவிடும் புகழ்மிகு பெரியார் நெறியைப்
பரப்புதல் ஒன்றே வாழ்வெனக் கொண்டவர்;
திராவிடர் கழகத் திறமிகு தலைவர்
தொண்ணூறு ஆண்டிலும் ஓய்விலா இளைஞர்
எண்ணுவதெல்லாம் தமிழர் நலனே!
மன்பதைத் தொண்டினில் நாளெலாம் போக்கி
வந்திடும் நோய்களைத் துரத்தி விரட்டி
மதப்பேய் ஓட்டி ஜாதித்தீ அணைத்து
அனைவரும் சமமெனும் உணர்வினை ஊட்டி
புதிய தலைமுறை பொலிவுடன் வளர்ந்திடக்
கல்விச் செல்வத்தைக் கருத்துடன் வழங்கிப்
பெண்ணினம் பெருமை பெற்றிடும் வகையில்
எண்ணமும் திட்டமும் வாய்ப்பும் அளித்து
அடுக்கிய துன்பம் அல்லல் செய்தாலும்
ஒடுக்கப் பட்டோர் உயர்வு மேம்பட
மிடுக்குடன் செயல்படும் தமிழர் தலைவர்!
தளபதி ஆட்சியில் தகைசால் தமிழராய்ப்
போற்றப் படுவதில் வியப்பும் உண்டோ?
கலைஞர் பெற்ற கொள்கை வேழம்
தலைவர் தாலின் ஆட்சி பொலிவுறத்
தக்க துணையாய்த் தகவுடன் விளங்கி
இன்னும் நூறாண்டு எம்முடன் இருந்து
இன்னல் தீர்ந்து தமிழினம் இன்புற
வழிகாட்டிடுவீர்! வாழிய!வாழிய!
தொண்டர்கள் போற்ற அன்பர்கள் வாழ்த்த
தமிழ்த்தாய் மகிழ்ந்திட வாழிய! வாழிய!
அன்புத் துணைவியார், மக்கள், சுற்றம்
அனைவரும் வாழ்க!நலமெலாம் சூழ்க!
தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!
- மறைமலை இலக்குவனார்
பொறுப்பாசிரியர்,
குறள்நெறி இதழ்க் குழுமம்
No comments:
Post a Comment