நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

நூல் அரங்கம்

நூல்:

“மனுநீதி போதிப்பது என்ன? ஆய்வுச் சொற்பொழிவுகள்”

ஆசிரியர்: கி.வீரமணி 

வெளியீடு: 

திராவிடர் கழக வெளியீடு

முதல் பதிப்பு 2019

பக்கங்கள் 208 - நன்கொடை ரூ.200

சென்னை பெரியார் திடலில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்ற, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யா,  'மனுதர்ம ஆராய்ச்சி ' என்ற தலைப்பில் நிகழ்த்திய சிறப்பு சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல்!

"இப்பவெல்லாம் மனுநீதியை யார் கடைப் பிடிக்கிறார்கள்?  மனுநீதியைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? ".. என்று அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆதாரப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் விளக்கம்  சொல்லும் ஆசிரியர் அய்யாவின்  சிறந்த வழிகாட்டி நூல்! 

மூன்று நாட்கள் நிகழ்வில் ஆசிரியர் வழங்கியுள்ள தகவல்கள் ஏராளம். இதுவரை மனுநீதி பற்றி எதுவுமே அறியாமல் இருந்தவர்கள் கூட தெளிவடையும்படி அமைந்துள்ளது அவரது ஆய்வுச் சொற்பொழிவுகள்! 

அதிலிருந்து நீங்களும் நினைவில் வைத்துக் கொள்ள சில தகவல்கள் :

வருணாசிரம கொள்கைகளை முதன்முதலாக எதிர்த்தவர் இந்தியாவிலேயே புத்தர் தான்! அவர் ஜாதிமுறை மற்றும் வருணாசிரம முறையை எதிர்த்து வெற்றி பெற்றார். அவரது கொள்கைகளைப் பரப்பியவர் அசோகர்!  அசோகரின் மௌரிய சாம்ராஜ்ஜியத்தை பார்ப்பன அரசனான புஷ்யமித்திரன் வீழ்த்தி சுங்க வம்சத்தை நிறுவினான்!

அதன் பிறகு, அரசியல் செல்வாக்கு பெற்ற காரணத்தால்,  பார்ப்பனியமும் வைதீகமும் அடைந்த வெற்றியை தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் மனுதர்மம் அல்லது மனுஸ்மிருதி! இந்த நூல் கிமு 150க்கும் கிபி 100க்கும் இடையில் எழுதப்பட்டதாம்!

மனுநீதியில் சொல்லப்படுகின்ற வருணாசிரம ஜாதி அமைப்பை  நான்காகப் பிரித்தார்கள்!  பிராமணன்; சத்திரியன்; வைசியன்; சூத்திரன். இவர்களை வர்ணஸ்தர்கள் என்றார்கள். சூத்திரனுக்கும் கீழே ஒரு பிரிவை ஏற்படுத்தி அவர்களை பஞ்சமர்கள் அல்லது அவர்ணஸ்தர்கள் என்றார்கள் ! 

பெண்களுக்கு எந்த அந்தஸ்தும் தராமல் அவர்களையும் சூத்திரர்களாகவே மனுநீதி சொல்கிறது. பெண்களும் சூத்திரர்களும் வேதங்களை ஓதக் கூடாது, வேத ஓசையைக் கேட்க கூடாது என்பன போன்ற கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது! 

சூத்திரன் என்றால் யார் என்று மனுநீதி இவ்வாறு வகுத்தது :

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப் பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன்; தன்னுடைய தேவடியாள் மகன்; விலைக்கு வாங்கப் பட்டவன்; ஒருவரால் கொடுக்கப் பட்டவன்; குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - என ஏழு வகைப்படுத்தியது! 

சூத்திரன் என்றால் மனுநீதியில் தாசி மகன் என இழிவாக குறிப்பிட்டுள்ளது கண்டு கொதித்துப் போன சுயமரியாதைத் தந்தை பெரியார் இப்படிச் சொன்னார் :

" சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! "

மனுநீதி போதிப்பது என்ன ?

அநியாயங்கள்! அக்கிரமங்கள்! அயோக்கியத் தனங்கள்! அருவருப்புகள்! அகங்காரங்கள்! ஆணவங்கள்! சாம்பிளுக்கு வேண்டுமா? இதோ :

சூத்திரன் யாரையாவது கொலை செய்தால் அவனுக்கு தண்டனை சிரச்சேதமாம் (தலை வெட்டப்படுதல் ) 

பார்ப்பான் யாரையாவது கொலை செய்தால் அவனுக்கு தண்டனை சிகைச்சேதமாம் (உச்சிக் குடுமியிலிருந்து சில மயிரை வெட்டுதல் ) 

எவ்வளவு அயோக்கியத்தனமான நீதி!

இதை தந்தை பெரியாரின் எளிய மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமா?

" மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறான்? 

சூத்திரன் உயிரும் பாப்பான் மயிரும் சமம் என்றுதானே?" 

மனுநீதி பற்றி அம்பேத்கர் சொன்னது :

" இந்து மதம் என்றாலே மனுஸ்மிருதி தான் ! அதற்கு அடித்தளம் எது? எதன் மீது அந்த ஜாதி, வர்ணாசிரம தர்மம் எழுதப்பட்டு இருக்கிறது? பிறவி பேதம் எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லும் போது - இவை அனைத்திற்கும் மனுஸ்மிருதி தான் அடித்தளம் என்று தெரிய வருகிறது! அந்த அடித்தளத்தை அசைத்தால் ஒழிய சமத்துவம் வராது!" 

அதன் காரணமாக ஜாதியை, தீண்டாமையை, ஏற்றத் தாழ்வு ஒழிக்க மனுநீதியை எரிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர்! 

அதன்படியே மனுதர்மத்தை, அம்பேத்கர் மகாராஷ்டிராவிலுள்ள மகத் என்ற ஊரில் 1927ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தீயிட்டு கொளுத்தினார்!

பெரியார் துறையூர் மாநாட்டில் மனுநீதியை தீயிட்டு கொளுத்தினார்! வடக்கில் அம்பேத்கரும் தெற்கில் பெரியாரும் மனுநீதியை எரித்தவர்கள்! மடமையை கொளுத்தியவர்கள்! ஆகவே தான் இன்றும் இவர்கள் சிலைகளைப் பார்த்து கூட பயந்து நடுங்குகிறது - இந்துத்துவா!

மனுநீதி போதிப்பது :

உழவுத் தொழில் அவமானகரமானதாம்! அதை பிராமணர்கள் செய்யக் கூடாதாம்! சந்நியாசம் பெறுவதற்கு கூட சூத்திரனுக்கு உரிமையில்லையாம்! சூத்திரனுக்கு சொத்து சேர்க்க உரிமையில்லையாம்! சூத்திரனுக்கு நல்ல பெயர்களைச் சூட்டக் கூடாதாம் (கருப்பன், மூக்கன், மண்ணாங்கட்டி இப்படித் தான் இருக்க வேண்டும்)! 

மனுநீதி சொன்னது - ஒரு மனிதன் செல்வனாக பிறந்து சுகபோகத்துடன் வாழ்வதற்கு கடவுள் தான் காரணம்!

திருக்குறள் சொன்னது - ஒரு மனிதனை ஏழையாகப் பிறப்பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழிய வேண்டும்! 

காந்தி - வர்ணாசிரமம் - பெரியார் பற்றிய சுவையான தகவல் இது : 

காந்தியார் வர்ணாசிரமத்திற்கு ஆதரவாகவே இருந்தவர்! அவரும் ஒரு கால கட்டத்தில் மாற வேண்டிய நிலைக்கு  வந்தார்! 

தமிழ் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு வகுப்பு வாரி உரிமையால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது! அந்த பார்ப்பனர்கள் இது பற்றி காந்திக்கு புகார் மனுவை அனுப்பினார்கள்! பின்னர்  சென்னைக்கு வந்த காந்தியிடம் பார்ப்பன சங்கத்தைச் சேர்ந்தோர் புகார் மனு பற்றி விசாரித்தார்கள்!

காந்தியார் அவர்களிடம் - " ஒரு கேள்வி கேட்கிறேன்! வர்ணாசிரமத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது! உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது! வேதம் ஓதுதல் தானே வேதியருக்கு (பிராமணர்கள் ) அழகு ! நீங்கள் எதற்கு மருத்துவராகி, கத்தியைப் பிடித்து பிணத்தை அறுக்க வேண்டும்? நீங்கள் தர்மத்தை காக்க வேண்டும் என்றால் உங்களுடைய வேலையை நீங்கள் செய்ய வேண்டும்! அவர்களுடைய வேலையை அவர்கள் செய்ய வேண்டும்! " என குண்டைத் தூக்கிப் போட்டாராம்! 

இந்த உரையாடலுக்குப் பின் பெரியாரின் தீர்க்க தரிசனமான கணிப்பு இவ்வாறு இருந்தது -  காந்தியார் விழித்துக் கொண்டார்! காந்தியாருக்கு புத்தி வந்து விட்டது! இனிமேல் அவரை நாம் ஏமாற்ற முடியாது! அவரை விட்டு வைக்க கூடாது! அப்படி விட்டு வைத்தால் நம்முடைய செல்வாக்கு போய்விடும் என்று நினைத்தார்கள் சனாதனிகள்! அதனால் காந்தியின் உயிருக்கு சனாதனிகளால் ஆபத்து! ...என எச்சரிக்கை செய்தார் பெரியார்! 

அதுபோலவே மகாராஷ்ட்ராவின்  சித்பவன் பார்ப்பனரான நாதுராம் கோட்சேயால் காந்தி சுடப்பட்டு மரணமடைந்தார்! இதுவும் மனுநீதியின் போதனையின் போதையினால் தான்!

மனுநீதி போதிப்பது என்ன? என்ற கேள்விக்கான பதில்களையும், மனுநீதி பாதிப்பது என்ன? என்ற வினாவிற்கான விடைகளையும் ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவுகள் அள்ளித் தருகின்றன! நூலை முழுமையாக வாசித்து பயன் பெறுங்கள்!

மனுநீதி போதித்ததால் - 

ஆரியம் தழைத்தோங்கியது! 

சமூகநீதி சாதித்ததால் - 

திராவிடம் நிலைத்தோங்கியது!

No comments:

Post a Comment