மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

 வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க  ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வம்பை விலைக்கு வாங்கிய அமித்ஷா

புதுடில்லியில் நடந்த அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் 38 ஆவது கூட்டத்தில் - தலைமை வகித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்!

வழமையாக ஹிந்தித் திணிப்புக்கு வாதாடுபவராகவே அவர் இருந்து வருகிறார்.

அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பது போன்று, மொழிகள் பற்றி அவர் கூறிய கருத்து அவரது ஆணவத்தைக் காட்டுகிறதா அல்லது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதா என்பது மக்களுக்கு விளங்கவில்லை!

பன்மொழிகள் பேசும் மக்களின் மொழிகளை, வெறும் உள்ளூர் மொழிகள் - “Local Languages'' என்ற சொற்றொடர்மூலம் கொச்சைப்படுத்தியுள்ளார்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளவை 22 மொழிகள் ஆகும். முன்னால் குறைவான அளவு மொழிகளே! பல அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்மூலம் 22 ஆக அங்கீகாரம் பெற்றுள்ளன.

அதன் தலைப்பு ‘மொழிகள்'  - ‘Languages' என்பது தான். இதன்படி அனைத்து மொழிகளுமே “Local Languages'' - தேச மக்களால் பேசப்படும் தேசிய மொழிகளே!

உள்ளூர் மொழி என்ற பெயரில் அழைப்பது தவறு! மாபெரும் தவறு!

ஹிந்தி மட்டுமே தேசிய மொழி   National Language  என்பதை அரசமைப்புச் சட்டம் கூறவில்லை என்பது தெளிவு.

இந்த நிலையில், மற்ற மொழிகளை ‘உள்ளூர் மொழிகள்' - ‘லோக்கல் மொழிகள்' என்று கூறுவதே அபத்தம் அல்லவா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டு மக்களது கடுமையான கண்டனத்தை உடனடியாகத் தெரிவித்துள்ளார்.

‘‘எதிர்ப்பின்றி அனைவரும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் ஹிந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும்.

இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல'' என்பதை விளக்கிவிட்டு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இரட்டை நாக்கு- போக்குபற்றியும் நன்கு அம்பலப்படுத்தியுள்ளார்!

130 கோடி மக்கள் தொகையில் சில ஆயிரம் பேரே....

தமிழ்மீது அளவற்ற பாச மழையை - பெருமைகள் பற்றி இங்கே பேசிவிட்டு, காரியத்தில் ஹிந்தியைத் திணிப்பது, சமஸ்கிருதத்திற்கு - அது புழக்கத்தில் இல்லாத வெகு, வெகு, வெகு சிறுபான்மை -  130 கோடி மக்கள் தொகையில் சில ஆயிரம் பேர்களே பேசும் மொழி!

பல மடங்கு அதிகத் தொகையை மொழி வளர்ச்சி என்ற சாக்கில் பார்ப்பனர்களுக்கு (மானியம்) வழங்கும் நிலை - இரட்டை வேடம் அல்லவா?

தமிழ் செம்மொழி; உலகத்தின் பல நாடுகளில் ஆட்சி மொழி; மக்கள் மொழி; அத்தகுதி ஹிந்திக்கோ, சமஸ்கிருதத்திற்கோ உண்டா? என்றாலும், தமிழை இன்னமும் நீஷ பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை - சடங்கு, சம்பிரதாயம், அரசமைப்புச் சட்டத்திற்கு இந்த ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளே தேவை என்பது திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

பச்சையான பண்பாட்டுப் படையெடுப்பு அல்லாமல் வேறு என்ன?

மீண்டும் மொழிப் போர்

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க, ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஹிந்தி பேசாத பல்வேறு மாநிலங்களிலும் அந்த மொழித் திணிப்புக்கு எதிரான அறப்போர் உரிமைப் போராக ஆவதை ஒன்றிய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா?

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்பது பழமொழி. இப்போது ஆண்டி ஊதிக் கெடுக்க வில்லை - அரசே தேவையின்றி ஊதிக் கெடுத்து, மீண்டும் மொழியை போர்க் கருவியாக்கி பார்க்கத் துடிக்கிறது!

இது தேவைதானா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
6.8.2023


No comments:

Post a Comment