'நீட்' என்பது இராமன் கையில் இருந்த கொடுவாள்! சம்புகன் தலையை இராமன் வெட்டிக் கொன்றது போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவக் கல்வி நுழைவை வெட்டி வீழ்த்தும் அபாயகரமான சூழ்ச்சியாகும்.
இடஒதுக்கீடு என்ற ஒன்று கொண்டு வரப்பட்ட காரணம் என்ன? நீண்ட காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கை தூக்கி விடும் மனித உரிமை கடமை உணர்வாகும்.
இடஒதுக்கீட்டின் காரணமாகத்தான் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கல்விக் கண்ணைப் பெற்று நடக்க ஆரம்பித்தனர். ஆனால் தலைமுறை தலைமுறையாகக் கல்வியைத் தங்கள் ஏக போகத்தில் கட்டிப் போட்டிருந்த பார்ப்பனர்கள் தொடக்கக் கால முதலே இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தனர் - வருகின்றனர்.
இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விடும் என்று கூப்பாடு போட்ட அந்தக் கூட்டம் தங்களுக்கும் இடஒதுக்கீடு தேவை - அவசியம் தேவை என்று கூற ஆரம்பித்தது ஏன்? தகுதி திறமைக் கூச்சல் அப்பொழுது எங்கே போயிற்று?
இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் வலியுறுத்திக் கொண்டு தானே இருந்தார் - இருக்கிறார்.
ஆட்சி அதிகார பீடத்தில் பிஜேபிதான் இருந்தாலும் ஆட்சியின் கொள்கையை வகுப்பது ஆர்.எஸ்.எஸ். தானே!
என்றைக்காவது சமூகநீதி இடஒதுக்கீடு என்ற சொற்களை இந்தக் கூட்டத்தினர் வாய்களில் உச்சரித்ததுண்டா?
இப்பொழுது ஆட்சி அதிகாரத்துக்கு வந்த நிலையில் "காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வது" என்பது போல, சமூகநீதிக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் குழி பறிக்க முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் இராமன் தூக்கிய வருணாசிரம வாளினைத் தூக்கித் துவம்சம் செய்கிறார்கள்.
கேட்டால் 'நீட்'டைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சிதான் (ஹிறிகி) என்று அவர்களுக்கே உரித்தான திசை திருப்பும் பொய்களை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் 'நீட்' வந்தது உண்மைதான். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அது அடிபட்டுப் போயிற்றே - மருத்துவக் கவுன்சிலுக்குக் கல்வியில், தேர்வு நடத்துவதில் தலையிட உரிமை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ்கபீர், விக்கிரமஜித் சென் மற்றும் ஏ.ஆர். தவே அடங்கிய அமர்வில் மூன்றுக்கு இரண்டு என்ற முறையில் நீட் செல்லாது என்று பெரும்பான்மை தீர்ப்பு அளிக்கப்படவில்லையா?
அத்தோடு முடிந்து போன ஒன்றிற்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது யார்? எந்த ஏ.ஆர். தவே என்ற நீதிபதி 'நீட்' செல்லும் என்று மாறுபட்ட தீர்ப்பைச் சொன்னாரோ, அந்த நீதிபதி தலைமையிலேயே இன்னொரு அமர்வை அமைத்தது - எந்த ஆட்சியில்? மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியில் தான் என்பதை மறுக்க முடியுமா?
'நீட்' தேர்வு எழுதாமல் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் எல்லாம் மட்டமானவர்களா?
அப்படி படித்தவர்கள் எல்லாம் உலகில் புகழ் பெற்ற டாக்டர் களாகப் பரிணமிக்கிறார்களே!
மருத்துவக் கல்லூரி தேர்வில் தங்க மெடல் வாங்கியவர்கள்தான் ஜொலிக்கிறார்கள் என்பதற்கு ஏதாவது தரவு இருக்கிறதா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஏழை கூலித் தொழிலாளியின் மகள் அனிதா +2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார் என்பது சாதாரணமானது தானா?
இவ்வளவு பெரிய மதிப்பெண் பெற்ற அந்தப் பெண் 'நீட்' தேர்வில் வெறும் 86 மதிப்பெண்ணே பெற முடிகிறது என்றால், கோளாறு எங்கே இருக்கிறது?
இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கும்போது, சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்தின் அடிப்படையில்தான் 'நீட்' தேர்வு என்றால், இது எவ்வளவு மட்டகரமான சீழ் பிடித்த உயர்ஜாதி புத்தி - சூழ்ச்சி!
அனிதாவைத் தொடர்ந்து எத்தனையெத்தனை தற்கொலைகள் - பெற்றோர்கள் தற்கொலைகள்! நேற்று வந்துள்ள ஒரு தகவல் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 'நீட்' தேர்வுக்குப் பயிற்சி பெற்ற 28 மாணவர்கள் தற்கொலை!
பரவாயில்லை அவர்கள் வீட்டுக்கும் கருமாதி தர்ப்பணம் பண்ணி சுரண்டலாம் என்ற புன்மை மனிதர்களை எது கொண்டு சாற்றுவது?
2008இல் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதிக்குப் போட்டியிட்ட முதல் 200 தர வரிசையில் உயர் ஜாதியினர் வெறும் 15 பேர்கள்தான் என்ற தகவலை மும்பையில் இயங்கும் டாடா நிறுவனம் ஆய்வு செய்த அறிக்கையை வெளியிட்டதே!
2016ஆம் ஆண்டை எடுத்துக் கொள்வோம்.
திறந்த போட்டிக்கான மொத்த இடங்கள் - 884
இதில் பிற்படுத்தப்பட்டோர் - 599
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 159
தாழ்த்தப்பட்டவர்கள் - 23
பழங்குடியினர் (ஷிஜி) - 017
உயர்ஜாதியினர் - 68
'நீட்' இல்லாதபோது 2016இல் தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளியில் மாணவர்கள் பெற்ற இடங்கள் - 30
'நீட்' வந்த பிறகு வெறும் 5.
2016இல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பெற்ற இடங்கள் - 62
'நீட்' வந்தபிறகு - 1220. அதாவது 20 மடங்கு அதிகம்.
'நீட்' என்பது சம்புகன் தலைகளை வெட்டத்தானே! யார் வயிற்றில் அறுத்துக் கட்ட?
ஒடுக்கப்பட்ட சமூக இருபால் மாணவர்களே சிறுபான் மையின மாணவர்களே, பெற்றோர்களே, வரும் 22ஆம் தேதி திராவிட மாணவர் கழகம் - இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடத்த உள்ள 'நீட்' எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பீர்! கல்வியும், உத்தியோகமும் பார்ப்பனர்களின் பாட்டன் வீட்டுச் சொத்தல்ல. பாட்டாளிகளின் உரிமை என்பதை நிரூபிப்போம் - வாரீர்! வாரீர்!!
No comments:
Post a Comment