பா.ஜ.க. ஆளும் அரியானாவின் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பினர் 31.7.2023 அன்று பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்தனர். இந்தப் பேரணிக்குப் பல்வேறு கொலைகளிலும், கொள்ளைகளிலும் தொடர்புடைய அண்மையில் இரண்டு இஸ்லாமியர்களை உயிரோடு எரித்துக் கொலை செய்த குற்றவாளியான மோனு மானேசர் என்பவர் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அவரே காட்சிப் பதிவு ஒன்றில் கூறி சமூகவலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இஸ்லாமியர்கள் தொடர்பாக சில மோசமான சொற்களையும் பயன்படுத்தி இருந்தார். இந்த நிலையில் ஊர்வலம் தொடங்கி இஸ்லாமியர்கள் வாழும் சிறு நகரமான நூஹ் பகுதிக்கு வந்த பிறகு மசூதிக்குத் தீ வைக்கப்பட்டது. அதற்கு முன்பு உள்ளே இருந்த 19 வயது இஸ்லாமிய இளைஞர் கொல்லப்படுகிறார்.
காலை 10 மணிக்கு ஆயிரக்கணக்கானோருடன் பேரணி தொடங்கிய நிலையில், 12 மணியளவில் ஆத்திரமூட்டும் வகையிலான மிகவும் மோசமான கொச்சையான முழக்கங்கள் பேரணியின்போது எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் பகுதியில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. வன்முறையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வன்முறைக் கும்பல் காவல் நிலையத்திற்குத் தீ வைக்க முயன்றதாக நூஹ்வின் சைபர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். வன்முறையையொட்டி 31.7.2023 அன்று மாலை, நூஹ் நிர்வாகம் ஆகஸ்ட் 2 வரை இணையத்தைத் தடை செய்தது.
"பேரணியின்போது மோனு மானேசர் ஜிந்தாபாத் என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
கொலைக் குற்றவாளியான ஹிந்துத்துவ அமைப்பின் பிரமுகர் மோனுவும் சிலரும் வீடியோ வெளியிட்டு நிலைமையை மோசமாக்கினர். அது மட்டுமல்லாமல் பஜ்ரங்கி என்ற ஒருவர், உங்களின் மச்சான் வந்துகொண்டு இருக்கிறார் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அரசுக்கு முன்பே தெரிவித்தோம். ஆனால் அவர்கள் துரிதமாக செயல்படவில்லை" என்கிறார் நூஹ் பகுதியைச் சேர்ந்த முஸ்தபாகான்.
கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியது.
மேவாத் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை அன்றைய தினமே குருகிராம் பகுதிக்கும் பரவியது. குருகிராமின் 57ஆவது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது. "இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்து விட்டார்" என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் கூறினார்.
குருகிராமிலும் ஃபரிதாபாத்திலும், பள்ளிகளையும், கல்லூரி களையும் மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது.
குருகிராமில் வன்முறையால் பலியான இமாம் முகமது சாத்தின் மூத்த சகோதரர் ஷதாப் அன்வர் பேசும்போது, "கடந்த ஏழு மாதங்களாக இந்த மசூதியின் இமாமாக எனது சகோதரர் இருந்தார். அவரின் வயது வெறும் 22 மட்டுமே நாங்கள் பீகார் திரும்புவதற்கு பயணச்சீட்டு எல்லாம் எடுத்து வைத்திருந்தார். தற்போது நிலைமை சரியில்லை. மசூதியை விட்டு வெளியே வர வேண்டாம் என்று என் சகோதரரிடம் கூறினேன். அதுதான் நான் அவரிடம் பேசிய கடைசி வார்த்தை"என்றார்.
இந்த வன்முறையில் பிரதானமாக பார்க்கப்படும் பெயர் மோனு மானேசர். அரியானாவில் மோனு பிரபலமானவர். இதற்குமுன் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த கொலைகளில் இவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. மோனு மானேசர் அரியானா அரசின் பசு பாதுகாப்பு பணிக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அரியானா மாநிலம் மானேசரில் வசிக்கும் 28 வயதான மோனுவிற்கு மேவாட் அல்வார் பிரதான நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்துப் பணம் பிடுங்குவதே பிரதான வருமானமாம்!
அரியானா பஜ்ரங் தளம் அமைப்பின் பசுப் பாதுகாப்புப் பிரிவின் மாநிலத் தலைவர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் மோனுமீது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜுனைத், நசீர் ஆகிய இருவரையும் சித்திரவதை செய்து கொன்று அவர்கள் உடல்களை ஜீப்போடு வைத்து எரித்த கொடூர நிகழ்வின் முக்கிய குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுவரை மோனு கைது செய்யப்படவில்லை.
மோனுமானேசர் அண்மையில் அரியானா அரசு சார்பில் தாய்லாந்து சென்று துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்கள் மட்டுமே பயிற்சி எடுக்கும் அரங்கில் பல்வேறு ரகமான துப்பாக்கிகளை சுட்டுப் பயிற்சி எடுத்தார். இதனை அவரே காட்சிப் பதிவாக வெளியிட்டும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானாவில் இப்போது இப்படி ஒரு கொடூரம் - பயங்கரம் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு அருகிலேயே நடந்து கொண்டி ருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட காவி கூட்டங்கள் ஆங்காங்கே மதக் கலவரங்களை உண்டாக்கி மக்களை இரு கூறுகள் ஆக்கி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று திட்டமிடுகின்றன. மணிப்பூர் பிரச்சினை இன்னும் முடியவில்லை; அதற்குள்ளாக அரியானாவிலும் வன்முறையை அரங்கேற்றி வருகிறார்கள்.
2024 மக்களவைத் தேர்தலுக்குள் இன்னும் எத்தனை எத்தனை மாநிலங்களில் கலவரங்களை உண்டாக்குவார்கள் என்று தெரியவில்லை. மக்கள் எச்சரிக்கையாக இருந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மதவாதச் சக்திகளை வீழ்த்தாவிட்டால் நாடு தாங்காது. மதவெறித் தீயால் நாடு பற்றி எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வன்முறையாளர்களை முன்னிறுத்தி வேடிக்கை பார்க்கின்றன பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள். டபுள் எஞ்சின் என்று பிரதமர் மோடி சொன்னது இத்தகைய வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்தி, வேடிக்கை பார்க்கத்தானா என்ற கேள்வி நாடு முழுக்க எழுந்துள்ளது.
No comments:
Post a Comment