சென்னை,ஆக.12 - நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளி கையில் இன்று (12.8.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று பெற்றோர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் ஆளுநர் ரவிக்கும், மாண வர்களின் பெற்றோருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட் டுள்ளது என்று ஆளுநர் ரவி பதிலளித்தார். மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் தனக்கு இருந்தாலும், விலக்கு அளிக்க மாட்டேன் என்றும் ரவி பேசினார்.
பணம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்றும், பயிற்சி மய்யங்களுக்குச் செல்வதைத்தான் நீட் தேர்வு கட்டாயமாக்குகிறது என்றும் பெற்றோர் சுட்டிக்காட்டிப் பேசினர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகக் காட்டமாகக் கேள்வியெழுப்பிய பெற்றோரை, உட்காருங்கள் என்று மிகவும் சப்தமாகக் கூறினார் ஆளுநர் ரவி. மேலும், நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்றும் திட்டவட்டமாகக் கூறியதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் பேசிய ஆளுநர் ரவி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டு மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படித்து தேர்ச்சி பெற முடியும் என்றால், நீட் தேர்விலும் தேர்ச்சி பெறலாம். மாணவர் களுக்குப் பாடங்களை நடத்தும்போதே, நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கலாம் என்றார்.
இதைக் கேட்ட பெற்றோர், நீட் தேர்வு இல்லாமலேயே, தமிழ்நாடு மாணவர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு, இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குவதாக பெற்றோர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்தனர்.
ஆளுநர் மாளிகையில் உள்ள அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோருடன் கலந்துரையாடல் நிகழ்ச் சியும் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் ரவியிடம், நீட் தேர்வு குறித்து பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால், அவர்களிடமிருந்து மைக் பறிக்கப்பட்டது.
மாணவியின் தந்தை பேட்டி
ஆளுநர் மாளிகைக்கு வெளியே மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'நீட் தேர்வில் எனது மகள் 878 ஆவது ரேங்க் பெற் றுள்ளார். 623 மதிப்பெண்கள் வாங்கியிருக் கிறார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளார்.
நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல்தான் மாணவர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நீட் தேர் வுக்கு பின்னால் ஒரு சதி இருக்கிறது.
பள்ளிகளில் பாடத்திட்டத்தை வைத்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில்லை. தனியார் பயிற்சி நிறுவனங்களை வைத்து தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி அளிக்கின்றனர். அதற்கென தனியே கட்டணம் வசூலிக் கின்றனர். அப்படி செய்தால்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது.
மிகவும் கஷ்டப்பட்டு படித்துதான் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறு கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு மாண வர்கள் படிக்க வேண்டுமா? ஒரு மாணவர், தினமும் 15 மணி நேரம் படிப்பதாகச் சொல்கிறார். 15 மணி நேரம் படித்துதான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?
1970இல் ஆரம்பிக்கப்பட்ட செங்கல் பட்டு மருத்துவ கல்லூரி இன்றும் தரமாக இருக் கிறது. இந்தியாவில் முதல் 5 இடங்களில் உள்ளது. அவர்களெல்லாம் எந்த நீட் தேர்வுக்குப் படித்தார்கள்?
என் மகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற 100 பேரை வைத்துப் பேசுகிறார்கள். ஆனால் இந்த பயிற்சிக்கு பெற்றோர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று கேளுங்கள்.
அரசுப்பள்ளியில் படித்த 650 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் எதனால் சேர்ந்தார்கள்? தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீடு கிடைத்ததனால்தான் சேர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வினால் சேரவில்லை, நீட் பயிற்சி மய்யத்திற்கு செல்லாமல் தேர்ச்சி பெற்றது 100ல் ஒரு மாணவர் வேண்டுமானால் இருக்கலாம்.
நீட் தேர்வு பயிற்சிக்காக என் மகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் என 4 ஆண்டு களுக்கு 20 லட்சம் செலவு செய்திருக் கிறேன். மத்திய அரசுப் பணியாளர் என்பதால் நான் செலவு செய்துவிட்டேன். மற்ற பெற்றோர்கள் செய்யமுடியுமா?
இந்த ஆதங்கம் அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. இதற்கு முன்னால் ஆளுநரிடம் என்னால் நேரடியாக இதனை கேட்க முடியவில்லை. இப்போது தேர்வில் என் மகள் வெற்றி பெற்றதினால் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து இன்று கேள்வி கேட்டேன். ஆனால், ஆளுநர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்' என்று பேசினார்.
No comments:
Post a Comment