பேரன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு. கி.வீரமணி அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கம்.
மூட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, மக்கள் அனைவரும் சுயமரியாதையுடன் வாழவும், சமூக நீதியுடன் அனைவரும் ஒற்றுமையோடு நன்முறையில் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய கொள்கை கோட்பாட்டுடன் தந்தை பெரியார் வழிநின்று தொடர்ந்து தொண்டாற்றி தமிழர்தம் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் பணியாற்றியும் வருகின்ற தங்களுக்கு தமிழ்நாடு அரசு தகைசால் விருதும், பத்து லட்ச ரூபாய் பொற்கிழியும், பதக்கமும் அளிக்க உள்ளதை காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் வழியே கண்டும், கேட்டும், படித்தும் இன்புற்று மகிழ்த்தோம்.
தங்களின் பல்லாண்டு உழைப்புக்கும், அதன் வழி செயலாற்றிய திறத்திற்கும் கிடைத்திட்ட மதிப்புயர் விருதாக கருதுகிறோம். விருது பெறும் தங்களுக்கு நமது ஆதீனத்தின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். விருதளித்து பெருமை சேர்த்துக் கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கும் நன்றி பாராட்டினை தெரிவித்தும் மகிழ்கிறோம்.
மனித நேயத்தை, மாண்புகளை, மத நல்லிணக்கத்தை ஒழுகுதல், சமூக நீதி, எல்லோரும் ஓர் நிறை போன்ற சீர்திருத்த கருத்துகள் இந்தியா முழுவதும் பரவ தாங்கள் மேலும் பல்லாண்டு நலமோடு வாழ்ந்திடவும், நாம் வழிபடுகின்ற எல்லாம் வல்ல இறைவனை நினைந்து வாழ்த்துகிறோம்.
என்றும் சமய சமுதாயச் சேவையில்,
தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்
ஆதீன சந்நிதானம்
திலகவதியார் திருவருள் ஆதீனம் புதுக்கோட்டை
No comments:
Post a Comment