எங்கள் தலைவரே!
நேற்று (1.8.2023) செய்தி வெளியான நேரத்தில் உலகின் பலதரப்பட்ட தமிழர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சமூக ஊடகங்கள் வாழ்த்துச் செய்தி களால் நிரம்பின! இணைய இதழ்களோ, தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. ஆம்! எங்கள் தலைவர் "தகைசால் விருது" பெற இருக்கிறார்!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில், "தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" விருது 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண் டுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க் கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிர மாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்த வரும், 1962 இல் ‘விடுதலை' நாளிதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகப் பணி செய்து வருபவரும், ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு', ‘The Modern Rationalist'
(ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியரும், திரா விடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
"தகைசால் தமிழர்" விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ரூ.10 இலட்சத்துக் கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தின விழாவில் முதல் வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்," என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
திராவிடச் சக்கரமே!
அறிஞர் அண்ணா பங்கேற்ற ஒரு நிகழ்வில், 1943 ஆம் ஆண்டு ஒரு சிறுவராக கடலூர் செட்டிக் கோயில் மைதானத்தில் தன் பேச்சைத் தொடங்கியவர் ஆசிரியர் கி.வீரமணி! 1943, 53, 63, 73, 83, 93, 2003, 2013, 2023 என 80 ஆண்டுகளாகச் சுழல்கிறது இந்தத் திராவிடச் சக்கரம்! திராவிடர் இயக்கம் தோன்றி நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டது! இந்த நூற்றாண்டில், 80 ஆண்டு காலம் ஆசிரியரின் உழைப்பு இருக்கிறதென்றால், அவர்தான் தகைசால் தமிழர்; அவர்தான் தமிழர் தலைவர்!
இந்த நூற்றாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் எவ்வளவோ சாதனைகளைப் படைத்திருக்கிறது திராவிடர் இயக் கம்! இரண்டாயிரம் ஆண்டு கால ஆரிய மாயை, நூற்றாண்டு கால பகுத்தறிவு வெளிச்சத்தில் அம்பலப் பட்டு நிற்கிறது. ஓர் அறிவுசால் வாழ்க்கையைத் தமி ழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை, 10 ஆயிரம் ஆண்டு கால கீழடி படம் பிடித்துக் காட்டியுள்ளது! இதனை மீட்டெடுத்த வரலாறும் இந்த இயக்கத்திற்குச் சொந்தமானது! இந்தியாவில், தமிழ்நாடு மட்டும் அப் படியென்ன சிறப்பு என்பவர்களுக்கு இதுதான் பதில்!
திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சியே!
திராவிட விடுதி தொடங்கி, திராவிட சங்கம், தென் னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என இந்த நூற்றாண்டுகளில் பரிமாணங்கள் பல எடுத்து, இன்றும் உயிர்ப்போடு இயங்குகிற ஓர் அமைப்பை இந்தப் பாரினில் பார்த் ததுண்டோ! அப்படியான இயக்கங்களின் வரிசையில், இன்றைக்கு உலகம் முழுவதும் வேர் பரப்பி, விரிந்து நிற்கும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர்
கி.வீர மணி அவர்களுக்குத் "தகைசால் தமிழர்" விருது வழங்கியிருப்பதில் வியப்பேதும் தான் உண்டோ!
சி.நடேசனார் தொடங்கி, சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், தந்தை பெரியார், பனகல் அரசர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வரிசையில் திராவிடர் இயக்கத்தின் தலைவராக 90 ஆண்டுகளில் 80 ஆண்டுகளைத் தந்திருக்கிறாரே தமிழர் தலைவர், அந்தத் தலைவரைத் தமிழ்நாடு அரசுப் பெருமைப் படுத்துவது இணையில்லா மகிழ்வன்றோ நமக்கு!
இனத்தின் ஆசிரியரே!
திராவிட சங்கம், ஜஸ்டிஸ், திராவிடன், குடிஅரசு, ரிவோல்ட் (ஆங்கிலம்), புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, ஜஸ்டிஸ் சைட் (ஆங்கிலம்), உண்மை, மாடன் ரேஷன் லிஸ்ட் (ஆங்கிலம்) பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்) திராவிடப் பொழில் இவையனைத்தும் இந்த நூற்றாண்டுகளில் மக்கள் சேவை செய்து வந்த மலிவு விலை பத்திரிகைகள்! இதில் விடுதலை நாளிதழுக்கு மட்டும் தமது 60 ஆண்டுகளைத் தந்திருக்கிறார் தமிழர் தலைவர். ஏதோ... 50 பேரை வைத்துக் கொண்டு, இலாபத்தில் நடத்துகிற செய்திப் பத்திரிகை அல்ல இது! இரண்டாயிரம் ஆண்டு கால சதிக் கூட்டத்திடம் இருந்து, நம் மக்களைப் பாதுகாக்கிற கருத்துப் பத் திரிகை! பெரியாரின் சிந்தனைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், தம் ஆய்வின் மூலமும் 150 க்கும் மேற்பட்ட நூல்களை இச்சமூகத்திற்குத் தந்துள்ளார் ஆசிரியர்! நம் இனத்திற்கு ஒரு தந்தை, ஒரு அண்ணா, ஒரு கலைஞர் போல, நம் இனத்தின் ஆசிரியர் இவரே! அப்பேற்பட்ட சிறப்பிற்குரியவர் தகைசால் மனிதராகத் தானே இருக்க முடியும்!
மனித உரிமைப் போராளியே!
திண்ணைப் பிரச்சாரம் தொடங்கி, தெருக்கூத்துகள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், பயிற்சிப் பட்டறைகள், நாடகங்கள், பாடல்கள், திரைப்படங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், கருப்புக் கொடி காட்டுதல், கொடும்பாவி எரித்தல், மக்களைப் பாதிக்கிற சட்டங்களைக் கொளுத்துதல், ஹிந்தியைத் தார்ப்பூசி அழித்தல், இரயில் மறியல், மனுதர்ம சாஸ்திர எரிப்பு, உச்ச நீதிமன்ற ஆணை எரிப்பு, துண்டறிக்கை வெளியீடு, கரும்பலகையில் எழுதுதல், சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள், நூல் வெளியீடு எனத் திராவிடர் இயக்கங்கள் செய்த பிரச்சார முறைகள், உலகமே கண்டிராத மனித உரிமைப் போராட்டங்கள்!
இந்தப் போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் முழுமையாகப் பங்கெடுத்து, இன்று வரை தமிழ் நாட்டை மட்டும் எத்தனை முறை சுற்றி வந்திருப்பார் என்பதற்குக் கணக்கே இராது! நூற்றாண்டு கால வரலாறு, அவற்றில் தோன்றிய இயக்கங்கள், அதன் தலைவர்கள், அவர்கள் நடத்திய பத்திரிகைகள், செய்த பிரச்சாரங்கள் என்கிற வரிசையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பங்கு அளப்பரியது! மிகப்பெரியது!!
தகைசால் தமிழரே! தமிழர் தலைவரே! எங்கள் ஆசிரியரே! மகிழ்கிறோம்!நெகிழ்கிறோம்!!
No comments:
Post a Comment