புலவர் நன்னன் அவர்களுடைய எழுத்துகள் நமக்கு ஆயுதங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

புலவர் நன்னன் அவர்களுடைய எழுத்துகள் நமக்கு ஆயுதங்கள்!

திராவிடம் காலத்தை வென்றது - அதற்குரிய அறிவாயுதங்களைத் தந்தவர்தான் நூற்றாண்டு விழா நாயகர்!

புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்


சென்னை, ஆக.1 ‘‘திராவிடம் காலத்தை வென்றது - அதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதாரப்பூர்வமான அறிவாயுதங்களைத் தந்தவர்தான் நம்முடைய நூற்றாண்டு நிறைவு விழா நாயகர்! அவருடைய நினைவு என்பது, நமக்கு ஒரு புதிய தெம்பை, புதிய ஆயுதத்தை, புதிய திருப்பத்தைத் தரும். நன்னன் அவர்களுடைய எழுத்துகள் நமக்கு ஆயுதங்கள்; அதை செயலாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள்'' என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள்.
கடந்த 30.7.2023 அன்று மாலை சென்னை தியாக ராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் கலை அரங் கில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையாற்றினார்.
அவரது தலைமை உரை வருமாறு:

திராவிட இயக்க வரலாற்றில் 
இன்றைக்கு ஒரு பொன்னாள்!
திராவிட இயக்க வரலாற்றில் இன்றைக்கு ஒரு பொன்னாள் என்று குறிப்பிடவேண்டிய - மிகச் சிறந்த வரலாற்றுப் பொன்னாளாக இருக்கக்கூடிய நாள் இந்நாள்.
பகுத்தறிவு புலவர் பேராசிரியர் முனைவர் நன்னன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை யார் தொடக்கி வைக்கவேண்டுமோ, நிறைவு செய்ய வேண்டுமோ அத்தகைய சிறப்பு வாய்ந்த நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்' ஆட்சியின் - இந்தியாவிற்கே வழி காட்டக் கூடிய ஆட்சி - இன்னுங்கேட்டால், புதிய இந்தியாவை உருவாக்கக் கூடிய ஓர் ஆட்சி- இன்னுங் கேட்டால், இந்தியா என்ற வார்த்தையை இப்பொழுது நாம் சொல்லும்பொழுது, யார் யாரோ மிரளுகிறார்கள். அந்த மிரட்சிக்குரிய நாயகர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கக்கூடிய நாயகராக இன்றைக்குச் சிறப் பாக வருகை தந்துள்ளார். நன்னனுடைய கம்பீரத்தை இதில் நான் காணுகிறேன்; நன்னன் அவர்கள் கொள் கையில் எப்பொழுதுமே சமரசம் செய்துகொண்டதே கிடையாது. அது திராவிட இயக்கத்தினுடைய பண்பு, மாண்பு - மறக்க முடியாத - பிரிக்க முடியாத தனித்தன்மை.

இன எதிரிகளை ஓட ஓட விரட்டக்கூடிய 
மிக முக்கியமான கொள்கைப் பிரகடனங்கள்
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இங்கே வந்து அமர்ந்தவுடன், அவருடன் கைகுலுக்கி சொன்ன செய்தி, கடந்த இரண்டு நாள்களாக, நேற்று (29.7.2023) தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் அவர்கள் ஆற்றிய உரை யிலும் சரி, அதற்கு முன்னதாக வாக்குச் சாவடி முகவர் களைத் தயாரிக்கக் கூடிய திருச்சியில் ஆற்றிய உரை யிலும் சரி, இன எதிரிகளை ஓட ஓட விரட்டக்கூடிய மிக முக்கியமான, ஓர் அற்புதமான கொள்கைப் பிரகட னங்களாக  அவை அமைந்தன. அத்தகைய நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே, முதலில் எங்கள் அன்பு வணக்கம்!

‘‘பதவி'' அல்ல; ‘‘பொறுப்பு!''
பதவிகள் ஒரு பொருட்டல்ல. அவர்கள் சிறப்பாக நேற்றுகூட சொல்லியிருக்கிறார்கள். மேயர் என்ற ‘‘பதவிக்கு'' என்று அவர் எழுதியபொழுது, நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் - ஒப்பற்ற நாயகர் முத் தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திருத்தம் செய்தார்கள் - அந்தத் திருத்தம் என்னவென்று சொன்னால், ‘‘மேயர் பதவி'' என்பதை அடித்துவிட்டு, ‘‘பொறுப்பு'' என்று அழகான வார்த்தையை எழுதியதாகச் சொன்னார்கள்.
எனவே, நாம் அனைவரும் இன்றைக்கு ஏற்றிருப்பது எதுவாக இருந்தாலும், அவை ‘‘பதவிகள்'' அல்ல - ‘‘பொறுப்புகள்'' என்று சொல்லக்கூடிய ஒரு திருப்பத்தை திராவிட இயக்கத்தால் மட்டும்தான் தர முடியும்.
ஏனென்றால், திராவிட இயக்கம் தொடங்கியது இந்த பதவியை மய்யமாக வைத்தல்ல. இனத்தின் மாண்பை, மறக்க முடியாத, இழந்த ஒன்றை மீட்டுருவாக்கம்  செய்யவேண்டும் என்பதற்காக பிறந்த அமைப்புதான் திராவிடர் இயக்கம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பின்பற்றக்கூடிய அளவிற்கு...
அப்படிப்பட்ட திராவிடர் இயக்கத்தினுடைய தனித் தன்மையை, இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல, தென் னாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பின்பற்றக்கூடிய அளவிற்கு, அதை ஆளாக்கி, இதோ உங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் - உங்கள் வழிகாட்டுதலைத்தான் நாங்கள் என்றைக்கும் எதிர்பார்த்துத் தயாராக இருக் கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியை நாம் எல்லோரும் பெற் றிருக்கின்றோம்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடிய நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர்- கழகத்தின் கணினி என்று அம்மையார் சொன்னதைப்போல சிறப்பாக இருக்கக்கூடிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
அதேபோல, மாண்புமிகு அமைச்சர் ஒப்பற்ற மா.சு. அவர்களே,  கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அவர்களே,

பாரம்பரியம் மிக்க நம்முடைய இயக்கத்தினுடைய வாரிசுகளுக்கு வாரிசு!
பள்ளிக் கல்வித் துறையில் ஓர் இளைஞராகவும், அதேநேரத்தில் பக்குவப்பட்டவராகவும் சிறப்பான வகையில் பல்வேறு காரியங்களைச் செய்துகொண் டிருக்கக் கூடிய, பாரம்பரியம் மிக்க நம்முடைய இயக் கத்தினுடைய வாரிசுகளுக்கு வாரிசாக இருக்கக்கூடிய நம்முடைய அருமைச் சகோதரர் மாண்புமிகு மானமிகு அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்களே,
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில், அய்யா நன்னன் இல்லையானாலும், பார்வதி அம்மையார் அவர்கள் இங்கே இருப்பது, எங்களுக்கெல்லாம் மிகுந்த மனநிறை வைத் தருகிறது.
நூற்றாண்டு நிறைவு விழாவை அம்மையார் கண்டு களித்திருக்கிறார்கள். அய்யா நன்னன் வாழுகிறார் என்று  உங்களைப் பார்த்து நாங்கள் நினைக்கிறோமே தவிர, நன்னன் மறைந்துவிட்டார் என்று நினைக்க வில்லை.
ஒரு சம்பவம் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
நன்னன் அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்து, மறைந்த நிலையில், அவர்களை எரியூட்டுவதற்காக உடலை எடுத்துச் செல்லக்கூடிய நேரத்தில், ஒரு காட்சி - மறக்க முடியாத ஒரு காட்சி!

பார்வதி அம்மையாரின் 
உறுதிமொழியினுடைய புதுப்பிப்பு!
அம்மையார் அவர்கள், இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள் அவரோடு என்பது முக்கியமல்ல; அற்புதமான பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களை உருவாக்கினார்கள் புறநானூற்று தாய் போல என்பது முக்கியமல்ல!
அதையும்தாண்டி, கடைசியாக நன்னன் அவர்களின்  கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘அத்தான் இதுவரையில் நீங்கள் காட்டிய கொள்கைப்படி நான் வாழ்ந்து வந் திருக்கின்றேன்; என்னை வழிநடத்தி வந்திருக்கிறீர்கள்; இனிமேலும் அதே கொள்கையோடு இறுதிவரையில் நான் இருப்பேன்'' என்று உறுதிமொழி கூறினாரே, அந்த உறுதிமொழியினுடைய புதுப்பிப்பு விழாதான் இந்த நூற்றாண்டு நிறைவு விழா!
அப்படிப்பட்ட சிறப்புமிகுந்த  அவர்களுடைய செல் வங்களே, வேண்மாள் அவர்களே, அவ்வை அவர்களே, அவர்களுடைய செல்வங்களே, பெருமைமிக்க இங்கே இருக்கக்கூடிய நம்முடைய துணை மேயர் உள்பட, நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் உள்பட, நம் முடைய முதுபெரும் தோழர் அமிர்தம் அவர்கள் உள்பட அத்துணை பேருக்கும் என் அன்பான வணக் கத்தைத் தெரிவித்து என் தலைமை உரையைத் தொடங்குகின்றேன்.
நான் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளப் போவ தில்லை; காரணம், உங்களுக்கெல்லாம் தெரியும். முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு சுமைகள் - எந்த நிகழ்ச்சியிலும் அவரை அதிக நேரம் அமர வைத்திருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு மணித்துளியும் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டிய, வழிகாட்டக்கூடிய - நாளும் இன்றைக்கு நாளைய நிலையை மாற்றக்கூடிய சிந்தனையுள்ள நிமிடங்கள்.

எல்லாவற்றிலும் முதலமைச்சர் 
சாதனை, சாதனை என்று, சாதனைகளை செய்துகொண்டிருக்கிறார்
‘‘காலம் பொன் போன்றது'' என்று சொன்னார் நம்முடைய கலைஞர் அவர்கள். ஆனால், பொன்னைவிட அதிகமாக இன்றைக்கு என்ன சொல்ல முடியுமோ, அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். எந்த நிகழ்ச்சியிலும் அவர் அதிகமாகப் பேசுவதில்லை. அதுமட்டுமல்ல, எல்லாவற்றிலும் அவர் சாதனை, சாதனை என்று, சாதனைகளை செய்துகொண்டிருக்கிறார்; அதற் காக அவரைப் பாராட்டுவதற்குக்கூட எங்களுக்கு நேரமில்லை. காரணம், ஒன்றை செய்து முடிப்ப தற்குள் இன்னொன்று வேகமாக வந்து விழுகிறது; அதன்மேல் இன்னொன்று வந்து விழுகிறது.
ஆகவே, எதைப் பாராட்டவேண்டும் என்று அறிக்கை எழுதுகிறபொழுதுகூட அந்த சிக்கல் எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு.
அப்படிப்பட்ட அளவிற்கு சாதனைகளும், காலமும் வேகமாக இருப்பதினால், அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், ஒரு சில கருத்து களை மட்டும் எடுத்துச் சொல்கிறேன்.

நன்னன் அவர்கள் கொள்கையிலே சமரசம் செய்துகொள்ளாதவர்
அய்யா நன்னன் அவர்கள் கொள்கையிலே சமரசம் செய்துகொள்ளாதவர். பிடிவாதமாக இருப்பார்கள். இங்கே சொன்னதைப்போல, அவர்கள் மாணவப் பரு வத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்த காலம் முதற்கொண்டு, அவர்களை அறிந்தவன் நான்.

திருஞானசம்பந்தனாக இருந்தவர் ‘நன்னன்’ ஆனார்
நான் பள்ளி மாணவன்; அதேநேரத்தில், இந்த இயக்கத்தில் சிறுவயது முதல் ஈடுபட்டதினால், நாங்கள் எல்லாம் ஈரோட்டுப் பயிற்சி முகாமில், கலைஞரைப் போன்றவர்கள் எல்லாம் அங்கே இருந்த காலகட்டத்தில், அய்யா நன்னன் அவர்களும் அங்கே பயின்றது மட்டுமல்ல - முதன்முறையாக 
திருஞானசம்பந்தனாக இருந்தவர் ‘நன்னன்' ஆனார்.
எப்படி ராமையா அன்பழகன் ஆனாரோ,
நாராயணசாமி எப்படி நெடுஞ்செழியன் ஆனாரோ,
சோமசுந்தரம் எப்படி மதியழகன் ஆனாரோ,
ஏன், சாரங்கபாணி எப்படி வீரமணி ஆனாரோ,
அதேபோலத்தான், இந்த இயக்கத்திலே மிகப்பெரிய மாறுதலை உருவாக்கி அவர் உள்ளே நுழைந்தார். அதற்குமுன் அவர் வைதீக உணர்வு படைத்தவர்; ஆழ்ந்த சைவப் பற்று உள்ளவர். ஏனென்றால், அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி.
அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து இந்த இயக்கத் திற்கு வந்த பிறகு, கொள்கையைக் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல், யாரிடத்திலும் அறிவுப்பூர்வமாக வாதாடக் கூடியவர். மேடையிலும் சிறப்பாக வாதாடுவார்.
நண்பர்களே, இறுதிக் காலத்தில் அவர் படுக்கையில் இருந்தபொழுதுகூட அவருடைய சிந்தனையாற்றல் குறையவில்லை. அப்படி சிந்தனையாற்றல் குறையாத காலத்தில்தான், இறுதியில் அவர் மறைவதற்கு முன் எங்களை அழைத்தார். நாங்களும் உடனடியாக அவரைப் பார்க்கச் சென்றோம்.
அவருடைய இல்லத்தில் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் பேசினோம்; கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் உடனிருந்தார்.
அப்பொழுது நன்னன் அவர்கள்,  தன்னுடைய ‘‘மரண வாக்குமூலம்'' என்று சில கருத்துகளைச் சொன் னார்.
ஒரு பேட்டியைக் கொடுக்கிறார். உற்சாகத்தோடு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார். அதில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

நன்னன் அவர்களையே பேச வைப்பது சிறப்பு!
நன்னன் அவர்களைப்பற்றி பேசுவதைவிட, நன்னன் அவர்களையே நூற்றாண்டு நிறைவு விழாவில் பேச வைப்பது என்பது மிகவும் சிறப்பானது; அதுதான் மிகவும் முக்கியமானது.
அந்த அடிப்படையில்தான் நண்பர்களே, அதை நாங்கள் ‘விடுதலை' மலரிலே பதிவு செய்திருக்கின்றோம்.
எந்தப் பணியை தாம் மேற்கொண்டு இந்தியாவையே காப்பாற்றக் கூடிய அளவிற்கு, இந்திய ஜனநாயகத்தையே மீட்டெடுக்கக் கூடிய அளவிற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே மீண்டும் உண்மையான மரியாதையை, மதிப்பை ஏற்படுத்துவதற்கு எப்படி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தியாவையே ஒன்றுபடுத்தி இருக்கிறார்களோ, வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, இந்தப் பணியை, அவர்கள் எப்படி தந்தை பெரியாரைப் போல, அண்ணாவைப் போல, நம்முடைய கலைஞரைப் போல எப்படி அந்தக் கொள்கை வாரிசாக நின்று,  செய்து வருகிறார்களோ, அதேபோன்று நம்முடைய புலவர் நன்னன் அவர்களும் செய்தார்கள் என்பதற்கு ஒன்றே ஒன்றை இங்கே சொல்லவேண்டும்.
பல கேள்விகள் இருக்கின்றன; ஒரு கேள்வியை அன்று அவரிடம் கேட்டதை எடுத்துச் சொல்கிறோம். அது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
நன்னன் அவர்கள் கட்டிலில் அமர்ந்திருக்கின்றார்; நாங்கள் பக்கத்தில் இருக்கிறோம்.
உங்களுக்கெல்லாம் தெரியும்; நன்னன் அவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
இப்பொழுது நாமெல்லாம் காணொலி, காணொலி என்று காணொலியில் பேசுகிறோம்.
மக்கள் அதைக் காணாத காலத்தில், தன்னுடைய ஒலியைக் குறைக்காமல் சொல்லிப் பழக்கப்படுத்தியவர், தமிழுக்கு வகுப்பெடுத்தவர் நம்முடைய புலவர் நன்னன் அவர்கள், நூற்றாண்டு விழா நாயகர்.
நடிப்புத் திலகமாக இருக்கக் கூடிய நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்கூட, ‘‘என்னால்கூட இப்படி செய்ய முடியாது; அவ்வளவு அழகாக நீங்கள் தொலைக்காட்சியில் செய்கிறீர்களே, எப்படி?'' என்று வியப்போடு அழைத்து, அவருக்கு விருந்து கொடுத்தார்.

நன்னன் அவர்களின் ‘‘மரண வாக்குமூலம்!''
அய்யா நன்னன் அவர்கள் பதில் சொன்ன முறை யிலேயே அதை அப்படியே இங்கே சொல்லுகிறேன்.
கேள்வி: இன்றைய அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?
நன்னன் அவர்களின் பதில்: ஆர்.எஸ்.எஸ். எல்லாம் பா.ஜ.க. வந்த பிறகு, இப்போ அவன் துள்றான்; பேசினா, காட்டுத்தனமா பேசுவானுவ.  பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஜயபாரதம் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரு ஒழுங்கில்லாம கத்துவான்; நம்மளை பேசவிடாது கத்துவான். (கவிஞர் குறுக்கிட்டு, ‘‘நீங்களும், இராம.கோபாலனும் மயிலாப்பூரிலே விஜில்'' என்றார்).
ஆமாம், அதுக்கப்புறம் என்னை எங்கியாவது பார்த்தாக்க, பேசிட்டுத்தான் போவாரு அந்த ஆளு.
அப்படி ஏதாவது ஒரு முயற்சி உண்டுபண்ணனும் அப்படின்னு  நினைச்சேன். அதுக்கல்லாம் நாம இடம் குடுக்கக் கூடாது. நமக்கு உண்மையான எதிரி இந்தியாவுலே இப்பத்தான் வந்திருக்கான்.''
நன்றாகக் கவனியுங்கள் தோழர்களே, இது நன்னன் பிரகடனம் மிக முக்கியமான காலகட்டத்தில்.
அந்தப் பிரகடனத்தை செய்கின்ற மாபெரும் தலைவராகத்தான் இங்கே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள், போர்க் களத்தில் இருக்கின்ற தளபதியாக.

எதிரி என்ன ஆயுதத்தை எடுக்கிறானோ, அதே ஆயுதத்தை நாம் பயன்படுத்தவேண்டும்!
இந்தப் போர் ஜனநாயகப் போர் - இந்தப் போர் அறிவாயுதப் போர் - இந்தப் போர், ஆயுதம் தாங்காமல், அவர்கள் மொழியில் சொன்னால், நேற்றுகூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் - எதிரி என்ன ஆயுதத்தை எடுக்கிறானோ, அதே ஆயுதத்தை நாம் பயன்படுத்தவேண்டும் என்று அற்புதமாக, சிறப்பாக இளைஞரணி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசும்போது சொல்லியிருக்கிறார்.
அய்யா நன்னன் சொல்கிறார், கேளுங்கள், நன்றாகக் கவனியுங்கள் தோழர்களே, இன்றைக்குச் சொல்வது போன்று இருக்கிறது பாருங்கள்; இவைதான் காலத்தை வென்ற கருத்துகள்; இதுதான் பகுத்தறிவினுடைய உச்சக்கட்டம்; ஒருவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால், காலம் அவருக்கு அடிமை; அவர் காலத்திற்கு அடிமையாகமாட்டார், ஒருபோதும்.
அந்த அடிப்படையில் சொல்கிறார்,

புதிய முறைகளில், அய்யாவினுடைய கொள்கைகளைக் கொண்டு போகணும்!
‘‘நமக்கு உண்மையான எதிரி இந்தியாவுலே இப்பத்தான் வந்திருக்கான். காங்கிரசுகாரனெல்லாம் நமக்குப் பெரிய எதிரி கிடையாது.  இப்பதான் வந்திருக்கான். அவன் ஒரு ஆர்கனைஸ் பண்ணி வச்சுகிட்டுதான் தொடங்கியிருக்கான். அதுக்கு பதிலடி நாம் எப்படிக் குடுக்கிறது? அப்படின்னு நினைச்சேன். அதுக்கு எனக்குப் பெரிசா ஆராய்ச்சி பண்றதில்லே அந்த நேரத்திலே நினைச்சா வர்ற கருத்துதான்.  நம்மகிட்ட இருக்கிற வசதிக்கேற்ப, புதிய முறைகளில், அய்யாவினுடைய கொள்கைகளைக் கொண்டு போகணும். ஆசிரியர் பல விசயங்களைத் தொகுத்துக் குடுக்கிறாரு; நான் பாத்துக்கிட்டுதான் இருக்கேன். நல்லா போயிட்டிருக்கு'' என்று சொன்னார்.
அதைத்தான் நேற்றுவரையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அறிவாயுதத்தை எடுங்கள்; அதேநேரத்தில், தேவையான ஆயுதங்களை எடுங்கள் என்று இந்த நாட்டில் மதவெறியைப் பரப்ப, ஜாதி வெறியைப் பரப்ப இருந்துகொண்டு இருக்கின்றவர்களைப் பார்த்து இந்தப் பிரகடனத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

‘நன்னன்குடி’  சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்குப்  பரிசு!
இன்னொரு பக்கத்தில் சொல்லவேண்டுமானால், நன்னன் அவர்களுடைய சிந்தனை - ஒவ்வொரு ஆண்டும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை பட்டியல் போட்டு, ‘நன்னன்குடி'  வழியாக அவர்களுக்கெல்லாம் தங்கப்பதக்கம், மற்றவை வழங்குவதை அவருடைய காலத்திலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அண்ணல் அவர்களுடைய நினைவிலே அவர்கள் செய்வார்கள்.
அப்படி வருகிறபொழுது, ஜாதியை எப்படி ஒழிப்பது என்றால், இந்த இயக்கம் பிறந்தது அதற்குத்தான். 

ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக ‘‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’’
இந்தியாவிலேயே இந்தத் திராவிட மாடல் ஆட்சியில், கலைஞர் அவர்கள் செய்ததைத் தொடர்ந்து இன்றைக்கு வேகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்  நம்முடைய முதலமைச்சர் அவர்கள். ஜாதி ஒழிப்பிற்காக, ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக ‘‘பெரியார் நினைவு சமத்துவபுரம்'' என்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா, சமத்துவபுரம்?
நாடே சமத்துவபுரமாக வேண்டும் என்பதற்குத்தான் ‘திராவிட மாடல்'. எனவே, அந்த திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டுவருவதுதான் மிகவும் முக்கியம்.
யாராக இருந்தாலும், ‘பாத யாத்திரை' என்றெல்லாம் போனால்கூட இதை அசைக்க முடியாது.
அது ‘பாத யாத்திரை' அல்ல நண்பர்களே, ‘பாதக யாத்திரை'.

நன்னன் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி
மண்ணுக்கும், மக்களுக்கும் பாதக யாத்திரை நடத்திக்கொண்டு, இந்த மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால், அதற்கு இடம்கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, வேரை நோண்டி, விஷத்தை அங்கே புதைத்திருந்தால், அதைக்கூட வெளியே கொண்டுவரக் கூடிய ஆற்றல் இந்தத் ‘திராவிட மாடலுக்கு' உண்டு; திராவிட இயக்கத்திற்கு உண்டு. அதைத்தான் நன்னன் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியாகும்.
ஒரே ஒரு கருத்தைச் சொல்லி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.

‘‘சும்மா இருக்க முடியவில்லை!’’ 
‘‘சும்மா இருக்க முடியவில்லை!'' என்ற தலைப்பில் அய்யா நன்னன் அவர்கள் பேசியதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் நமக்கு வருங்காலத்து செல்வமாக இன்றைக்கு இருக்கிறது; ஆவணமாக இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், திராவிட இயக்கமும் எவ்வளவு பெரிய பணியைச் செய்து ஆழமானவர்களை உற்பத்தி செய்துள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். எத்தனையோ எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தவர்கள்.
இதோ அய்யா நன்னன் அவர்கள் சொல்கிறார்:
24.5.2009, காலை 8.30 மணி
‘‘திராவிட மக்களிடையே ஆரியம் புகுத்திய பொல்லாங்குகள் பலவற்றில் குறிப்பிடத்தகுந்தது ஜாதி முறை. அதனைத் திருவள்ளுவர்முதல் பெரியார்வரை பலரும் எதிர்த்து, ஒழிக்க முயன்றுள்ளனர். இன்றும் ஜாதி வேண்டும் என்போர் குறைவானவர்களே; அவர்களும் வெளிப்படையாக அதனைக் கூறார். பிறர் எல்லோரும் ஜாதி ஒழிக என்றுதான் முழங்குகின்றனர்.
அரசும், சட்டமும், நீதியும், சமயங்கள் பலவும் ஜாதியை ஏற்பதில்லை. ஆனாலும், ஜாதி வாழ்ந்துகொண்டுதான் உள்ளது. என்றேனும் ஒரு நாள் அந்த ஜாதி அறவே ஒழிந்தாலும் ஒழியக்கூடும். அந்த ஜாதிப் பான்மை, ஜாதியியல், ஜாதி மனப்பான்மை போன்றன ஒழியமாட்டா என்று தோன்றுகிறது.  அது இருப்பதில் பெரும்பாலானவர்களுக்கு ஏதேனும் ஒரு வகை பலன் இருப்பதுபோல் தோன்றும். அவர்கள் அதனால் தமக்கு ஏற்படும் கேடு, இழிவு போன்றவற்றையும் பொருட்படுத்தாமல், தாம் வேறு சிலரைவிடவேனும் உயர்ந்தவர் என்ற எண்ணத்தில் மிதக்கின்றனர். அதனால், ஜாதிப்பான்மை அழிவது அரிதினும் அரிதே! கலப்புத் திருமணத்தாலும் ஜாதிப்பான்மை முற்றிலும் ஒழியவில்லை.
ஜாதிப்பான்மை அறவே ஒழிக்கப்படவேண்டுமாயின், மழலைப் பருவம் முதல் காளைப் பருவம் வரை அவர்களிடையே எவ்வித ஜாதி வாடையையும் வீசாதபடி, திராவிட மாந்தரை வளர்க்கவேண்டும். அதற்கு எமக்குத் தெரிந்த வழி, பால்மறந்த குழந்தைகள் அனைத்தையும் ஜாதி இருளும், சமய நாற்றமும் அணுக முடியாத இடத்தில் அவர்கள் வளரவேண்டும். அதற்கு நாட்டுக் குழந்தைகள் அனைத்தையும் அரசே வளர்த்து ஆளாக்கிய பின், அவ்விளைஞர்களை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கவேண்டும். இத்திட்டம் தொடர்ந்து எப்போதும் நடைபெறவேண்டிய தேவை ஏற்படாது'' என்று சொல்லுகிறார்.
அதற்கு அடித்தளம் நாட்டுவதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இங்கே  இருக்கிறார். நம்முடைய அருமை முதலமைச்சர் அவர்கள் காலைச் சிற்றுண்டி முதற்கொண்டு கொடுத்து, பள்ளிகளுக்கு வாருங்கள், வாருங்கள் என்று மாணவர்களுக்கு உற்சாகத்தைத் தந்து, அதற்கு முதற்கட்டத்தை என்ன செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்கிறார்.
படிக்காதே என்று சொன்னது மனுதர்மம் - 
படிக்காதே என்று தடுத்தது சனாதனம் -
படி என்று சொல்வது திராவிடம்!
படித்தாகவேண்டும் என்று சொல்வது திராவிடம் - சொன்னது மட்டுமல்ல - அதற்குவேண்டிய காரியங்களை செய்கிறது.
எனவேதான், திராவிடம் என்பது! அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடியது. இந்த ‘திராவிட மாடல்' ஆட்சி அந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
எனவே, ஒரு காலத்தில் நம்முடைய தலைவர்கள் எதை எதிர்பார்த்தார்களோ, அதை செய்யக்கூடிய ஆட்சியாக, செய்யக்கூடிய தலைவராக, செய்யக்கூடிய அரும்படையாக  இங்கே இருப்பதைவிட, நன்னன் போன்றவர்களுக்கு நாம் வேறு பெருமை அளிக்க முடியாது.

அய்யா நன்னனின் நினைவுச் சின்னமாக  நாம் இருக்கிறோம்
எனவே, அவருடைய நினைவுச் சின்னமாக நாம் இருக்கிறோம். முதலமைச்சர் போன்றோர் எதை வேண்டுமானாலும் அரசு சார்பாக செய்யலாம்; காரணம், நெருக்கடி காலத்தில் அய்யா நன்னன் அவர்களும் பாதிக்கப்பட்டவர். நெருக்கடி காலத்தில் எங்களைப் போன்றவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு போய் மிருகத்தனமாக நடத்தினார்கள், அடித்தார்கள் என்பதெல்லாம் பழைய காலம்.
ஆனால், அதிகாரிகளாக இருந்தவர்களைக்கூட அவர்கள் தொல்லைப்படுத்தினார்கள்.
அதையெல்லாம் தாண்டிதான் இந்தக் கொள்கை நின்றது; அதையெல்லாம் தாண்டிதான் இன்றைக்கும் வாழுகிறார்கள் தமிழ்த் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள். 
திராவிடம் காலத்தை வென்றது!
திராவிடம் காலத்தை வென்றது - அதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதாரப்பூர்வமான அறிவாயுதங்களைத் தந்தவர்தான் நம்முடைய நூற்றாண்டு நிறைவு விழா நாயகர்!
எனவே, அவருடைய நினைவு என்பது, நமக்கு ஒரு புதிய தெம்பை, புதிய ஆயுதத்தை, புதிய திருப்பத்தைத் தரும். 
இந்தக் காலகட்டத்திலே நன்னன் அவர்களுடைய கருத்துகள் நமக்கு ஆயுதங்கள்; அதை செயலாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள்.
நன்னன் போன்றவர்களுடைய கனவு நனவாகிவிட்டது என்பதற்கு வேறு அடையாளம் இல்லை!
எனவே, தலைமையை ஏற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்றி, நாட்டில் வரக்கூடிய லட்சியப் போரை அடையாளம் கண்டுகொண்டு, ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது மிக முக்கியம்'' என்று சொன்னாரே, அந்தப் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அந்த வெற்றியை நம்முடைய முதலமைச்சர் பெற்றால், நன்னன் போன்றவர்களுடைய கனவு நனவாகிவிட்டது என்பதற்கு வேறு அடையாளம் இல்லை என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க நன்னன்!!
வளர்க பகுத்தறிவு!!! 
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment