மக்கள் பார்வைக்கும் - விவாதத்திற்கும் உடனடியாக ஒன்றிய அரசு வெளியிடவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

மக்கள் பார்வைக்கும் - விவாதத்திற்கும் உடனடியாக ஒன்றிய அரசு வெளியிடவேண்டும்!

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு  தொடர்பான 

ஜஸ்டிஸ் ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்?

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு  தொடர்பான ஜஸ்டிஸ் ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மக்கள் பார்வைக்கும் - விவாதத்திற்கும் உடனடியாக ஒன்றிய அரசு வெளியிடவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்

அவரது அறிக்கை வருமாறு:

ஜஸ்டிஸ் ஜி.ரோகிணி கமிஷன்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் மேனாள் தலைவர் ஜஸ்டிஸ் ஜி.ரோகிணி தலைமையில் 2017 இல் ஒரு கமிஷனை ஒன்றிய பா.ஜ.க. அரசு நியமித்தது.

பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஜாதிகளில் துணை ஜாதிகள், பிரிவுகள் (Sub-Categorisation) பற்றி ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும், பரிந்துரைக்க வேண்டும் என்பதே அதற்குரிய பணி. காரணம், பிற் படுத்தப்பட்டோரில் ஏராளமான ஜாதிகள் இருப்பதால், அவர்களுக்குள்ள இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது!

ஒன்றிய (அரசு)ப் பட்டியலில் உள்ள 2,600 ஜாதிகளை வகைப்படுத்திட வழிவகை செய்திடுவதுபற்றிய பரிந் துரைகளைத்தான் அக்கமிஷனிடம் ஒன்றிய அரசு எதிர்பார்ப்பதாகச் சொல்லப்பட்டது.

இதற்குத் தலைவருடன் கூடுதல் உறுப்பினராக டாக்டர் ஜே.கே.பஜாஜ் என்பவர். இவர் Centre for Policy Studies அய் சேர்ந்தவர். மேலும் இந்திய மானுடவியல் ஆய்வகத்தின் (Anthropological Survey of India) இயக்குநர், இந்திய அரசின் தலைமைப் பதிவாளர் (The Registrar General of India), சமூகநீதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்கள் ஆவர்.

 இந்த ஜஸ்டிஸ் ஜி.ரோகிணி, டில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மேனாள் தலைமை நீதிபதி ஆவார்!

தொடக்கத்தில் 12 வாரங்களில் பணியை முடிக்க வேண்டுமென காலக்கெடு இக்கமிஷனுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. இதுவரை 14 பதவி நீட்டிப்புகள் (Extension) தரப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாகத் தரப்பட்ட பிறகே இந்த அறிக்கையை ஜஸ்டிஸ் ரோகிணி கமிஷன் கடந்த 2023 ஜூலை 31 ஆம் தேதி ஒன்றிய அரசிடம் தந்துள்ளது!

சட்டப்படி தடையில்லை!

27 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கல்வி, உத்தியோகங்களில் எப்படி எந்தெந்த ஜாதிகளுக்குக் கிடைத்துள்ளது, அதில் எப்படி இனி மாற்றம் செய்யலாம்; அவர்களில் துணை ஜாதிகளை, உட்பிரிவுகளை (Sub-Categorisation) எப்படி ஆக் குவது? எந்த ஜாதி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் இந்தக் கமிஷன் அறிந்து, அதற்கு மாற்று ஏற்பாடுகளுக்குரிய வழிவகைகளையும் குறிப்பிடும் என்றும் கூறப்பட்டது.

பரவலாக பல ஜாதிகளுக்கும் இதுபோல் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும், அதை ஆராயவேண்டும் என்பதுதான் அதன் பணி என்றும் சொல்லப்பட்டது.

இதன் நோக்கம் வரவேற்கத்தக்கதுதான்; மண்டல் கமிஷன் வழக்கான இந்திரா சகானி வழக்கிலேயே, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இட ஒதுக்கீட்டைப் பிரித்து 27 சதவிகிதத்தைத் தரலாம்; சட்டப்படி தடையில்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால், அதை ஒன்றிய அரசு இது நாள்வரை பின்பற்றவோ, அமல்படுத்தவோ இல்லை!

‘திராவிட மாடல்' ஆட்சியின் வரலாற்றுச் சாதனை - 34 ஆண்டுகளுக்கு முன்பே!

சமூகநீதி மண்ணான தந்தை பெரியார் மண்ணில், நமது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தனித் துறையை ஏற்படுத்தி சாதனை புரிந்ததோடு, அடுத்து பிற்படுத்தப் பட்டோரில் மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் என்று மொத்தம் 50 விழுக்காட்டில், 30:20 என்று பிரிக்கப்பட்டது. 30 சதவிகிதத்தில்  பிற்படுத்தப்பட்டோர்; 20 சதவிகிதத்தில்  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்து, இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்புக்கு முன்னதாகவே, இந்தியா வுக்கே புதிய வழியை சமூகநீதிப் பாதையில் காட்டினார்.

‘திராவிட மாடல்' ஆட்சியின் வரலாற்றுச் சாதனை இது! 34 ஆண்டுகளுக்கு முன்பே இது!

சமூகநீதியாளர்களின் 

மில்லியன் டாலர் கேள்வி

இந்நிலையில், இவ்வளவு பெரும் நிதியை செல வழித்து - 14 முறை கால நீடிப்புகள் தந்து - 6 ஆண்டு காலத்திற்குப் பின் அளிக்கப்பட்ட இந்த ரோகிணி கமிஷன் - முந்தைய முதலாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனான காகாகலேல்கர் கமிட்டியின் பரிந்துரை அறிக்கை போலவே  மீண்டும் நூலக அலமாரிக்குள்தான்  வைக்கப்படப் போகிறதா? என்பதே சமூகநீதியாளர்களின் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

நாடாளுமன்ற இக்கூட்டத் தொடரிலேயே வெளியிடுவது அவசர அவசியம்

முதலாவதாக இந்த அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். அதன் பரிந்துரைகள்மீது நாடு தழுவிய விவாதங்கள் நடைபெறட்டும்; எங்கள் அரசு வெளிப்படைத்தன்மைமிக்க (Transparent Government) அரசு என்று முன்பு தேர்தலின்போது பிரதமர் மோடியால் கூறப்பட்டபடி, இதை நாடாளுமன்ற இக்கூட்டத் தொடரிலேயே வெளியிடுவது அவசர அவசியமல்லவா?

6 ஆண்டுகள், 14 முறை கால நீடிப்புகள் - எல்லா வற்றிற்கும் ஒரே சமா தானம் கோவிட்-19 என்று கூறப்பட்டது.

அது எப்படியானாலும், அறிக்கை சமர்ப்பிக்கப் பட்ட பின், வெளியிடுவ தற்கு ஏன் காலதாமதம்? ஒன்றிய சமூகநீதித் துறை ஏன் தயங்கவேண்டும்? என்பதுதான் சமூகநீதி யாளர்களின் நியாயமான கேள்வி.

ஒன்றிய அரசின் கடமையல்லவா?

இன்னொரு கொடுமை இதில் என்னவென்றால், இவ்வாண்டு இதுவரை இதற்குச் செலவழித்த ஊதியத் தொகை செலவு, ஆலோசகர் களுக்குப் பணம் (ஆறு ஆண்டுகளுக்கான) எதற்கும் சரியான பதிவேடு (Record) இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

அது உண்மையா இல்லையா, அதைத் தெரிவிக்க வேண்டியதும் ஒன்றிய அரசின் கடமையல்லவா?

அனைத்திலும் சமூகநீதியே அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சம்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.8.2023


No comments:

Post a Comment