ஏழுமலையான் மீது நம்பிக்கை இல்லை சிறுத்தை பயத்தால் பக்தர்கள் வருகை குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

ஏழுமலையான் மீது நம்பிக்கை இல்லை சிறுத்தை பயத்தால் பக்தர்கள் வருகை குறைவு

திருப்பதி, ஆக. 19 திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் அலிபிரி, சிறீவாரிமெட்டு ஆகிய 2 மலைப் பாதைகள் வழியாக நடந்து செல்கின்றனர். ஆனால், அண்மைக் காலமாக, அலிபிரி பாதையில் சிறு வர்களை குறிவைத்து சிறுத்தைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த வாரம் நெல்லூரை சேர்ந்த லக் ஷிதா (6) என்ற சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றதால், பக்தர்களின் பீதி மேலும் அதிகரித் துள்ளது.

வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப் பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை. இதனால் தற்போதைக்கு நிலைமையை சமாளிக்க நடந்து செல்லும் பக்தர்களுக்கு தடிகளை தேவஸ்தானம் கொடுத்துவருகிறது. இதனை பலரும் விமர்சித்த போதிலும் இத்திட்டத்தை கைவிட மாட்டோம் என தேவஸ் தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி திட்டவட்டமாக அறிவித் துள்ளார்.

கடந்த 50 நாட்களில் திருப்பதி வனப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து இதுவரை 3 சிறுத்தைகளை வனத் துறையினர் பிடித்துள்ளனர். ஆனாலும் இன்னும் 20-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. மேலும், கரடிகளும் யானைகளும் சுற்றித் திரிகின்றன.

கைத்தடிகள் கொடுத்து அனுப் பினாலும், பக்தர்கள் பீதி காரணமாக அலிபிரி மற்றும் சிறீவாரி மெட்டு மலைப் பாதைகளில் தைரியமாக செல்ல முன்வரவில்லை. இதனால் இவ்விரு மலைப் பாதைகளிலும் நேற்று பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது. சாதாரணமாக நாளொன்றுக்கு 12,000 முதல் 20,000பேர் வரை செல்லும் மலைப் பாதைகளில் தற்போது 3,000 முதல் 4,000 பேர் வரை மட்டுமே செல்கின்றனர். 

No comments:

Post a Comment