தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழர் தலைவர் நன்றி!
சென்னை, ஆக.1 திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக, ''தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட தமிழர் தலைவர், இன்று (1.8.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்திற்குச் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
வருகின்ற விடுதலை நாளான 15.8.2023 அன்று வழங்கப்படவிருக்கின்ற ''தகைசால் தமிழர்'' விருதிற்குத் தெரிவு செய்யப்பட்டு, அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத் திற்குச் சென்று அவரை சந்தித்தார்.
தமிழர் தலைவரை வரவேற்று, தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று, பயனாடை அணி வித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
அப்பொழுது தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதலமைச்சரின் தனிச் செயலாளர் முருகானந்தம் அய்.ஏ.எஸ். ஆகியோர் இருந்தனர்.
பேனா நினைவுச் சின்னம்
பின்னர், முதலமைச்சரும், தமிழர் தலைவரும் அமர்ந்து உரையாடினர். அப்பொழுது முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களுக்குப் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நீதியரசர் எஸ்.கே.கவுல் அளித்த தீர்ப்பு சற்று நேரத்திற்கு முன்புதான் வெளி வந்திருந்தது.
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனும் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தமிழர் தலைவரிடம் தெரிவித்தார்.
தமிழர் தலைவர் அவர்கள், தமக்கு விருது வழங்கிட உள்ளதைவிட பெரிதும் மகிழ்வான செய்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குப் பேனா நினைவுச் சின்னம் அமைவதற்குத் தடையேதும் இல்லை எனும் செய்தியே என்பதை முதலமைச்சரிடம் தெரிவித்தார்.
முதலமைச்சரின் பணிச் சூழலை வெளிப்படுத்தி, தமிழர் தலைவர் மீண்டும் நன்றி கூறி, விடைபெற்றார்.
தமிழர் தலைவர் வருகையின்பொழுது, தரைத் தளத்திலிருந்து முதலமைச்சர் அலுவலகம் அமைந்துள்ள தளத்திற்கு 'லிப்ட்'மூலம் தமிழர் தலைவர் வந்தபொழுதும் முதலமைச்சர் காத்திருந்து வரவேற்றார். நன்றி தெரிவித்துவிட்டு திரும்பிச் செல்லும் பொழுதும் 'லிப்ட்' வரை வந்து முதல மைச்சர் தமிழர் தலைவரை வழியனுப்பி வைத்தார்.
தமிழர் தலைவருடன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு - க.பொன்முடி
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, ஆகியோர் பெரியார் திடலுக்கு வருகை தந்து, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியரை சந்திக்க பெரியார் திடலுக்கு வந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத் தீர்மானக் குழு செயலாளர் பொன்.முத்துராமலிங்கம், விருது அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்தினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment