அய்.அய்.டி.யா? அய்யர் - அய்யங்கார் நிறுவனமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

அய்.அய்.டி.யா? அய்யர் - அய்யங்கார் நிறுவனமா?

நாடு முழுவதும் அய்.அய்.டி.க்களில் மாணவர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு 2 மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு மாணவர் என மூன்று பேர் ஜாதி ரீதியிலான வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் மும்பை அய்.அய்.டி.யில் உள்ள உணவகத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பை அய்.அய்.டி உணவு விடுதியில் உள்ள சுவரில் "சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டும் இங்கு அனுமதி" என்று எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. 

இதற்கு அய்.அய்.டி.யில் செயல்படும் மாணவர் அமைப்பான அம்பேத்கர், பெரியார், புலே வாசகர் வட்டம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த சுவரொட்டியைக் கிழித்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விடுதி செயலாளரிடம்  இதுபற்றி கேட்டதற்கு, மாணவர்கள் சாப்பிடுவதற்கு உணவகத்தில் இருக்கைகள் யாருக்கும் தனியாக ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட யாரோ இது போன்ற சுவரொட்டியை ஒட்டி இருக்கின்றனர் என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து விடுதி செயலாளர் அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பி இருக்கும் மின்னஞ்சல் செய்தியில், "உணவு விடுதியில் ஜெயின் மாணவர்கள் சாப்பாடு வாங்க தனி கவுன்ட்டர் இருக்கிறது. ஆனால் அவர்கள் அமர்ந்து சாப்பிட தனி இருக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை" என்று அதில் கூறியுள்ளார். ஆனால், ஜெயின் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் அசைவ உணவு கொண்டு வருபவர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 

அதோடு மும்பை அய்.அய்.டி.யில் புதிதாக சேரும் மாணவர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்படக்கூடாது என்பதற்காக மாணவர்கள் மற்ற மாணவர்களிடம் மதிப்பெண்கள் குறித்து கேட்கக்கூடாது என்றும், ஜாதி ரீதியாக நகைச்சுவை, விமர்சனங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்றும், ஜாதி, மதங்களைக் கடந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அய்.அய்.டி.நிர்வாகம் அறிவுரை வழங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜாதிப் பிரச்சினையால் தர்சன் சோலங்கி என்ற மாணவர் மும்பை அய்.அய்.டி.யில் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

 ஹிந்துத்துவ மாணவர் அமைப்பினர் தொடர்ந்து இது போன்ற அராஜகங்களை செய்து கொண்டு இருக்கின்றனர். 

புதுடில்லி, அய்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கல்வி நிலையங்களில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை இழிவுபடுத்துவது, வன்முறையில் இறங்குவது, என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகமும் துணை போகிறது என்பதற்கு மும்பை அய்.அய்.டி. நிர்வாகம் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

அய்.அய்.டி. என்றால் அய்யர், அய்யங்கார் டெக் னாலஜி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் போலும்!

அய்.அய்.டி.களில் இன்னும் சமூகநீதிக் காற்று உள்ளே நுழையவில்லை. கடவுள் வாழ்த்து என்று சமஸ்கிருதத்தில் பாடும் நிலைதான். 'இந்தியா' (மிஸீபீவீணீ)  ஆட்சிக்கு வரும் பட்சத்தில்தான் இதற்கொரு முடிவு காணப்பட முடியும் - இளைஞர்களே, மாணவர்களே தயாராவீர்! 

No comments:

Post a Comment