62 ஆண்டு 'விடுதலை' ஆசிரியர் யாருக்கு இது வாய்க்கும்? பேரா. நம்.சீனிவாசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

62 ஆண்டு 'விடுதலை' ஆசிரியர் யாருக்கு இது வாய்க்கும்? பேரா. நம்.சீனிவாசன்

கழகத் தோழர்களால் மட்டுமின்றி பரவலாக எல்லோராலும் 'ஆசிரியர் ' என்று அழைக்கப்படுபவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆவார்கள்.

கி.வீரமணி ' விடுதலை ' நாளிதழின் ஆசிரியர். 

உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உண்டு; அத்தனை பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களும் உண்டு. இதில் 

கி.வீரமணிக்கு என்ன தனிச் சிறப்பு? என்ற கேள்வி எழுவது  இயல்பே.

உலகத் தலைவர் பெரியார் தம்மை விட 55 வயது இளையவரான வீரமணியை 'ஆசிரியர்' என்றே  அழைப்பார். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை?

தந்தை பெரியார் அவர்களே வீரமணியின் கரம் பற்றி அழைத்துச் சென்று ' விடுதலை ' அலுவலகத்தில் ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தார். யாருக்குக் கிடைக்கும் இந்தச் சிறப்பு.

தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார், 29 வயது இளைஞர் வீரமணியை 'வரவேற்கிறேன்' என்று அறிக்கை எழுதி வரவேற்றார். யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு.

பணி நிறைவில் பாராட்டு வழங்கு வதும் பாராட்டு பெறுவதும் உலகியல் நடைமுறை. பணியில் சேரும்போதே வரவேற்பு பெறுவது - அதுவும் மகத்தான - மாபெரும் தலைவரால் வாய்மொழியால் அல்ல - எழுத்துப்பூர்வமாக வரவேற்கப்படுவது அபூர்வமானது - யாருக்கு வாய்க்கும் இந்த நிகழ்வு!

ஆசிரியர் பொறுப்பேற்ற வீரமணி அவர்களை, 'மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறிய பெரியார் அறிக்கையில் பயன்படுத்திய வாசகம் , 'இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு' என்று குறிப்பிட்டார். யாருக்கு கிடைக்கும் இந்த வரவேற்பு.

உண்மையை மட்டும் உரைக்கும் பெரியார் ஒரு பொருட் பன்மொழியாக எழுதுகிறார். உண்மையைச் சொல் கிறேன், தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி 'விடுதலை'யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்' யாருக்குக் கிடைக்கும் இத்தனை பெரிய புகழாரம்!

"'விடுதலை' இதழை கி.வீரமணியின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன்" என்று பெரியார் எழுதிய அறிக்கையில், ' வீரமணியை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும்' என்று கல்வெட்டு போல கருத்தறிவித்தாரே! யாருக்குக் கிடைக்கும் இந்த உச்சபட்ச பாராட்டு!

கொள்கைப் பிழம்பாம் தந்தை பெரியார்  வீரமணியின் எழுத்தில் குறை கண்டதுமில்லை;  'இது என் கருத்தல்ல' என்று ஒரு முறை கூட திருத்தம் சொன்னதுமில்லை. யாருக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம்?

பத்திரிகை வரலாற்றில் நாளிதழின் ஆசிரியராக 62 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் உலக வரலாற்றில் வீரமணியைத் தவிர எவரும் இல்லை. யாருக்குக் கிடைக்கும் இந்த கின்னஸ் சாதனை!

ஊடகத் துறை வரலாற்றில், தமிழ் மொழியில் மின்னிதழை  (மீ-ஜீணீஜீமீக்ஷீ) முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் வீரமணி. யாருக்குக் கிடைக்கும் இந்த முன்னோடிப் பட்டம்?

'சால்வை வேண்டாம்; சந்தா கொடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தவர் வீரமணி. 

சந்தா சேர்க்க முடியாமல் ஏராளமான இதழ்கள் முடங்கிக் கிடக்கின்றன.

 தமிழர் தலைவர் அறிவித்தால் 50,000 சந்தாக்கள் குவிக்கின்றன.

'விடுதலையின் பாய்ச்சல் வேகமாக இருக்க வேண்டும்' என்று விருப்பம் தெரி வித்தால் 60 ஆயிரம் சந்தாக்களை கொண்டு வந்து குவிக்கின்றனர் தோழர்கள். 

வீரமணி இன்றி யாருக்கு இது வாய்க்கும்?

'விடுதலை 'யை நிறுத்தி விடுங்கள் என்று சாஸ்திரி பவன் உச்சரித்த போது, ' இப்படிச் சொல்லுவது மூச்சை நிறுத்தி விடுங்கள் என்று சொல்வதற்கு ஒப்பாகும்'என்று முழங்கியவர் வீரமணி.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும்,

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், 

சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கும் ,

ஜாதியை ஒழிப்பதற்கும்,

பெண்ணுரிமை காப்பதற்கும்

போராடிவரும் வீரமணிக்கு  'விடுதலை'யே முதல் ஆயுதம்; உற்ற நண்பன்.

விடுதலையின் ஆசிரியர் பொறுப்பேற்ற 62 ஆம் ஆண்டில் வாழ்த்தி மகிழ்வோம்.

No comments:

Post a Comment