கரூர், ஆக.4 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் வேண்டுதலின் பெயரால் அறியாமையில் மூழ்கியுள்ள அவலநிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அப்பகுதியில் ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைக்கும் இந்த மூடத்தனத்தால் பலரும் படுகாய மடைந்து வருகின்றனர்.
தலையில் தேங்காய் உடைப்ப தற்காக வேண்டிக்கொண்ட பக்தர்களின் தலையில் வெறுமனே தேங்காயை உடைப்பதன்மூலம், அப்பக்தர்களின் மண்டை ஓட்டுடன், நரம்புகளும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
தலையில் தேங்காய் உடைப்பின் போது 60 பேர் படுகாயமடைந்தனர். அவ்விடத்தில் அய்யோ, அம்மா! என்ற கதறலுடன், பெண்கள் அலறலும் அந்த பகுதியில் பெருங்கூச்சலானது.
தேங்காய் உடைத்ததால் படுகாய மடைந்தவர்களின் தலையில் மஞ்சள் பூசப்பட்டு அவர்களை சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமில் மண்டை உடைந்த வர்களுக்கு தையல் போடப்பட்டன.
இதில் பெண்கள் பலர் மயக்கமுற்று அங்கு படுக்க வைக்கப்பட்டனர் ஒரு சிலர் தெய்வ குத்தம் என்று கருதி எந்த முதல் உதவி சிகிச்சையும் எடுக்காமல் சென்று விட்டனர் அங்கு வந்த பொது மக்கள் இந்த நிகழ்வைக் கண்டு வேதனையுடன் திரும்பி சென்றனர்.
அறிவியலுக்கு புறம்பான இது போன்ற மூடத்தனங்களை தடை செய்ய அரசு முன் வர வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment