"வள்ளுவம் படிப்போமா?" (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

"வள்ளுவம் படிப்போமா?" (2)

 "வள்ளுவம் படிப்போமா?" (2)

மனிதத்தில் - உச்சத்திற்குச் சென்று நிறை குணம் படைத்த மாமனிதர்களாக பரிமளிப்பது எப்படி என்ற செயலாக்கச் சிந்தனையை, குறளாசிரியர் எவ்வளவு அற்புதமாக இரண்டடியில் ஈர்த்து இன்பம் தருகிறார் என்பதை திறந்த மனதோடு ஆராயுமிடத்து, அப்படிப்பட்ட ஒருவரை - பண்பு நலப் பகுத்தறிவுச் சிந்தனையோடு தரும் சமூகம் - அவரை உருவாக்கியிருக்கிறது! என்பது எவருக்கும் புரியும்!

பொதுவாக மனித சுபாவம், தவறு செய்தவர்களை, நமக்குத் துரோகம் இழைத்தவர்களை, நம்மிடம் மிக, மிக, மிக மோசமாக நடந்து ஆறாத புண்ணை நம் நெஞ்சத்தில் ஏற்படுத்தியவர்களை, தண்டித்து மகிழ்தலே யாகும்!

ஆனால், அக்கிரம நடப்புகளைப் பொறுத்துக் கொள்ளுதல் சிலருக்குப் பழக்கம்! ஆனால் எத்தனை பேருக்கு மறக்கத் தெரியும்?

எத்தனை பேருக்கு மன்னிக்கத் தெரியும்?

சராசரி மனிதருக்கும், மாமனிதருக்கும் உள்ள இடைக்கோடுகளே இதில்தான் அடங்கியுள்ளன.

அதில்கூட சிலர் மன்னிப்பார்கள் - ஆனால் மறக்க மாட்டார்கள், சிலர் மறப்பார்கள் ஆனால் மனதளவில்கூட மன்னிக்கவே மாட்டார்கள்!

ஆனால் வள்ளுவம் வரையறுக்கும் மனதளவில் உயர்ந்த பெருங் குணங்கொண்டே இணையற்ற மாமனிதர்களோ மன்னிப்பதோடு மறப்பதோடு, 'ஏதும் இவர்களைப் பார்க்கையிலும் - எதுவும் நடக்காதது போல பழைய நிலைக்கு திரும்பி - பசுமையோடும் அதே பாசத்தோடும் பரிவுடனும் அவர்களை நடத்திடுவார்களே!

இதைக் கண்டு திருந்திய அத்தோழர்கள் வெட்கப்படுகிறார்கள் - மனதிற்குள்!

அந்த "நாண உணர்வுதான் அவர்கள் பெற்ற தனித்தண்டனை என்பது அவ்விருவர் மட்டுமே அறிந்தது!

அது பொது வெளி அறியாதது - புதுவழி நெறியானதால்!

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு."   (குறள் 987)

துன்பம் செய்தவருக்கும் இன்பம் செய்யாவிடின் நிறை குணத்துக்கு என்ன பொருள்?

இதில் 'சால்பு' என்ற சொல் ஒரு தனிச் சிறப்புடைய சொலவடையாகும்.

நிறைகுணம் தான் நிறைகுடம்

நிறைகுடம் தளும்புவதில்லை. நிறைகுண மனிதர்கள் தவறுவதில்லை? 

அது மட்டுமா? அந்த நிறை குணநெறியோர் எப்படிப்பட்டவர்கள் என்பதை வள்ளுவப் பெருந்தகை எப்படி வருணிக்கிறார் - பாருங்கள் - படித்த குறளை பல முறை அசைபோட்டு, அசைபோட்டு  நம்முள் விசையேறி வாங்கும்வரை சிந்தியுங்கள்.

அதனை எப்படி ஒரு ஒப்பீடு மூலம் விளக்குகிறார்.

படியுங்கள் - பிறகு கற்க முடியுமே!

"ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்."   (குறள் 989)

நிறைகுணம் என்னும் கடலுக்குக் கரையானவர் காலம் பிறழ்ந்தாலும்தாம் ஒழுக்கம் பிறழார்.

'நிறைகுடம்' - என்ற வழமை தான். 

ஆனால், நிறைகடல் அளவு சான்றோர் என்று பண்புள்ளவரைப் பாராட்டி உயர்த்தி எளிதில் எட்டாத உயரத்தில் ஏற்றி வைத்து மகிழ்கிறார் வள்ளுவர் -  நாம் ஏற்றமிகு மனிதர்களாவது எப்போது? முடிவு செய்வோமா?

(மீண்டும் பகிர்வோம் வள்ளுவம்)


No comments:

Post a Comment