அதிமுக மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு: வரும் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

அதிமுக மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு: வரும் 29ஆம் தேதி ஆஜராக உத்தரவு

புதுக்கோட்டை, ஆக. 8 -  வருமானத்திற்கு அதிகமாக 35 கோடி சொத்து குவித்த வழக்கில் அதிமுக மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியை வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்தவர் மேனாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதிமுக அமைச்சரவையில் 8 ஆண்டாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக புகாரின்படி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி, 2016 முதல் 2021 வரை வருமானத்தை மீறி 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்களை இவரது பெயரிலும், மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்ததாக 2021 அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் சோதனை நடத்தினர். 

இதில் ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்ட்டிஸ்க்குகள் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து விஜயபாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம் குறிப்பாக ரூ.35 கோடியே 79 லட்சம் சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே 22ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் புதுக்கோட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதில் பத்தாயிரம் பக்க சொத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். இதையடுத்து இந்த வழக்கு புதுக் கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டு அந்த நீதிமன்றம் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து வரும் 29ஆம் தேதி விஜயபாஸ்கரையும், அவரது மனைவி ரம்யாவையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment