கைவல்யம் பிறந்த நாள் இன்று ( 22.8.1877 ) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

கைவல்யம் பிறந்த நாள் இன்று ( 22.8.1877 )

தோழர் கைவல்ய சுவாமியார் அவர்களது  முன்னோர்கள் பட்டாளத்தில் இருந்தவர்கள். தந்தை யாரும், சகோதரர்களும் சுகஜீவிகளாயும், வேதாந்த விசாரணைப் பாண்டித்தியம் முதலியவைகளில் மிக்க பரிச்சயமுடையவர்களாகவும் இருந்தவர்கள். தோழர் கைவல்ய சுவாமியார் ஈஸ்வர ஆண்டு, ஆவணி மாதம், எட்டாம் தேதி மலையாளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். அவர் தமது அய்ந்தாம் ஆண்டு வரை கள்ளிக்கோட்டையிலிருந்தும் பிறகு அய்ந்து முதல் பதினோராம் ஆண்டு வரை பாலக் காட்டிலும், பதினொன்று முதல் பதினான்கு வரை மதுரையிலும், பதினான்கு முதல் பதினெட்டு வரை திருச்சியிலுமிருந்தவர். திருச்சியில் இரண்டாவது பாரம் வரையில் படித்துவிட்டுப் பள்ளிக் கூடம் விட்டு விரக்தியின் மீது கோயமுத்தூர் ஜில்லாவுக்கு வந்துவிட்டார். இந்த நிலை வரையில் அவருடைய பெயர் பொன்னுசாமி என்றும், செல்லப் பெயர் பொன்னு என்பதாகவும் அழைக்கப்பட்டது. இதன்பிறகு இந்தியா முழுவதும் சாமியாராய் யாத்திரை செய்தார்.

இப்படியிருக்கையில் இவருக்கு கைவல்ய சுவாமியார் என்று பெயர் வந்த விதம் எப்படி என்றால், இவரது சுற்றுப்பிரயாண யாத்திரையில் கரூருக்குச் சென்றிருந்த சமயம் அங்குள்ள மவுன சாமி மடத்திற்குப் போயிருந்தார். அந்த மடத்திலுள்ள சாமியாரிடம் பலர் வேதாந்த விசாரணைக்கு வந்து, பல விஷயங்கள் தெரிந்து போவதில் கைவல்ய நூலைப் பற்றியும் பலர் பேசுவதுண்டு. அப்பொழுது தோழர் கைவல்ய சாமியார் அதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டு சற்று அதிகமான தர்க்கம் புரிவார். அந்தக் காரணத்தால் இவரை இவர் இல்லாத சமயத்தில் அங்கு வந்தவர்களில் ஒருவர், "கைவல்ய சாமியார் எங்கே?" என்று கேட்டார். அந்தச் சமயம் இவரும் அங்கு வர, அங்கிருந்த பலர், "இதோ கைவல்ய சாமியார் வந்துவிட்டார்" என்றார்கள். அது முதல் அவருக்கு அந்தப் பெயர் வழங்கி வந்ததாகும். எந்தக் காரணத்தாலேயோ அவருக்குத் தர்க்க உணர்ச்சி ஏற்பட்டது. முதல் பார்ப்பன மதக் கொள்கைகளை வெறுப்பதும், அது சம்பந்தமான ஆதாரங்களைப் பற்றித் தர்க்கித்து வருவதும் அவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு ஊக்கமுள்ள பழக்கமாகிவிட்டது. அந்தக் காலத்தில்  சங்கராச்சாரியார் கோயமுத்தூர் ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செல்லுமிடங்களிலெல்லாம் சென்று அவருக்கு எதிரிடையாகப் பிரச்சாரம் செய்வதும், அவர் மதக்கொள்கையைக் கண்டிப்பதும் முக்கியமாய் பராசர ஸ்மிருதிக்கும் விரோதமாகப் பேசுவதுமான வேலைதான். அவர் முதன்முதல் வெளியிறங்கிப் பிரச்சாரம் செய்த வேலையாகும்.

- தந்தை பெரியார்


No comments:

Post a Comment