நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இருக்க முடியாதா என்பதற்கானது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இருக்க முடியாதா என்பதற்கானது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை,ஆக.7- முத்தமிழறிஞர் கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2023) முன்னிட்டு தி.மு.க. தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒலி வடிவ செய்தி வருமாறு,

"நூற்றாண்டு விழா நாயகரே உங்களைக் காண அணிவகுத்து வருகிறோம். உங்களுக்குச் சொல்ல ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வருகிறேன். உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பதுதான் அந்த நல்ல செய்தி. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைத்தான் நான் அமர்ந்து செய்து கொண் டிருக்கிறேன். 95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள். இனம், மொழி, நாடு காக்க ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள். உங்கள் உழைப்பின் உருவக வடிவம்தான் இந்த நவீன தமிழ்நாடு.

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றீர்கள். அந்த கரகர குரல்தான் கண்டிப் புக் குரலாக என்னை உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. எனக்குப் பின்னால், பேராசிரியர் அன்பழகனுக்குப் பின்னால் யார் என்று கேட்டால் இங்கு அமர்ந் திருக்கும் ஸ்டாலின் என்று எந்த நம்பிக்கை வைத்து சொன்னீர் களோ அந்த நம்பிக்கையைக் காக்கவே உழைத்துக் கொண் டிருக்கிறேன்.

8 கோடி தமிழ் மக்களும் ஏதாவது ஒரு வகையில் பயன டையும் வகையில் திட்டத்தைத் தீட்டி, தி.மு.க. ஆட்சியை தித்திக் கும் மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம். ஒற்றைக் கையெழுத்துப் போட்டால் அது கோடிக்கணக்கானவர்களை மகிழ்விக்கிறது. ஒரே ஒரு உத்தரவு லட்சக்கணக்கானவர்களை ரட்சிக்கிறது. தமிழ்நாடு தலை நிமிர்கிறது. இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக உயர்கிறது. உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது.

நீங்கள் இருந்து செய்ய வேண் டியதைத்தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாய் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது. இந்த கட்சி ஆட்சியா, அந்த கட்சி ஆட்சியா என்பதற்கானவிடை அல்ல இந்தத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா இருக்க முடியாதா என்பதற்கானத் தேர்தல் இது.

தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்கள். அப்படித்தான் இந்தியாவுக்கான குரலை, எழுப்ப தொடங்கி இருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. இந்தியாவுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு. இது இந்தியா முழுவதும் பரவிவிட்டது. சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட் டாட்சி இந்தியா என்ற உங்களின் விரிந்த கனவுகளை இந்தியா முழுவதுக்கும் அகலமாக விரித் துள்ளோம்.

திமுக மாநில கட்சிதான். அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையை பெற்றுத்தரும் கட்சியாக இருக்க வேண்டும் என்ற உங்களின் அந்த கனவும் நிறைவேறப் போகும் காலம் வரும் காலம். உங்கள் நூற்றாண்டு உங்கள் கனவுகளை நிறைவேற் றித்தரும் ஆண்டு. நீங்கள் உரு வாக் கிய  நவீன தமிழ்நாட்டை நீங்களே ஆள்கிறீர்கள், நீங்களே வாழ்கிறீர்கள், நீங்களே வழி நடத் துகிறீர்கள். உங்கள் வழி நடக்கும் எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங் கள். வென்று வந்து காலடியில் அதை வைக்கின்றோம்." 

இவ்வாறு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment