நூல்: ரசிகமணியின் நாத ஒலி
ஆசிரியர்: தீப.நடராஜன்
வெளியீடு: பொதிகைமலைப் பதிப்பு, சென்னை - 5
பெண்களை குறிப்பிடும் போது பெரும்பாலும் “பெண்டிர்” அல்லது “பெண்டுகள்” என்றே டி.கே.சி. எழுதி யும் சொல்லியும் வந்தார். அதில் ஒரு வித அருமைப்பாடு நமக்குத் தெரி கிறது.
இளம் வயதிலேயே டி.கே.சி. அவர்களுக்கு பெண்களை மதிக்க வேண்டும், அவர்களை சமமாக எல்லோரும் நடத்த வேண்டும், பெண்க ளுக்கு அவமரியாதை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுவும் சிறந்த லட்சியங்களாக மனதில் பதிந்து விட்டன.
பெண்கள் சம்பந்தமாக டி.கே.சி. யின் போர்க்குணம் அவரது வாழ்வில் இளம் வயதில் எவ்வாறு வெளிப் பட்டது என்பதற்கு நான் கேள்விப்பட்ட இரு வெவ்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துக்காட்ட எண்ணுகிறேன்.
இவ்விரு நிகழ்வுகளும் என் பாட்டி பிச்சம்மாள். அண்ணி சொல்லி நான் கேள்விப்பட்டவை.
டி.கே.சி. அவர்களின் திருமணம் நடைபெற்ற பிறகு உறவினர்கள் ஒருவர் மாறி ஒருவராக திருமணத் தம்பதியை விருந்துக்கு அழைத்தனர். அந்த விருந்துக்கு இதர உறவினர் களையும், நண்பர்களையும் அழைப் பார்கள்.
அப்படியானதொரு பழக்கம் அந்தக் காலத்தில் இருந்து வந்துள்ளது.
ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற சமயம் நடந்த சுவையான, வித்தியாசமான நிகழ்ச்சி பற்றிப் பார்க்கலாம் இப்போது.
பந்தி ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் வந்திருந்த ஒவ்வொருவரையும் நீ இந்த இலை முன் உட்கார், நீ அந்த இலை முன் உட்கார் என்று கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த டி.கே.சி. அவர்களுக்கு அந்தப் பெரிய வர் எதற்காக அப்படி சொல்லிக் கொண்டு வருகிறார் என்ற உள் நோக்கம் புலப்பட்டு விட்டது.
அந்தக் காலத்தில் பந்திப்பாய் விரித்து தரையில் அமர்ந்து வாழை இலையில்தான் அனைவரும் சாப்பிடு வார்கள். பெரியவரின் உள்நோக்கம் என்னவென்றால் ஆண்கள் சாப்பிட்டு விட்டு எழுந்ததும் ஒவ்வொரு இலை யிலும் அவரவர் மனைவியை அமரச் செய்து அதே இலையில் சாப்பிடச் சொல்ல வேண்டும் என்பதுதான்.
சாப்பாட்டுப் பந்தி முடிந்ததும் எல்லோரும் கை கழுவ எழுந்து சென்றனர். டி.கே.சி. மட்டும் உடனே எழுந்திருக்க வில்லை. எல்லோரும் எழுந்து சென்ற பின்னர் அவர் எழுந்து எச்சில் இலைகளை தம் கையால் இழுத்து இங்கும் அங்குமாக இடம் மாற்றி வைத்து விட்டு கை கழுவச் சென்றார்!
பெண்கள் வந்து அவரவர் கணவர் இலையில் சாப்பிட முடியாது என்பதை உணர்ந்த அந்தப் பெரியவர் ‘தம் திட்டத்தை நிறைவேற விடாமல் இந்தப் பிள்ளையாண்டான் இப்படிச் செய்து விட்டானே’ என்று சோகத்தில் மூழ்கிப் போனார்!
புதுமணத் தம்பதியை வெளியூரில் உள்ள உறவுக்காரர்களும் அழைத்து விருந்து கொடுப்பார்கள். அந்த வகையில் விளாத்திகுளத்தில் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த பிச்சம்மாள் அண்ணியின் பெரியப்பாவும் டி.கே.சி. தம்பதியை அழைத்தார்.
விளாத்திகுளம் மாமா வீட்டில் டி.கே.சி.யும் அண்ணியும் சில தினங் கள் தங்கி உறவாடியபின் தென் காசிக்குப் புறப்பட்டனர்.
ரயில் நிலையத்திற்குப் போவதற் காக மாட்டுவண்டி தயாராக வாசலில் நின்றுகொண்டிருந்தது.
வாசல் வரை வந்த பெரியப்பா முதலில் பிச்சம்மாளை வண்டியில் ஏறு என்று சொன்னார். பிறகு தம் தோளின் மேல் கிடந்த துண்டை எடுத்து வண்டி யின் இருபுறமும் வளைந்திருந்த பிரம்பில் சொருகிவிட்டு டி.கே.சி.யை வண்டியில் ஏறச்சொன்னார்.
கணவனும் மனைவியாய் இருந்த போதிலும் ஒரு ஆண் பக்கத்தில் ஒரு பெண் பலர் அறிய அமர்வது சரியல்ல என்னும் எண்ணத்தோடு அப்படிச் செய்தாரோ அல்லது திருஷ்டி பட்டு விடும் என்று நினைத்துச் செய்தாரோ நமக்குத் தெரியாது.
டி.கே.சி. வண்டியில் ஏறி அமர்ந்த பின் வண்டியோட்டியைப் பார்த்து “விடப்பா வண்டியை” என்று அவர் சொன்னதும் வண்டி நகரத் தொடங் கியது. தமக்கும் பிச்சம்மாளுக்கும் இடையில் திரைபோலத் தொங்கிய துண்டை எடுத்து மாமா தோள் மேல் தூக்கிப் போட்டு விட்டார் டி.கே.சி.!
- பக்கம் 31-33
No comments:
Post a Comment