தமிழர் தலைவருக்கு புதிய ஊர்தி "வேன்" அளிக்கும் விழா திருச்சியில்!!
தஞ்சை - 13 மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள்
தஞ்சை,ஆக.24- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தஞ்சையிலும், தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், தமிழர் தலைவருக்கு பிரச்சார வேன் வழங்கும் விழாவையும், திருச்சியில் கொண்டாடுவது என்றும், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (23.8.2023) முற்பகல் 11 மணிக்கு நடைபெற்ற 13 கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது. பல மாவட்டங் களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
கழகத் தலைவர் தலைமை உரை
இக் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில் தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதாவது:
13 மாவட்டக் கலந்துரையாடல் கூட் டத்தை அறிவித்து 13 நாட்கள் கூட ஆக வில்லை. ஒரு பணியை எப்போது சொன் னாலும், உடன் செய்து முடிப்பதில் தஞ்சைக்கு நிகர் எவருமிலர்! குறுகிய காலத்தில் ஒன்றைச் சொன்னாலும் சமாதானம் என்பதே கிடை யாது, செயல்தான்! "செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப சிறப்பான உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
சங்கடமும், சலிப்பும் ஏது?
சங்கடம் இல்லாமல் நானும் வேலை சொல்கிறேன்; சலிப்பில்லாமல் நீங்களும் செய்கிறீர்கள்! நம் இயக்கம் ஒரு புரட்சி இயக்கம் அல்லவா! "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்" என்பதற்கேற்ப நமது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நமக்குள் இது போன்ற கலந்துறவாடல் கூட்டங்களும் அதிகம் தேவைப்படுகிறது.
எண்ணிக்கையில் நாம் சிறியதாக இருக்கலாம். ஆனால் நாம் செய்து முடித்த பணிகள் யாராலும் செய்ய முடியாதது! நாம் அடிக்கடி சொல்வது தான், இந்திய மக்கள் தொகை 140 கோடி எனில், இராணுவ வீரர்கள் அதிகபட்சம் 10 கோடி இருப்பார்களா? ஆக 140 இல் 10 கோடி என்பதை சிறுபான்மை என்று சொல்லிவிட முடியுமா? இங்கே எண்கள் முக்கியமல்ல; எண்ணங்கள் முக் கியம்! செயல்கள் தான் முக்கியம்! இராணுவ வீரர்களுக்கு விருதுகள் கொடுப்பார்கள். வீரர்களை அதிகம் உருவாக்கவும், நாட்டைப் பாதுகாக்கவும் அது உற்சாகம் தரும். எனக்குக் கொடுக்கப்பட்ட "தகைசால் தமிழர் விருது" தந்தை பெரியாருக்கும், இங்கே இருக்கும் தோழர்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது தான்! தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் பணியைச் செய்திடுவோம்!
போர்க்களத்தில் ஓய்வு கிடைக்காது!
இறக்குமுன், "உங்களைச் சூத்திரனாக விட்டுப் போகிறேனே", எனக் கவலைப் பட்டார் பெரியார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் போராட்டத்தில் அரை நூற் றாண்டாகப் போராடி வருகிறோம். அர்ச்ச கர்களாக நம்மாட்கள் கோயிலுக்குள் போக வேண்டும்; கண்குளிர அதை நாம் பார்க்க வேண்டும்! ஒவ்வொரு சட்டப் போராட் டத்திலும் நாம் முன்னேறி வந்தாலும் கூட, ருசி கண்ட பூனைகளாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். மேல்முறையீடு செய்து, ஏதாவது இடையூறு செய்துவிடுகிறார்கள். போர்க்களத்தில் ஓய்வு கிடையாதே? பிறகெப் படி அமைதியாக நாம் அமர முடியும்?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நோக்கில் 1969 ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். "போராட்டத்தைத் தள்ளி வையுங்கள். அதற்கென தனிச் சட்டம் இயற்றுகிறேன்", என்று கூறிய கலைஞர் அவர்கள், 1972 இல் சட்டமும் இயற்றினார். அன்றிலிருந்து 50 ஆண்டு காலமாக எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும், நீங்கள் கேட்டுக் கொண்டுமாக இருக்கிறீர்கள்! இந்தத் தொடர் போராட்டத்தில் பலமுறை நாம் வெற்றி பெற்றே வருகிறோம். எனினும் அந்த வெற்றி வெளியில் தெரியவில்லை. எனினும் தோல்வி அடைந்தாலும் பார்ப்பனர்கள் வென்றதைப் போல காட்சி தருவார்கள். அதுதான் அவர்களின் சூட்சமம். பெரியார் எனும் கண்ணாடி அணிந்தால் இந்த நுட்பத்தை அறியமுடியும்!
சமூக நீதிக்கான சரித்திர நாயகர்!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கை கலைஞர் அரசு திறம்பட நடத்தியது. இதன் நியாயத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. "அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் ஆகலாம், ஆனால் அதற்கு ஆகமங் களைப் படித்து தகுதி பெற வேண்டும்", என நீதிமன்றம் கூறியது. அப்போது தான் நான் 'விடுதலை' தலையங்கத்தில், "ஆபரேசன் வெற்றி; நோயாளி இறந்துவிட்டார்", என்று எழுதினேன். பிறகு மீண்டும் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தன.
இந்நிலையில் ஆகமப் பள்ளிகள் திறக்கப்பட்டு 69 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில், 205 மாணவர்கள் தயாராகி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாகக் காத் திருந்த அவர்களில் சிலருக்கு, 2021 ஆகஸ்ட் 14 ஆம் நாள் பணி நியமனம் வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்! இந்த வரலாற்றைக் கொண்டாடும் வகையில் தான், "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" எனப் பெருமையோடு அழைத்தோம்!
அதே விரல்கள்! அதே விடுதலை!!
1972 ஆம் ஆண்டு எந்த விரல்கள், விடுதலையில் "ஆபரேசன் வெற்றி; நோயாளி இறந்தார்," என்று எழுதியதோ, அதே விரல்கள், அதே விடுதலையில் 2023 இல் "ஆபரேசன் வெற்றி; நோயாளியும் பிழைத்துக் கொண்டார்", என்று எழுதக் கூடிய மாபெரும் வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது!
இந்த நீண்ட வரலாற்றுப் போராட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டா டும் விதமாக தஞ்சாவூரில் அக்டோபர் 6 ஆம் தேதி மிகப் பெரும் வெற்றி விழா நடைபெற இருக்கிறது! அன்றைய தினம் நாம் முழங்கும் போர்ச் சங்கு டில்லி வரை கேட்க வேண்டும்! நமது பணி தொடர் பணி! நமக்கு வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்!
ஈரோடு பொதுக் குழுவிற்குப் பிறகு தோழர்களின் பிரச்சாரங்கள் பெரும் வேகம் பெற்றுள்ளன! எப்போதும் ஈரோடு நமக்கு சரியான வழியைத் தான் காட்டும்! திராவிடம் வெல்லும்! நாளைய வரலாறு அதைச் சொல்லும் என்று கூறி, தோழர்களே! உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்", எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசினார்!
13 மாவட்டங்களின் சங்கமம்!
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர், அறந் தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, இலால் குடி, துறையூர், கரூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் 23.08.2023, காலை 11 மணியளவில் தொடங்கியது.
நிகழ்வுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை ஏற்க, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்பு ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்!
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர்கள் மன்னார்குடி ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், திருச்சி ஞா.ஆரோக்கியராஜ், புதுக் கோட்டை மு.அறிவொளி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், தலைமைக் கழக அமைப் பாளர்கள் ப.ஆல்பர்ட், திருத்துறைப் பூண்டி கிருட்டினமூர்த்தி, குடந்தை குருசாமி, தொழிலாளராணி மாநிலச் செயலாளர் மு.சேகர், கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர் அதிரடி க.அன் பழகன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ் ஆகியோர் பேசினர். அதனைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்!
பங்கேற்றோர்!
இந்நிகழ்வில் காப்பாளர்கள் கி.முரு கையன், பெ.இராவணன், ஆ.சுப்பையா, வே.இராஜூ, மாவட்டத் தலைவர்கள் பெ.வீரையன், கு.நிம்மதி, வீ.மோகன், ஆ.ச.குணசேகரன், வி.எஸ்.டி.ஏ. நெப் போலியன், க.மாரிமுத்து, ச.மணிவண் ணன், ப.குமாரசாமி, மாவட்டச் செய லாளர்கள் அ.அருணகிரி, கோ.கணேசன், வை.சிதம்பரம், சு.துரைராசு, கி.தளபதி ராஜ், ஜெ.புபேஸ்குப்தா, இரா.மோகன் தாஸ், க.முத்து, ப.வீரப்பன், ஆ.அங்க முத்து, வீர.கோவிந்தராசு, ம.காளிமுத்து, திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் பொறியாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநிலத் தொழி லாளரணி செயலாளர் மு.சேகர், மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த் தன், தகவல் தொழில் நுட்ப மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், மாநில ஊடகத்துறைச் செயலாளர் மா.அழகிரிசாமி, பெரியார் வீர விளை யாட்டுக் கழக மாநிலச் செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், நாத்திக பொன்முடி மற்றும் மாநில, மாவட்ட, நகரக் கழகப் பொறுப்பாளர்கள், மகளிரணி தோழர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்!
தீர்மானங்கள்:
1) திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் துப்பாக்கி தொழிற்சாலை, துப்பாக்கி நகர்,திருச்சி மாவட்டக் காப் பாளர் மானமிகு சோ.கிரேசி அவர்களது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
2) அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 17 திராவிடர்களின் தேசிய திருவிழாவாகக் கொண்டாடும் வகையில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, இனிப்புகள் வழங்குவது, கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூர்கள் மற்றும் அனைத்து ஊர்களிலும் கழகத் தோழர் களின் இல்லங்களிலும் கழக இலட்சியக் கொடியை ஏற்றுவது, பெரியார் பட ஊர்வலங்களை நடத்துவது, ஒலிபெருக்கி வைத்து இயக்கப்பாடல்களை இசைக்கச் செய்வது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவது, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங் களை நாடுமுழுவதும் நடத்துவது எனத் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை எழுச்சியுடன் கொண்டாடுவதென முடிவு செய்யப்படுகிறது!
3) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா மற்றும் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவினை செப்டம்பரில் திருச்சியில் மிக எழுச்சியோடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது. கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாகப் பங்கேற்று சிறப்பிப்பதென முடிவு செய்யப்படுகிறது!
4) திராவிடர் கழகமாம், தாய் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 அன்று தஞ்சாவூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை மிக எழுச்சி யோடு நடத்துவதென முடிவு செய்யப் படுகிறது. திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று இசைவு தந்து அக்டோபர் 6 ஆம் தேதி தஞ்சைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவையும், முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு விழாவையும் வெகு சிறப்பாக நடத்துவது எனவும், கழகத் தோழர்கள் மாநில மாநாடு போல குடும்பம், குடும்பமாகப் பங்கேற்றுச் சிறப் பிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது!
5) தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது" பெற்றுள்ள வணக்கத் திற்குரிய தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் உளங்கனிந்த வாழ்த்தை, பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது!
6) அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் தத்துவங்களை அகிலம் அறிய செய்திட அயராது உழைத்து வரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிய சிறப்பித்த சமூகநீதியின் சரித்திர நாயகர், தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை, பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது!
தீர்மானங்களை நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா முன்மொழிந்தார்.
தொகுப்பு: வி.சி.வில்வம்
No comments:
Post a Comment