விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தின் எதிரில் ஒரு பொட்டல் நிலம். அதற்கு காஞ்சிப் பெரியவர் திடல் என்று பெயராம். அதற்கு முன்பு அப்படி ஒரு பெயரில்லை. திடீரென்று ஒரு பொட்டல் நிலத்துக்குக் காஞ்சி பெரியவா நாமகரணத்தைச் சூட்டி, உங்கள் அடிமை யாகத் தான் இருக்கிறோம் என்று விளம் பரப்படுத்தியிருக்கிறார்கள் பாஜகவினர்.
அதில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி. 39 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் நடத்திவைத்திருக்கிறது அறக் கட்டளை ஒன்று. அதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டாராம்!
அதென்ன 39? தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக் கையோ! 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவா? 39-இல் ஒன்றாவது கிடைக்காதா என்ற நப்பாசையிலா தெரியவில்லை. ஏனென்றால், கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில், நேரடியாக அவர்கள் இல்லாவிட்டாலும், அவர்களின் கூட்டணிக் கட்சி வெற்றிபெற்றது என்று சொல்லப்பட்ட ஒரு தொகுதியிலும், வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது நீதிமன்றத்தால்! ஆக மொத்தம் தமிழ்நாட்டில் அவர்கள் கணக்கு ‘பூச்சியம்’ தான்! இதையெல்லாம் மனதில் கொண்டு தான் 39 ஜோடியோ என்னவோ!
அதில் பல ஜோடிகள் ஏற்கெனவே திருமணம் ஆன ஜோடிகளாம்! அதில் ஒரு ஜோடியின் குழந்தைக்கு அடுத்த நாளே முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா என்று பேனருடன் அமர்க்களப்படுத்தி யிருக்கிறார்களாம். பத்திரிகைகள் படம் எடுத்துப் போட்டு ‘இதென்ன கூத்து’ என்று கிண்டலடித்திருக்கின்றன. சொல்ல முடியாது... முற்போக்கு எண்ணத்துடன் நடைபெற்ற திருமணமோ என்னவோ..? பாஜகவில் என்ன முற்போக்கு என்கிறீர் களா? அந்தளவுக்கெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆள் கிடைக்காமல் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு விளம்பரம் தரும் வகையில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அதிமுக-வில் முக்கியப் பொறுப்பிலிருந்த வராம். அவரை, அதிமுகவிலிருந்து நீக்கி யிருக்கிறார்கள் நேற்று. குதிரை தொலைந்த பின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? கட்சியைச் சுக்கல் நூறாக உடைத்தெறிந்த காலையே இன்னும் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க நினைக்கிறார்கள், அச்ச உணர்வு காரணமாக இருக்கலாம்!
இந்தச் செய்தி அதைப் பற்றியதல்ல... அதே நிகழ்ச்சியில் திருமணம் நடத்தி வைத்த பார்ப்பனர்களின் கால்களில் சாஷ் டாங்கமாக விழுந்து நமஸ்கரித்திருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அந்தப் படமும், காட்சிகளும் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. முன் வரிசையில் இருந்து அண்ணாமலையின் பாத நமஸ் காரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் யார் தெரியுமோ? ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னே பூணூல் கல்யாணம் செய்து கொண்ட நண்டு சிண்டுகள். பார்ப்பான் காலில் விழுவதென்று ஆன பின் அதில், பெரிய பார்ப்பனர் என்ன? சின்ன பார்ப் பனர் என்ன? நான் பார்ப்பன அடிமை தான் என்று காட்ட இதை விட வேறு வாய்ப்பு கிடைக்குமா?
காலில் விழுவது சுயமரியாதைக்குக் கேடு! காலில் விழுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் சுயமரியாதைக்குக் கேடு!
அதிலும் வயது குறைந்தவர் காலில் வயது கூடியவர் விழுந்தால், பதறிப் போய் தடுப்பதைத் தான் வழக்கத்தில் கண்டிருப் போம். மனிதர்கள் அப்படித்தான் நடந்து கொள்வர்.
ஆனால், பூதேவா அன்றோ! ‘நன்னா விழுடா அம்பி’ என்று திருப்பாதங்களைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள் பார்ப்பனச் சிண்டுகளும், அவர்களை முன்னால் நிறுத்தி பின்னாலிருந்து கொண்டு, சூத்திர ‘அண்ணாமலை’ காலில் விழுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் வய தான பார்ப்பனப் புரோகிதர்களும்.
வயதான பார்ப்பனர் முதல் நண்டு சிண்டுகள் வரைக்கும் அனைவரின் காலிலும் விழுவதைக் கிண்டல் செய்து இனமுரசு சத்யராஜ் - கவுண்டமணி நடித்த புதுமனிதன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், அப்படித்தான் “பார்ப்பனர் காலில் விழுவதென்று முடிவெடுத்த பின்... வய தெல்லாம் எதற்குப் பார்த்துக் கொண்டு” என்று படுத்தேவிட்டார் போலும் அண்ணாமலையார்.
‘ஏண்டா செம்பா..’ என்று வயது முதிர்ந்த சூத்திரர்களைக் கூட, பார்ப்பனச் சிறுவர்களும் ‘டா’ போட்டு அழைத்துக் கொண்டிருந்த காலத்தை மாற்றியது சுய மரியாதை இயக்கம். அந்தச் சுயமரியாதை தான் தமிழினத்தை நிமிர்த்தி முதுகை அடையாளம் காட்டியது. இப்போது, முது கெலும்பு இல்லாதவர்களைக் கொண்டு மீண்டும் பழைய காலத்தைப் புதுப்பித்துக் கொண்டுவர முயற்சிக்கிறது பார்ப்பனியம். சனாதனம் என்றதும் கரப்பான் பூச்சிகளுக் கெல்லாம் கொடுக்கு முளைக்கிறதே!
பூணூல் போட்டுவிட்டால், அவன் எவ்வளவு பொடியனானாலும் அய்.பி.எஸ். சூத்திரனுக்கும் மேல் தான் என்பதை அழுத்தந் திருத்தமாகப் பதிய வைத்திருக் கிறார்கள் காஞ்சிப் பெரியவா திடலில்! பெரியார் திடல் சுயமரியாதையைக் கொடுக்கும், அது பெரியவா திடலன்றோ, அதனால் தான் சுயமரியாதையைக் கெடுத் திருக்கிறது. சமூக ஊடகங்களில் பாஜக அடிப்பொடிகளே, ‘அண்ணா, இப்படி நீங்கள் விழலாமா?’ என்று கேட்டிருக்கிறார் களாம்.
திராவிட இயக்கம் சொல்லிக் கொடுத்த சுயமரியாதை இல்லையென்றால் தமிழர் கள் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவும் அஞ்சுகிறோம்.
பார்ப்பனப் பாதந் தாங்கினால் பதவி யும் பவிசும் கிடைக்கும் என்பதற்காக இனியும் விழுந்துதான் கிடப்பார்களா? அவர்கள் எழவில்லையெனினும், விழுந்து கிடப்பவர்களைப் பார்த்து கொஞ் சம் பேராவது எழுந்து வருவார்களா? சுயமரியாதைக்கும் இந்துத்துவாவினருக் கும் கொஞ்சமேனும் தொடர்பு இருக்குமா... பார்ப்போம்!
- குப்பைக் கோழியார்
No comments:
Post a Comment