ஹிந்தி திணிப்பு என்பது தேசிய நீரோட்டத்துக்கு எதிரானதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

ஹிந்தி திணிப்பு என்பது தேசிய நீரோட்டத்துக்கு எதிரானதே!

டில்லியில் நடந்த ஹிந்தி மொழி வளர்ச்சி ஆலோசனைக் குழு கூட்டத்தில்,  ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றுப் பேசும் போது,  “ஹிந்தி மொழியின் முதன்மையைப் புரிந்து கொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை  ஹிந்தி வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்குப் பயன்படுத்தலாம்.

ஆனால் ஹிந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நாம் அனைவரும் நமது தேசியத் தன்மையை வடிவமைக்க உதவும் ஒரு மொழியாக ஹிந்தியைப் பயன்படுத்துவோம். ஒன்றிய சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரப் பூர்வப் பணிகளில் ஹிந்திப் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அலுவல் மொழியான ஹிந்தியைப் பரப்புவதற்கும், ஆண்டுத் திட்டத்தில் உள்ள இலக்குகளை நிறைவேற்றுவதற்கும், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையால் ஒப்படைக்கப்பட்ட பொறுப் புகளை நிறைவேற்றுவதிலும் உறுதியுடன் உள்ளது.நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக ஹிந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது.”  என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே தேசிய மொழிகள் தான்  ஆனால் அம்மொழிகளை மக்கள் தொடர்பு மொழிகள் மட்டுமே என்று சிறுமைப்படுத்தி உள்ளார் ஒன்றிய அமைச்சர்.  மேலும் ஹிந்தியை தேசிய ஒருமைப்பாட்டிற்கான மொழி என்று தொடர்ந்து கூறி அதைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள், வங்கம் உள்ளிட்ட இந்தோ - பர்மிய மொழிகள். பஞ்சாபி, உருது உள்ளிட்ட இந்தோ - அராபிய மொழிகள் போன்றவை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுவைதான். இதில் திராவிட மொழிகள் இம்மண்ணின் மைந்தர்களுக்கான மொழிகள் ஆகும். 

200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக உருது, சமஸ்கிருதம், கடிபோலி மற்றும் கங்கைச் சமவெளியின் வட்டார மொழிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மொழிதான் ஹிந்தி. இந்த மொழிக்கென்று இலக்கியம், இலக்கணம் ஒன்றுமே கிடையாது, இந்த ஆண்டு ஒரு சொல் வரி வடிவத்தில் மாற்றப்படுகிறது என்றால் அடுத்த ஆண்டு வேறு வரி வடிவத்தில் அதே சொல் பயன்படுகிறது, இவ்வாறு குழப்பமான மொழிபாகுபாட்டைக் கொண்ட ஒருமொழியை தேசிய ஒருமைப்பாட்டுக்கான மொழி, இது வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு இந்தியாவை இணைக்கும் மொழி என்று எல்லாம் அரசமைப்புச்சட்டத்தின் படி உறுதிமொழி ஏற்று பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர் பேசுவது தவறானது ஆகும்.

1937இல் ஆட்சிக்கு வந்த ராஜகோபால ஆச்சாரியார் முதன் முதலாக சென்னை மாநிலத்தில் ஹிந்தியைத் திணித்தார். தந்தை பெரியார் தலைமை யில் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடே பொங்கி எழுந்தது.

"சமஸ்கிருதத்தை படிப்படியாகக் கொண்டு வருவதற்கே ஹிந்தியை முதற் கட்டமாகக் கொண்டு வந்துள்ளேன்" என்று இலயோலா கல்லூரியில் பேசும் போது  - 'எங்க ளப்பன் குதிருக்குள் இல்லை' என்ற முறையில் ராஜாஜி பேசியதுண்டு.

எப்பொழுதெல்லாம் ஹிந்தி தலை காட்டுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஹிந்தியை விரட்டியடித்த வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு.

ஒரு பக்கத்தில் தேசிய ஒருமைப்பாடு பேசிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் ஹிந்தியைத் திணிப்பது நாட்டைத் துண்டாக்கும் இடத்திற்குத் தான் கொண்டு செல்லும் - எச்சரிக்கை!

No comments:

Post a Comment