நாசிக், ஜூலை 10 - மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில கட்சிகளை பா.ஜ. கட்சி அழிக்கிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று அவரது உறவினரும், கட்சியில் பிளவு ஏற்படுத்தி பா.ஜ. அரசில் துணை முதலமைச்சர் பதவியை பெற்றவருமான அஜித் பவார் கருத்து கூறியிருந்தார்.
இது குறித்து சரத்பவார் கூறுகையில், ‘‘மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமரானார் என்பது தெரியுமா? நான் பிரதமராகவேண்டும் அல்லது அமைச்சராக வேண்டும் என்று விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டுமே விரும்புகிறேன்.
நான் சோர்வடையவோ, ஓய்வுபெறவோ இல்லை. யார் என்னை ஓய்வு பெற சொல்வது. நான் இன்னும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்” என்றார். நாசிக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், ‘மேனாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய், பிவி நரசிம்மராவ் ஆகியோரின் அரசியலைப் பார்த்திருக்கிறேன். எதிர்க் கட்சிகளைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் மவுனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
மாநில அளவிலான கட்சிகளை அழிக்க பா.ஜ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை வெவ்வேறு இடங்களில் செய்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு மக் களவை தேர்தலில் பெரும்பான்மையை உறுதி செய் வதற்காக மற்ற கட்சிகளை பிளவுபடுத்துவது பாஜவுக்குத் தெரியும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்’ என்றார்.
No comments:
Post a Comment